துறவியின் தண்டம் எங்களுக்கு தண்டம் எதற்கென்றால் அதுவும் மனஸை வசப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்குத்

துறவியின் தண்டம்

எங்களுக்கு தண்டம் எதற்கென்றால் அதுவும் மனஸை வசப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்குத்தான். அடித்து, அடக்குவதற்கு ஆயுதமாக தண்டத்தை (கழியை) உபயோகிக்கிறோமல்லவா? தண்டாயுதம், தண்டாயுதபாணி என்கிறோமே! ‘தண்டனை’ என்ற வார்த்தையே ‘தண்ட’த்திலிருந்து வந்ததுதான். ஜனங்கள் தப்பு வழிகளில் போகாமலும், சத்ருக்கள் தலைதூக்காமலும் அடக்கி ஆளுவதே ராஜாங்கத்தின் முக்ய கார்யமாகையால் அரசியல் சாஸ்திரத்திற்கே ‘தண்ட நீதி’ என்றுதான் பெயர். அந்த ரீதியிலே எங்கள் மனஸை அடக்கி வைத்துக் கொள்வதற்கு ‘ஸிம்ப’லாக, ரூபகமாக எங்களுக்கு தண்ட தாரணம் விதித்திருக்கிறது. ‘ஸிம்பல்’ மட்டுமில்லை; அபிமந்த்ரணம் பண்ணி (மந்திரத்தால் சக்தியூட்டி) ஒரு குரு அநுக்ரஹிக்கிற போது, மனோநிக்ரஹத்திற்கு ஸஹாயம் செய்கிற சக்தி தண்டத்திற்கு நிஜமாகவே உண்டாகிறது.

விஞ்ஞானத்தில் கண்டு பிடித்துள்ள யந்த்ரங்களுக்கு (இயந்திரங்களுக்கு) ஆச்சர்யமான சக்தி வெளி லோகத்தில் இருக்கிற மதிரி மந்த்ரங்களுக்கு உள்லோகத்திலே உண்டு. கையால் தொட்டால் ‘ஷாக்’ அடிக்கிற மின்ஸாரக் கருவிகளைக் கழியால் தொடலாம்தானே? அந்த மாதிரி இந்த்ரிய ஷாக் அடிக்காமல் எங்களை ரக்‌ஷிக்க இந்த உபகரணம். ரேடியோ அலைகளை ஏரியல் பிடிக்கவில்லையா? Lightning rod இடியே தாக்காமல் மின்ஸாரத்தைப் பிடித்து விடவில்லையா? அப்படித்தான் இதுவும், எங்கள் விஷயத்தில் மனஸுக்கு அடையாளம், கவசம் இரண்டுமாக தண்டமே இருப்பதால் மனஸை பகவானிடத்தில், பெரியோரிடத்தில் ஒப்புவிக்கிறதற்கு அடையாளமான நமஸ்காரத்தையும் இதைக் கொண்டே நாங்கள் செய்கிறோம். ஆனாலும், ‘நிலம் தோய’ என்பார்கள். அப்படி பூமியோடு பூமியாக, சரீரத்தைக் கிடத்திவிட்டுக் கிடப்பதில் ஸைகலாஜிகலாக உண்டாகிற விநய பாவம், அந்த ‘ஹாய்’ இதில் இல்லைதான்!