தலைக் கனம் குறையத் தலையால் வணங்குவது
உலகம் சிரிப்பது, ச்லாகிப்பது இருக்கட்டும். ஆத்மார்த்தமாக ஒருத்தனுக்கு எது நல்லது? எப்படி இருந்தால் அவனுக்கு உள்ளூர ஒரு நிறைவு, நிம்மதி ஏற்படுகிறது? பாரம் தூக்கினால் நிம்மதியா, அதை இறக்கிப் போட்டால் நிம்மதியா? பாரம் என்றால் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் ஏற்படுகிற கஷ்டங்களின் பாரம் மட்டுமில்லை. பெரிய பாரம் அஹம்பாவந்தான்’ தற்பெருமைதான். அதை இறக்கினாலே நிரந்தர நிம்மதி. அப்படி இறக்குவதற்கு ஸஹாயம் செய்யும் க்ரியைதான், ஒரு மநுஷ்ய சரீரத்தில் பூமிக்கு ரொம்ப எட்டத்திலிருக்கிற சிரஸை ஒரே இறக்காக, மற்ற அவயவங்களுக்கு ஸமஸ்தானத்தில் இறக்கி பூமியோடு பூமியாகப் போட்டு நமஸ்கரிப்பது! “சிரஸே ப்ரதானம்” என்ற பெருமையை த்யாகம் பண்ணி, அதையும் எண்சாணில் ஒன்றாகவே எளிமைப்படுத்தும் க்ரியை! பிறத்தியார் இறக்கினால் அவமானம்; நாமே இப்படித் தலையை இறக்கினாலோ பஹுமானம் (வெகுமானம்)! விநய ‘ஸம்பத்து’ என்றே சொல்லும் வெகுமதி! தலைக் கனம், மூளைப் பெருமை போகவே தலையால் நமஸ்கரிப்பது! “தலையே நீ வணங்காய்!” என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியதும்.