துறவி நமஸ்கரிப்பது
நிஜ ஸந்நியாஸியாயிருந்தால் – ஜீவன்முக்தன் என்றேனே, அப்படிப்பட்டவனாயிருந்தால் – அவன் நமஸ்காரம் பண்ணுவதையும் பண்ணாததையும் பற்றிப் பொருட்டாகவே நினைக்கமாட்டான். இவனுக்குப் பிறத்தியார் நமஸ்காரம் பண்ணுவது, இவன் தானே பிறத்தியாருக்கு நமஸ்காரம் பண்ணுவது என்கிற இரண்டையுமே ஒரு விஷயமாக நினைக்க மாட்டான். ஏனென்றால் அவனுக்குத் தான் – பிறத்தியார் என்ற பேதமே தெரியாது. எல்லாம் ஒன்றேயான ப்ரஹ்மமாகவே இருக்கும். அப்படியிருக்கும் போது –
”ப்ரணமேத் கம்?”
“யாரை நமஸ்காரம் பண்ணுவது?”
இப்படி ஆசார்யாள் கேட்கிறார்*;
நாமாதிப்ய: பரே பூம்நி ஸ்வராஜ்யே சேத் –ஸ்திதோ (அ)த்வயே|
ப்ரணமேத்-கம் ததாத்மஜ்ஞோ ந கார்யம் கர்மணா ததா ||
(ஸ்லோக தாத்பர்யம்: ) இரண்டாவதாக ஒரு வஸ்து இல்லாத ஆத்மாவைத் தெரிந்து கொண்டு, பேர் ஊர் எல்லாம் கடந்த நிஜமான அந்த ஸ்வராஜ்யத்தில் நிலை கொண்டு விட்டவனுக்கு கர்மத்தால் ஆவதென்ன? கர்மா என்கிற எல்லாமே வெளி வஸ்து குறித்து ஆனதுதானே? இவனுக்கு வெளியிலே ஆஸாமியோ வேறே அசேதனமோ எதுவும் இல்லாதபோது கர்மாவால் இவனுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை தானே? அங்கே யாருக்கு இவன் நமஸ்காரம் பண்ண?
*‘உபதேச ஸாஹஸ்ரி’, 17.64
ஆனால் அப்படிப்பட்ட ஸென்ட் பெர்ஸென்ட் ஸந்நியாஸிகள் அபூர்வமாகத்தான் இருப்பார்கள். ஆத்மாநுபூதிக்காக முயற்சி பண்ணிக் கொண்டிருப்பவர்களாகவோ, இல்லாவிட்டால் அவ்வப்போது அந்த நிலை வந்து தொட்டுக்கொண்டிருப்பவர்களாகவோதான் பெரும்பாலான ஸந்நியாசிகள் இருப்பார்கள். அதனால் இவர்கள் ஸ்வாமிக்கு, அநேக தேவதாமூர்த்திகளுக்கு, பூர்வாசார்யர்களுக்கு எல்லாம் நமஸ்காரம் பண்ணத் தடையில்லைதான்.
ஆனால் இங்கேயும் கூட இரண்டொரு ‘எக்ஸெப்ஷன்’ தவிர சரீரத்தை பூமியிலே தள்ளி நமஸ்காரம் பண்ண எங்களுக்கான சாஸ்த்ரம் இடம் கொடுக்கவில்லை. ‘தண்ட வந்தனம்’ என்பதாக எங்களுடைய தண்டத்தை ஒரு மாதிரி அஞ்ஜலியில் சுற்றி அதனால் தொட்டே நமஸ்காரம் பண்ண வேண்டும்.