நமஸ்கரிப்பவனே பாக்யசாலி மறுபக்கம், நமஸ்காரம் பண்ணுகிறானே, அவனைப் பார்த்தால் அவன் தான் பாக்யசாலி என்ற

நமஸ்கரிப்பவனே பாக்யசாலி

மறுபக்கம், நமஸ்காரம் பண்ணுகிறானே, அவனைப் பார்த்தால் அவன் தான் பாக்யசாலி என்று தெரிகிறது. என்ன பாக்யம் என்றால் பாரத்தைத் தள்ளி விட்டு அக்கடா என்று கிடக்கிற பாக்யம்! பெரியவர் என்று அவன் நினைக்கிற ஒருவருக்கு முன்னாடி தன்னுடைய உடம்பைத் தள்ளி நமஸ்கரிக்கிற போதே அவன், ‘இவர் நம்முடைய ஸமாசாரத்தைப் பார்த்துக் கொள்வார்’ என்று பாரத்தையும் தள்ளி விடுகிறான். “ந மம”, அதாவது “என்னுடையதல்ல” என்று தள்ளுவதே ‘நம:’ என்று ஆனதாகச் சொல்வதுண்டு. நிஜமான நமஸ்காரம் என்றால் அந்த பாவத்தில்தான் பண்ணியதாக இருக்கும்.

அநேகமாக, ரொம்பப் பேர் பண்ணும் நமஸ்காரம் அவ்வளவு நிஜமாக இல்லாமல், நூறு பெர்ஸென்ட் – பாஸ் மார்க் என்று முன்னே பிரித்துச் சொன்னேனே, அப்படி ‘பாஸ் மார்க் நமஸ்கார’மாகத்தான் இருக்கும்! அப்படி இருக்கும் போதுகூட நமஸ்காரம் பண்ணும் அந்த ஸமயத்திலே மட்டுமாவது அவன் பாரத்தைத் தள்ளி விட்டு ஹாயாக இருப்பவனாகத்தான் இருப்பான். ப்ரத்யக்ஷத்தில் அப்படித்தான் தெரிகிறது.

இந்த மாதிரி பாரத்தைத் தள்ளி லேசாகி, எளிசாகி ஒருத்தருக்கு முன்னே நமஸ்கரித்துக் கிடக்கிற பாக்யம் எனக்கு பால்யத்திலேயே போய் விட்டது! பறிபோய் விட்டது! ‘ஸ்தானம்’ வந்து பாக்யத்தைப் பறித்துக் கொண்டு போய் விட்டது!