ஸத்யம், சிவம், ஸுந்தரம்
ஆனால் இந்த ஸுப்ரஹ்மண்ய நாமாக்களுக்கும் parent என்ற பெருமை ஸதாசிவம் என்பதற்குத்தான்!
த்வைதலோகத்துக்கு அப்பாற்பட்ட பரமதத்வமாக மட்டும் அது இருந்து விட்டால் அஞ்ஞானிகளான நமக்கு அதனால் என்ன ப்ரயோஜனம்? நமக்கும் பரம ப்ரயோஜனமாக அந்த அத்வைத ஆத்ம ஸ்வரூபமே அன்பு உருவமாகவும் இருக்கிறது. அன்பு நிஜமானதாக இருந்தால் அந்த அன்பில் நம் ஹ்ருதயம் உருகி, நாம் என்கிற அஞ்ஞான ஜீவ பாவம் உருகி, நமக்குப் பெரிசான ஒரு ஸாதனையாகத் தெரியாமலே, ஞானம், கீனம், ப்ரஹ்ம வித்யை, அத்வைதம் என்றெல்லாம் தெரியாமலே, அந்த அன்பு ஸ்வாமியுடன் ஒன்றாகி விவோம். அந்த அன்பே சிவம்.
பெரிசாகத் தெரியாததால், தெரிய வேண்டிய அவசியமும் இல்லாததால் அதற்கு ‘மஹா’ அடைமொழி இல்லை! பெரிய கார்யமாக இத்தனை லோகத்தையும் மாயையில் ஆட்டிக் கொண்டிருப்பவன் ‘மஹா’ போட்டுக்கொண்டு மஹேச்வரனாக இருந்தாலும், அநுக்ரஹத்தில் அன்பால் நம்மைத் தன்னில் கரைத்துக் கொண்டு சிவமாக இருக்கிறவன் ‘மஹா’ போட்டுக் கொள்ளவில்லை! ஆனாலும் அவனுக்குள்ளே நாம் கரைந்தது கரைந்ததுதான்; அதுதான் ஸதா காலத்துக்குமான ஸத்ய நிலை என்பதால் அவனுக்கு ‘ஸதா’ போட்டு ’ஸதாசிவ’ என்கிறோம்.
மற்ற ஸ்வாமிப் பெயர்கள் எதுவும் இப்படி எளிசாயிருக்கிற அன்பாலே என்றுமுள்ள ஸத்ய ஸாக்ஷாத்காரம் கிடைப்பதைச் சொல்லாததாலேயே அவை எதற்கும் ‘ஸதா’ போடவில்லை. அவற்றின் பெருமையை வைத்து சிலதுக்கு (சிலவற்றுக்கு) ‘மஹா’ போடுகிறோம். நம்மில் நாமாகக் கனிந்து, தன்னில் தானாக நம்மைக் கரைத்துக் கொள்கிற ரொம்பவும் கிட்டின உறவுக்காரனுக்கு அந்த ‘மஹா’ தேவையில்லை! அவனுடைய ‘யுனீக்’ உறவால், உறவும் போய் என்றைக்கும் ஒன்றாகச் செய்து கொள்வதால் ‘யுனீக்’ அடைமொழியாக ‘ஸதா’!
அது அன்பு ஆனாலும் ‘அன்பு’ என்றோ, ‘ப்ரேமை’, ‘ப்ரியம்’ என்றோ பெயர் வைப்பதாக்க் காணோம்! அன்பேதான் சிவமாச்சே! அதனால் ‘ஸதாசிவம்’ என்றே வைக்கிறோம்! அன்பிலே உண்டாவது ஆனந்தம். ‘ஆனந்தம்’ என்றும் தனியாகப் பெயர் வைக்காமல் அவனோடு சேர்த்தே ‘சிவானந்தம்’ என்று வைக்கிற வழக்கம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது. தற்காலத்தில் ‘ஆனந்த்’ நடமாடினாலும், இதுதான் வழி வழியாய் வந்த வழக்கு. இதுவும் ரொம்ப ரொம்ப உயர்திணை ந்யூடர்.
இன்னொன்று: சிவமான அந்த அன்புதான் அழகும்! அதனால் ஸுந்தரம் என்றும் பேர் வைக்கிறோம். எதனாலோ ‘சிவ ஸுந்தரம்’ என்று காணோம்! ‘சிவ’ என்கிறதே ஸுந்தரமாயிருக்க, சிவ ஸுந்தரன் என்பானேன்? என்று இருக்கலாம். சிவ ஸாம்யயமான குஞ்சிதபாதத்தை வைத்து ‘சிவபாதஸுந்தரம்’ என்று பெயர் வைப்பதைப் பார்க்கிறோம். அவனை அம்பாளோடு சேர்த்து ‘மீனாக்ஷிஸுந்தரம்’ என்று; அப்படிக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வந்த மாப்பிள்ளையாகக் ‘கல்யாணஸுந்தரம்’ என்று; மாப்பிள்ளை பெரிய அலங்காரமாகச் சூட்டிக் கொண்ட சந்திரனை வைத்து ‘ஸோமஸுந்தரம்’ என்று – இப்படியெல்லாம் பேர் வைக்கிறோம். ராமன் பூராத (புகாத) இடமில்லையாதலால் ‘ராமஸுந்தரம்’ என்றும்! க்ருஷ்ண பரமாத்மா மட்டும் விட்டு வைப்பானா? அவன் பேராக ‘மோஹன ஸுந்தரம்’; நம்முடைய மாயத்தைப் போக்கடிக்கிற மோஹம் அது! அதாவது, ஞானத்துக்கே மோஹமென்று இங்கே பெயர்! ‘ஞானஸுந்தரம்’ என்று கூடப் பெயர் இருக்கிறது. மறந்து விட்டேனே, சிவம் – ஷண்முகம் ஸம்பந்தம் பார்த்ததற்கேற்ப ‘ஷண்முக ஸுந்தர’மும் இருக்கிறது! ஸ்திரீகளிலுங்கூட ‘ஸெளந்தரம்’ என்று பேர் இருக்கிறது.
அன்புதான் அழகு என்பதால் இத்தனைக்கும் அடிப்படை அன்பே சிவம்தான்! அதனால்தான் அந்தப் பரமாத்மாவின் பெயராகத் தமிழ் ‘அன்பு’, ஸம்ஸ்கிருத ‘ஸுந்தரம்’ இரண்டையும் சேர்த்து ‘அழகு ஸுந்தரம்’ என்றே கூடப் பேர் வைக்கிறோம்!
ஏதோ ஸமீப காலத்தில்தான் ப்ரம்ம ஸமாஜிகள் ‘ஸத்யம்-சிவம்-ஸுந்தரம்’ என்று ‘ஸத்-சித்-ஆனந்தம்’ மாதிரியே பரம தத்வத்தைச் சொல்லும் ஒரு phrase-ஐ (சொற்றொடரை)க் கொடுத்திருக்கிறார்கள் என்றில்லை. இந்தத் தமிழ் தேசத்து மரபில் மற்ற எந்த பெயருக்கும் இல்லாத சிறப்பான சப்த ரூபத்தில், ஸத்யத்தையும் சிவத்தையும் சேர்த்து ‘ஸதாசிவம்’ என்றும், அந்த சிவமான அன்பின் அழகை ‘ஸுந்தரம்’ என்றும் பெயர்களாக வைப்பதிலேயே அந்தக் ‘கான்ஸெப்ட்’ நம்மிடையிலே நமக்கே தெரியாமல் தன்னியற்கையாக நெடுங்காலமாகவே இருந்திருக்கிற்தென்று தெரிகிறது.
ஸத்யமும் ஸுந்தரமுமான அந்த சிவம் – சிவமான அன்பு – லோகம் பூராவும் தழைக்கணும்! அதற்கு, அநுக்ரஹத்துக்கென்றே ஏற்பட்ட மூர்த்தியான ஸதாசிவ மூர்த்தி அநுக்ரஹிக்கணும்!