பணிவுப் பண்பு வளர
”இருக்கட்டுமே, அதிலென்ன விசேஷம்?” என்றால் – ரொம்ப விசேஷம் இருக்கிறது. இந்த மரியாதை உணர்ச்சிதான் விநயம், பணிவு என்று சொல்கிற உசந்த பண்பை வரவழைத்துத் தருகிறது. ‘அடி பணிந்து’ என்றே நமஸ்காரத்தைச் சொல்கிறோம். இந்தப் பணிவு நன்றாக மலர்ச்சி பெற்று ப்ரகாசிப்பது, ஏனைய பக்தி பாவ பூஜை புரஸ்காரங்களை விடவும் மரியாதையுணர்ச்சியோடு பண்ணுகிற நமஸ்காரத்தில்தான். ஒரு பெரியவருக்கு முன்னாடி பூமியிலே சரீரத்தைத் தள்ளி நமஸ்கரிக்கும் போது இந்த விநயத்துக்கு நன்றாக ரூபகம் கொடுத்து அநுபவித்து ஸந்தோஷப்பட முடிகிறது. அந்த (விநய) மனோபாவத்திற்கு இந்த (நமஸ்கார) க்ரியை ரூபகமாக மட்டுமில்லாமல் இந்த க்ரியையே அந்த பாவம் மேலும் மேலும் வ்ருத்தியாவதற்குப் புஷ்டியும் தருகிறது.
எத்தனையோ காலமாக, யுகங்களாக இந்த மாதிரி நமஸ்கரிப்பது என்பதை நம்முடைய பூர்விகர்கள் செய்து வந்திருக்கிறார்களல்லவா? அதனால் அவர்களுடைய பணிவான எண்ணம் அந்த (நமஸ்கார) கார்யத்திற்குள் ஊறி ஊறி, கார்யத்திற்குள்ளேயே (பணிவு என்ற) பாவத்தை பலமாக ஊட்டியிருக்கும். அவர்கள் வழியிலே வந்த நாம் இந்தக் காரியத்தைச் செய்கிற போது பஹுகால பிதிரார்ஜிதமாக அந்த பாவமும் நாமறியாமலே நமக்குக் கொஞ்சமாவது ஏற்படும். Heredity (பாரம்பரியம்) race consciousness (ஓர் இனத்திற்கான பொது உணர்வு) என்றெல்லாம் நவீனப் படிப்பாளிகளும் ஒப்புக் கொள்கிறார்களே!