நமஸ்காரத் தத்வம்
நமோ நம: *
தமக்கு இல்லாத பாக்யம்
என்னைப் பெரியவனாக நினைத்து எல்லாரும் நமஸ்காரம் பண்ணுகிறீர்களென்றால் எனக்கும் நிஜமாகவே பெரியவர்களாக இருக்கப்பட்டவர்களை நமஸ்காரம் பண்ணணுமென்று நிறைய இருக்கிறது. ஆனால் ஸ்தானம் – ஜகத்குரு, பீடாதிபதி, இன்னும் பகவத்பாதாள் பெயரே வந்து சேர்ந்து விட்டதால் – அதுவும் – சின்ன வயஸிலேயே, ஒரு யோக்யதையும் இல்லாதபோதே வந்து சேர்ந்து விட்டதால், ‘பெரியவர்’ என்று நேரே நடமாடிக் கொண்டிருக்கிற இன்னொருத்தருக்கு நமஸ்காரம் பண்ணும் பாக்யம் அன்னியிலிருந்தே (அன்றிலிருந்தே) எனக்கு இல்லாமல் போய் விட்டது. ஊர் நமஸ்காரத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு, நாம் ஒருத்தருக்கும் நமஸ்காரம் பண்ணாமல் இப்படியொரு ஜம்ப ஜன்மாவா என்று இருக்கிறது.
** இவ்விஷயமாக ‘தெய்வத்தின் குரல்’ முதற் பகுதியில் ‘நமஸ்காரம்’; ஐந்தாம் பகுதியில் ‘குருமூர்த்தியும் திரிமூர்த்திகளும்’ என்ற உரையில் ‘நமஸ்காரமே செல்வம் : ஆசார்யாள் உணர்த்துவிப்பது’ என்பதிலிருந்து தொடரும் சில பகுதிகள்; நிகழ் (ஏழாம்) பகுதியிலேயே இதற்கு முந்தைய உரையான ‘குரு-சிஷ்ய உறவு’ என்ற உரை ஆகியவற்றிலும் பார்க்கலாம்.