ஸாஷ்டாங்க நமஸ்காரம் இதற்கே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்று பெயர் ‘ஸாஷ்டாங்க’ என்றால் ‘எட்டு அங்க

ஸாஷ்டாங்க நமஸ்காரம்

இதற்கே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்று பெயர்.

‘ஸாஷ்டாங்க’ என்றால் ‘எட்டு அங்கங்களோடு கூடிய’ என்று அர்த்தம். நம்முடைய எட்டு அங்கங்கள் பூமியில் படுகிற விதத்தில் நமஸ்கரிக்கிறதே ‘ஸாஷ்டாங்க நமஸ்காரம்’.

பொதுவாக இந்த எட்டு அங்கங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்: முன்னந்தலை, தோள் இரண்டு, கை இரண்டு, வக்ஷமும் (மார்பும்) வயிறும் சேர்ந்த torso என்கிற கபந்த பாகம், கால் இரண்டு ஆகிய எட்டு அங்கங்கள் நிலத்தில் படுவதால், படிவதால் ‘ஸ அஷ்ட அங்கம் – ஸாஷ்டாங்கம்’ என்று பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அஷ்ட அங்கங்கள் என்னென்னவென்று வேறே எப்படியெல்லாம் பல தினுஸாகச் சொல்லியிருக்கிறது என்று ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதில் ஒரு தினுஸுப்படி தலை, மோவாய் (முகவாய்க்கட்டை) காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என்று எட்டு கணக்குச் சொல்லியிருக்கிறது. – அதாவது நெற்றியின் உச்சி பாகக் கபாலம் – பூமியில் படும்போது மோவாய்க் கட்டையும் படுவது என்றால் முடியாது. ஒரு ஸமயத்தில் இரண்டில் ஒன்றுதான் படமுடியும். அது மாத்திரமில்லை, தலையோடு கால் குப்புறக் கிடக்கும்போது காது எப்படி பூமியில் பட முடியும்? ஆகையினால் இங்கே ஒரு ஸமயத்தில் இல்லாமல், அடுத்தடுத்துச் செய்கிற பல கார்யங்களை ஒன்று சேர்த்து எட்டு அங்கம் பூமியில் படுவதே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்ற க்ரியையாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

அந்தப் பல கார்யங்களில் எல்லாருக்கும் தெரிவது – என்னென்னவென்றால்: தலையைப் பூமியில் படவிட்டுக் குப்புறவிழுவது! சரீர ஸமர்ப்பணமே நமஸ்காரமென்றால், சரீரம் என்கிறபோது குறிப்பாக மார்பும், வயிறும் சேர்ந்த கபந்த பாகத்தைத்தான் நினைக்கிறோம். ஹ்ருதயம், ச்வாஸ்கோசம், ஜீர்ண உறுப்புக்கள் எல்லாம். அதோடு முதுகெலும்பும் உள்ள ஜீவமூலமான பாகம் அதுதானே! மூளையை அஹம்பாவ மண்டை கனம் ஏறாமல் இறக்க சிரஸை இறக்குகிறோம் என்றால், ஜீவனுக்கு ஜீவன் தருகிற சரீரத்தை – கபந்தத்தையும் – கீழே போடத்தான் வேண்டும். அது முக்யம். ஆனால் இப்போது நான் சொன்ன கணக்கில் அதைச் சேர்க்கக் காணோம்!

இதேமாதிரி, கபந்த பாகத்தோடு இரண்டு காலையுங்கூட விட்டுவிட்டு இன்னொரு கணக்கும் கொடுத்திருக்கிறது. அதன்படி கை என்று ஒரே பாகமாக நான் சொன்னதை புஜம் (arm) என்றும் ஹஸ்தம் (hand) என்றும் காட்டியிருக்கிறது.

இன்னும் பல தினுஸாகவும் சொல்லியிருக்கிறது. படித்தால் ஒரே குழம்பலாக ஆகும்.  ‘நமஸ்காரத்தில் இத்தனை தினுஸா? எதைப் பண்ணுவது?” என்று குழம்பிக் கொண்டு (சிரித்து) ’நமஸ்காரத்தின் திசைக்கு ஒரு நமஸ்காரம்!” என்று ஓடிப் போய்விடத் தோன்றலாம்!

ஆனபடியால் பேச்சு இழுத்துக் கொண்டு போனதில் இதுவரை நான் ஸாஷ்டாங்க விஷயமாகச் சொன்ன தினுஸுகளை மறந்து விடுங்கள். இப்போது, ஸம்ப்ரதாயமறிந்த பெரியோர்கள் எப்படிப் பூர்வ சாஸ்த்ர ஆதாரப்படி எட்டு அங்கங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்களோ அதைச் சொல்கிறேன். அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பூர்வ சாஸ்த்ரங்களில் இரண்டில் இந்த எட்டு அங்கங்களில் ஏழு அங்கங்களை ஒரே மாதிரி சொல்லியிருக்கிறது.

ஒன்று வ்யாஸ ஸ்ம்ருதி. அதில்

தோர்ப்யாம் – பத்ப்யாம் – ஜாநுப்யாம் – உரஸா – சிரஸா த்ருசா |

மனஸா – வசஸா சேதி ப்ரணாமோ(அ)ஷ்டாங்கமீரித ||

என்று இருக்கிறது.

இன்னொன்று, பரமேச்வர ஆராதனையில் விசேஷமாக உள்ள ‘மஹா ந்யாஸ’த்தில் உமா-மஹேச்வரர்களை எப்படி நமஸ்காரம் பண்ணுவது என்பதற்கு ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்கில் சொல்லியிருப்பது:

உரஸா-சிரஸா-த்ருஷ்ட்யா-வசஸா-மனஸா ததா |

பத்ப்யாம்-கராப்யாம்-கர்ணாப்யாம் ப்ரணாமோ(அ)ஷ்டாங்க உச்யதே||

முதலில் சொன்னதன்படி வரிசை க்ரமமாக 1) கை, 2) பாதம், 3) முழங்கால் முட்டி, 4) மார்பு, 5) தலை, 6) கண், 7) மனஸ், 8) வாக்கு என்பது எட்டு அங்கங்கள்.

இரண்டாவதாகச் சொன்னதில் முழங்கால் இல்லை. அதற்குப் பதில் காது இருக்கிறது. வரிசைப்படி அவற்றை ச்லோகத்தில் 1) மார்பு, 2) தலை, 3) கண், 4) வாக்கு, 5) மனஸ், 6) கால், 7) கை, 8) காது என்று சொல்லியிருக்கிறது.

இரண்டு ச்லோகங்களிலும் மனஸ், வாக்கு, கண் என்ற மூன்றைச் சொல்லியிருக்கிறது. இங்கே கேள்வி வருகிறது. ‘உடம்பையே சேர்ந்த எட்டு அங்கங்களை பூமி படப் போடுவதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மனஸும் வாக்கும் எப்படிச் சேரும்? கண் உடம்பைச் சேர்ந்த அங்கந்தான் என்றாலும் அதை எப்படி பூமியில் படும்படிப் பண்ணுவது?” இப்படிக் கேள்வி.

இதற்குப் பதில், இந்த மூன்றும் க்ரியையாய், கார்யமாக இல்லாமல் பாவமாக நம் எண்ணத்தில் இருக்க வேண்டியவை. மனஸை நாம் நமஸ்கரிக்கும் பெரியவரிடம் தாழக் கிடத்த வேண்டும். வாக்கையும் அப்படியே. கண்ணிலே அவர் ஸ்வரூபத்தை நிறுத்தி அதையும் அவருக்குப் பணியச் செய்ய வேண்டும்.

பாவனையான இந்த மூன்று அங்கங்களைத் தள்ளி விட்டால், பாக்கியுள்ள – வாஸ்தவத்திலேயே அங்கம் என்று ஸ்தூலமாக இருக்கப்பட்ட – ஐந்து மிஞ்சுகின்றன.

ஒரு கணக்கின்படி இந்த ஐந்து 1) கை, 2) பாதம், 3) முழங்கால், 4) மார்பு, 5) தலை. இன்னொன்றின்படி 1) மார்பு, 2) தலை, 3) கால், 4) கை, 5) காது.

இவற்றிலே ஒன்றில் முழங்காலையும், அதை மாற்றி இன்னொன்றிலே காதையும் சொல்லியிருக்கிறது.

இப்படி ஐந்து ஐந்தாக இரண்டு இருப்பதில் நமக்குத் தலையும், மார்பும் ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. முதல் கணக்கில் வரும் பாதம் என்பதை foot என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கணும். அதாவது கணுக்காலுக்குக் கீழே விரல்களோடு உள்ள பாகம் என்று மாத்திரம். அந்தப் பாதம், முழங்கால், கை ஆகிய ஒவ்வொன்றும் இரண்டிரண்டு இருக்கின்றன. ஆக ஒரு தலை, ஒரு மார்பு, இரண்டு பாதங்கள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கைகள் என்று மொத்தம் கூட்டினால் நமஸ்காரத்தில் பிரயோஜனப்படுகிற எட்டு ஸ்தூலமான அங்கங்களே கிடைத்து விடுகின்றன!

இன்னொரு கணக்குப்படி முழங்காலை தள்ளி விட்டுக் காதை எடுத்துக் கொண்டோமானாலும் நமக்கு இரண்டு காதுகள் இருக்கின்றனவே! ஆகையினால் இங்கேயும் அஷ்டாங்கம் என்ற கணக்கு, நமஸ்கார க்ரியையில் நாம் ஸ்தூலமாகப் பயன்படுத்தக்கூடிய எட்டு சரீர உறுப்புக்களாக இருக்கின்றன.

இரண்டிலும் ‘உரஸ்’ என்று வருவது வக்‌ஷ (மார்பு) ப்ரதேசத்தை மட்டும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலேயே வயிறும் சேர்ந்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வக்ஷம் பூமியில் படிய நமஸ்கரித்தால் வயிறும் பூமியிலே பட்டுத்தான் ஆக வேண்டும். அதைத் தனிப்படச் சொல்லவேண்டியதில்லை. அதனாலேயே, கபந்த பாகம், torso என்றேனே, அந்த முழு பாகத்தையுமே உரஸ் என்பதாக இந்த இரண்டு ச்லோகங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு ச்லோகத்தையும் சிஷ்டர்கள் (மேலோர்) எடுத்துக் கொண்டாலும், இந்த இரண்டிலும் கூடப் பின்னால் சொன்னேனே, காதைச் சேர்ந்த ச்லோகம், அதைத்தான் விசேஷமாகப் போற்றி நடைமுறையிலும் செய்கிறார்கள்.

முதல் ச்லோகம், இரண்டாவது ச்லோகம் இரண்டிலுமே பாதங்களை ‘பத்ப்யாம்’ என்று சொல்லியிருக்கிறது. ஆனால் முதல் ச்லோகத்தில் அதை foot ஓடு முடித்திருக்கிறது. முழங்கால்களை ‘ஜாநுப்யாம்’ என்று சொல்லியிருக்கிறது. இரண்டாம் ச்லோகத்தில் அதே ‘பத்ப்யாம்’ என்ற வார்த்தையால் இடுப்புக்குக் கீழேயிருந்து கால் விரல்கள் வரை உள்ள leg என்ற முழு அவயவத்தையும் குறிப்பிட்டிருக்கிறது. இப்படி அந்த பாகம் முழுதையும் சொன்னதால்தான் இங்கே தனியாக முழங்காலை மறுபடிச் சொல்ல வேண்டியதில்லை என்பதால் அதைத் தள்ளி, குறைகிற அந்த அவயவத்துக்குப் பதிலாகக் காதைச் சேர்த்திருக்கிறது. இதைத்தான் சாஸ்த்ரஜ்ஞர்கள் விசேஷமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றேன்.

சாஸ்த்ர ரீதியில் காது ரொம்ப முக்யமான அங்கம். ஸகல சாஸ்த்ரத்துக்கும் மூலமான வேதமே ‘ச்ருதி’ என்பதாகக் காதால் கேட்டு அப்யாஸம் பண்ண வேண்டியதாகத்தானே இருக்கிறது? பஞ்ச பூதங்களின் உச்சியிலுள்ள ஆகாச தத்வத்துக்கே உரியதான சப்தம் என்ற தன்மாத்ரையை க்ரஹிப்பது காதுதான் என்ற பெருமை அதற்கு இருக்கிறது. காதில் கங்கை இருக்கிறாள் என்று ஐதிஹம். அதனால்தான் ப்ராணாயாமம் முடிகிற இடத்தில், மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கிற கையில் வெளி ச்வாஸத்தில் அசுத்தம் பட்டுவிடுகிறது என்பதால் அதை சுத்தி செய்து கொள்ள கங்கை இருக்கிற அவயவமான காதை அந்தக் கை விரலால் தொட்டுக் கொள்வது.

”ஸரி, நமஸ்கார க்ரியையில் காது பூமியில் படும்படி எப்படிப் பண்ணுவது?”

அதைச் சொல்வதற்கு நமஸ்காரம் என்பதை ஆரம்பத்திலிருந்து எப்படிப் பண்ண வேண்டும் என்று procedure சொல்ல வேண்டும். அதுவும் அவசியம் சொல்ல வேண்டியதுதானே? பெரியவர்கள் காது உள்பட அஷ்டாங்கங்களால் எப்படி நமஸ்க்ரிக்கிறது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், அதன்படி:

ஸாஷ்டாங்க நமஸ்காரமாக சரீரத்தைக் கிடத்தும் போது தலையில் நெற்றிக்கு மேல் பகுதியை பூமியில் பதியும்படி வைத்து, மார்பு-வயிற்றுப் பிரதேசங்களும் அப்படியே பதியுமாறு இருக்கவேண்டும். அப்போது தானாக கால் பாகம் முழுவதும் தரையில் படிந்து விடும். அப்புறம் வலது கையை முழு நீளமும் முன் பக்கமாக முகத்தின் வலது பக்கத்துக்கு parallel-ஆக (இணையாக) நீட்ட வேண்டும். இடது கை தோளிலிருந்து முழங்கை வரை ஒட்டியிருக்குமாறு பதித்து முழங்கைக்குக் கீழ்பாகத்தை மேற்புறமாக மடிக்க வேண்டும். இந்த நிலையில் உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து பூமியைத் தொட்டபடி இருக்க வேண்டும். அதற்கப்புறம் இதையே மாற்றி இடது கையை முகத்துக்கு இடப் பக்கமாக முன்னால் நீட்டி, வலது கையை உடம்போடு பின்னால் சேர்த்தாற்போலப் பின்னால் மடித்து நீட்ட வேண்டும். அப்புறம் இரண்டு புஜங்களும் நன்றாக பூமியில் படுகிற மாதிரி இரண்டு கைகளையும் பின் பக்கம் தொடை வரைக்கும் நீட்டி அந்தப் பகுதியோடு ஒட்டினாற்போல் வைத்திருக்க வேண்டும். அதாவது கையை முன் பக்கம் நீட்டுகிற போது உள்ளங்கை பூமியில் படுகிறபடியும், பின் பக்கம் நீட்டும்போது பூமியைத் தொடாமல் தொடைப் பகுதியை ஒட்டியிருக்கும்படியும் பண்ண வேண்டும்.

இதற்கப்புறம்தான் காது ஸமாசாரம் வருகிறது.

சிரஸ் மார்பு-வயிறு ப்ரதேசங்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் எல்லாம் இப்படி தண்டாகாரமாக (கழியைப் போல்) கிடக்கிறவர், இப்போது முகத்தை மாத்திரம் வலது பக்கமாக ஒருக்களித்து, அந்தப் பக்கத்துக் காதை பூமியில் பதிக்க வேண்டும். அப்புறம் அதே போல் முகத்தை இடது பக்கம் ஒருக்களித்து, இடது காதைப் பதிக்க வேண்டும்.

அதற்கப்புறம் இரண்டு கைகளையும் நன்றாக முன்னால் நீட்டி ஒன்று சேர்த்து அஞ்ஜலி  பந்தம் செய்ய (குவித்துக் கும்பிட) வேண்டும். அதோடு நமஸ்கார க்ரியை பூர்த்தியாகிறது.

இந்த மாதிரிப் பல அம்சங்கள் சேர்த்து நமஸ்காரம் பண்ணுவது ஆத்மாபிவிருத்திக்கு உபயோகமான விதத்தில் சரீர அவயவங்களைப் பல தினுஸில் நீட்டி, மடக்கி, திருப்பி எல்லாம் பண்ணுகிறது. இவற்றால் இது ஒரு தேஹாப்யாஸமே ஆகி, யோக சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற பல உத்தமமான நாடி சலனங்கள் ஏற்பட்டு ஆத்மாவுக்கு நல்லது பண்ணும். ‘ஸுர்ய நமஸ்காரம்’ என்று ஏகப்பட்டதாகப் பண்ணுவது சரீர ரீதியிலேயே எத்தனை பலம் கொடுக்கிறது?.....

டிஸ்க்ரிப்ஷனாக (வர்ணனையாக) நிறையச் சொல்லி விட்டேன். டெமான்ஸ்ட்ரேஷனாக (கண்காணப் பார்க்குமாறு செய்தல்)ப் பண்ணிக் காட்டினால்தான் புரியும். ஆனால் பண்ணுகிற பாக்யம்தான் எனக்கு இல்லையே! இங்கே யாருக்காவது பண்ணிக் காட்டத் தெரியுமா என்று பரீக்ஷை பார்த்து (சிரிக்கிறார்) அவமானப் படுத்துவதும் ஸபை மரியாதையில்லை! கார்யமாகப் பார்த்தால் ‘ஈஸி’யாக இருக்கும்! வாயால் சொன்னால் பெரிய புராணமாய் இருக்கிறது!

மனஸிருந்துவிட்டால் போதும். எத்தனை டீடெய்ல் இருந்தாலும் கேட்டுத் தெரிந்து கொண்டு பத்ததிப்படிப் பண்ணி ச்ரேயஸ் அடையலாம்.

வித்யாஸமாயும் ஒரு அபிப்ராயம்.

என்னதான் மனஸிருந்தாலும், பெரிய கூட்டங்களில் கையை முன்பின் நீட்டி மடிப்பது, முகத்தைத் திருப்பித் திருப்பிக் காதுகளைத் தரையில் பட வைப்பது எல்லாம் சிரமமில்லையா? அப்போது முதலில் நான் சொன்னபடி… பொதுவாகவும் ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறபடி-முன்னந்தலை, இரண்டு புஜங்கள் இரண்டு ஹஸ்தங்கள், torso, இரண்டு கால் என்றே ஸாஷ்டாங்கத்தை வைத்துக் கொண்டாலும் தப்பில்லை என்றே தோன்றுகிறது.

நமக்கென்று ஒன்றுமே இல்லை என்று கொட்டிக் கவிழ்த்துக் காலி பண்ணிக் கொண்டு எளிமையுடன் சரணாகதியாக் விழுகிறதிலேயே ரொம்ப டீடெய்ல் சேர்த்து காம்ப்ளிகேட் பண்ணாமலிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நமஸ்காரத்தில் க்ஷமாபன ப்ரார்த்தனையும் (மன்னிப்பு வேண்டலும்) இருக்கத்தானே செய்கிறது? ஆனபடியால் டீடெய்லில் ஏதாவது தப்பு இருந்தாலும் அதற்கும் பகவான் க்ஷமித்து விடுவான்.