தமது துரதிருஷ்டம்

தமது துரதிருஷ்டம்

அப்படிப்பட்ட உணர்ச்சியைப் பெற்று லேசாகிற பாக்யம் எனக்குச் சிறு வயஸிலேயே பறிபோய் விட்டது! ‘ஸ்தான’ கெளரவம் ஒரே பளுவாக உள்ளே பூந்து அமுக்கும்போது லேசாவது எப்படி?

மற்ற ஸந்நியாஸிகளுக்கெல்லாம் இல்லாததாக இதில் எனக்கென்று (”எனக்கு..ன்னு” என்று அர்த்தபுஷ்டியுடன் இழைத்துக் கூறுகிறார்) இரண்டு ‘அன்லக்கி ப்ரைஸ்’கள் (துரதிருஷ்டப் பரிசுகள்!) என்னவென்றால் ஸந்நியாஸிகளும் தங்களை விடப் பெரியவர்களான மற்ற ஸந்நியாஸிகளுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பொது விதி. இதில் ஒரு வித்யாஸமான அம்சம் என்னவென்றால், ஸந்நியாஸிகளில் யார் பெரியவர் என்று வயஸை வைத்துக் கணக்குப் பண்ணுவதில்லை. ஒருத்தர் எத்தனை வருஷம் வ்யாஸ பூஜை பண்ணியிருக்கிறார் என்பதை வைத்தே கணக்கு.

ஒவ்வொரு ஸந்நியாஸியும் ஆஷாட பூர்ணிமை*யில் வ்யாஸ பூஜை பண்ண வேண்டும். அந்த ரீதியில், இருபது வயஸில் (ஸந்நியாஸ) ஆச்ரமம் வாங்கிக் கொண்ட ஒருவர் முப்பது வயஸில் பத்து பூஜை பண்ணியிருப்பார். இவருக்கு 25 வயஸாகிற போது, ரிடையரான ஒரு 55 வயஸுக்காரர் ஆச்ரமம் வாங்கிக் கொள்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். இவர் பத்து வ்யாஸ பூஜை முடிக்கும் போது அந்த வ்ருத்தர் ஐந்துதான் முடித்திருப்பார். அப்போது அந்த இரண்டு பேரும் ஸந்தித்தால் முப்பது வயஸுக்காரர்தான் ஜாஸ்தி வ்யாஸ பூஜை முடித்தவரென்பதால் அவருக்கே அறுபது வயஸுக்கார வ்ருத்த ஸந்நியாஸி நமஸ்காரம் பண்ண வேண்டும்.

*நம்முடைய ஆனி மாத அமாவாசையை அடுத்து வரும் பெளர்ணமி.

ஆனாலும் என் விஷயத்திலோ…. நான் ஸ்வாமிகளான அப்புறம் என்னைவிட ரொம்ப வருஷம் ஜாஸ்தி வ்யாஸ பூஜை பண்ணியுள்ள அநேக ஸந்நியாஸிகளை ஸந்தித்திருக்கிறேன். ஆனாலும் நான் அவர்களுக்கு நமஸ்கரிப்பது என்பது இல்லாமல் நேர்மாறாகவே நடந்திருக்கிறது. காரணம், ‘ஜகத்குரு’ டைட்டில்! “ஜகத்தெல்லாம் நமக்கு குரு” என்று தான் நான் அதை அர்த்தம் பண்ணிக் கொண்டிருந்தாலும், வெளி நடவடிக்கையிலே, ‘ஜகத்குருவுக்கு ஜகத்து பூராவும் சிஷ்ய வர்க்கம்; சிஷ்யருக்கு நமஸ்காரம் என்பது மனஸாலேயும் நினக்கப்படாதது’ என்ற மடத்துச் சட்டத்தைத்தானே மதித்து நடக்கணும்? ஆகையினாலே யதிகளிலேயும் எனக்குப் பெரியவர்கள் என்று நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ண முடியாமலாயிற்று!

இதைவிட இன்னொரு துர்பாக்யம் – ‘என்க்கென்று’ வாய்த்த துர்பாக்யம்: ஜகத்குரு பட்டம் கட்டிக் கொண்ட மற்ற ஸந்நியாஸிகளும் தங்களுக்குப் பட்டம் கட்டின குரு ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம் செய்திருப்பார்கள் – யதேஷ்டமாகவே செய்திருப்பார்கள். இங்கே (தம்மையே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்) அதற்கும் கொடுத்து வைத்திருக்கவில்லை. கதை உங்களுக்கே தெரிந்திருந்தால் ஸரி.*

*ஸ்ரீ மஹா பெரியவர்களை அடுத்த பட்டமாக சங்கற்பித்த பூர்வாசாரியர் மஹா ஸமாதி அடைந்த பின் தான் இவர் அவரிருந்த இடத்திற்குச் சென்று பட்டமேற்க முடிந்தது. ஆகையினால் ஸ்ரீசரணர் துறவறம் மேற்கொண்ட நாளிலிருந்து அவருக்கு ஸ்தூலத்தில் குரு என்று ஒருவர் இருக்கவில்லை. ஆச்சரியமாக, ஏறக்குறைய ஸமகாலத்தில் பட்டமேற்ற சிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளின் விஷயத்திலும் இவ்வாறே நடந்தது.