தமிழ் அர்ச்சனை
அந்த ‘டாபிக்’கைத் தொட்டு விட்டதால் சுருக்கமாக முழுக்கவும் சொல்லி முடித்தும் விடுகிறேன்.
அந்த வடக்கத்திக்காரர் என்னிடம் சொன்னது என்னவென்றால் : மற்ற த்ராவிட ராஜ்யங்கள் – மாநிலங்கள் என்று சொல்கிறவை – அவை உள்பட தேசம் பூராவிலும் உள்ள எவருமே தாய்மொழியில் அர்ச்சனை என்று கேட்கவில்லை. இன்றைக்கு இந்த தேசத்தில் எவருமே ஸம்ஸ்க்ருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டு பேசவில்லைதான். ஆனாலும் நம்முடைய மதத்துக்கு ஆதாரமான புஸ்தகங்கள் எல்லாம் ஸம்ஸ்க்ருதத்திலேயே இருப்பதால் அதையே மத விஷயத்தில் lingua franca என்ற பொது பாஷையாக எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரதேச ஜனங்களுக்கு மாத்திரமில்லாமல் அகில தேச ஜனங்களுக்குமேயான ஆலயங்களில் சாஸ்த்ரவத்தாக அந்த பாஷையிலேயே அர்ச்சனை உட்பட்ட எல்லா ஆராதனைகளும் செய்து வருகிறார்கள். பல பாஷைக்காரர்கள், பல மரபுக்காரர்கள் இருக்கிற நம் தேசத்தில் எல்லாரும் பொதுவான ஒரு குடும்பம் என்ற ஒருமைப்பாட்டு உணர்ச்சியைப் பெற இது பெரிய ஸஹாயம் செய்கிறது. அதனால் சாஸ்த்ரபூர்வம் என்பது ஒரு பக்கம் இருக்க, நடைமுறையில் தேசிய ஒற்றுமைக்கும் இது போன்ற விஷயங்களை இதுவரை உள்ளபடிக் காப்பாற்ற வேண்டியதாகிறது.
‘யாத்ரிகர்கள் தேசம் பூராவிலிருந்து தான் ஒவ்வொரு பிரதேசக் கோயில்களுக்கும் வருகிறார்கள். உங்கள் ராமேச்வரத்தையே எடுத்துக் கொண்டால் அங்கே வருகிற ஸேவார்த்திகளில் பாதிப் பேர் வடக்கத்திக்காரர்களாகத் தான் இருப்பார்கள். இப்போதெல்லாம் ஜனங்களுக்கு ஸஞ்சாரத்தில் ஆசை, அதிலும் உல்லாஸ ஸ்தலங்கள் மாதிரியே புண்ய ஸ்தலங்களுக்குப் போவதிலும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. L.T.C மாதிரி வசதிகள் ஆபீஸிலும் செய்து தருகிறார்கள். க்ஷேத்ராடனம் நடத்தித்தரும் ட்ராவல் ஏஜென்ஸிக்களும் விருத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன. அதனால் ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவியிலிருந்து தமிழ்நாட்டு கன்யாகுமாரி வரையில் எந்தப் பிரஸித்தமான கோவிலைப் பார்த்தாலும் அங்கே ஒரு குட்டி இந்தியாவே வந்த மாதிரி எல்லாப் பிரதேச ஜனங்களும் வருகிறார்கள். அப்படியிருக்கும்போது அந்தந்தப் பிரதேச பாஷையில் வழிபாடு என்றால், அது எப்படி?’ என்று இந்த ரீதியில் அந்த வடக்கத்திக்காரர் அங்கே சொல்லிக் கொண்டு போனார்.
நானும் இந்தத் தமிழ் அர்ச்சனை விஷயத்தில் ரொம்ப நாளாக கவனம் காட்டி, வழிபாடு குறித்தேயான ஆகம சாஸ்த்ரம், பொதுவான தர்ம சாஸ்த்ரம் ஆகியவற்றில் நன்றாகப் பயிற்சி பெற்ற வித்வான்களுடன் கலந்தாலோசித்து ஒரு ‘காம்ப்ரமைஸ்’ முடிவுக்கு வந்திருப்பதால், அதை அவருக்குச் சொன்னேன். ‘பொதுவாக ஆராதனை வழிபாடு என்பது ஸம்ஸ்க்ருதத்தில் தான் இருக்க வேண்டும். வைதிகமாகவும், தாந்த்ரிகமாகவும் – அதாவது ஆகம தந்த்ர சாஸ்த்ரப்படியும் – கோயில்களில் நடக்கிற எல்லா சடங்குகளும் அப்படியேதான் நீடிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண – கும்பாபிஷேகம் நடக்கிறதென்றால் அது சாஸ்த்ர ரீதியில் ஸம்ஸ்க்ருத பாஷையை உபயோகித்துச் செய்கிற சடங்குகளால்தான் பண்ணப்பட வேண்டும். இது பொது. ஆனால் வழிபாட்டில் உள்ள ஒவ்வொரு அம்சமாகப் பார்த்துக் கொண்டு போகும்போது சாஸ்த்ரங்களிலேயே ப்ரதேச மொழிக்கும் இடம் த்ருகிற அம்சங்கள் இருக்கின்றன. பஞ்சசாரம் என்று கந்த-புஷ்ப-தூப-தீப-நைவேத்யம் செய்வதில் ஆரம்பித்து, ஷோடசோபசாரம் என்று பதினாறு உபசாரம் செய்வது, சதுஷ்-ஷஷ்டி-உபசாரம் என்று அறுபத்துநாலு உபசாரம் செய்கிற வரையில் பூஜையில் பலவித உபசாரங்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றில், பூஜையின் முடிவு கட்டத்தில் பிரதேச மொழியில் ஸ்தோத்திரங்கள் ஸமர்ப்பிக்கவும், பாட்டுக்கள் பாடவும் – அந்தப் பாட்டோடு நாட்டியங்கூட ஆடவும் – சாஸ்த்ரங்களில் நன்றாகவே, ஸ்பஷ்டமாகவே இடம் கொடுத்திருக்கிறது. நாங்கள் பல சாஸ்த்ரங்களை அலசிப் பார்த்ததிலிருந்து அர்ச்சனை என்ற அம்சத்தையும் இந்த ஸ்தோத்ர பாராயண அம்சத்தோடேயே சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை, சாஸ்த்ர அபசாரமில்லை என்று ஏற்பட்டது. அதனால், ஸம்ஸ்க்ருதத்தில் அர்ச்சனை பண்ணிவிட்டு, அதற்கப்புறம் பிரதேச பாஷையிலும் அர்ச்சனை பண்ணலாம் என்று ‘காம்ப்ரமைஸி’ங்காக முடிவு பண்ணினோம்.
‘தேசம் பூராவுக்குமாக இருக்கிற ஸம்ஸ்க்ருத அர்ச்சனையில் கை வைக்க வேண்டாம். வெளி ராஜ்யக்காரர்களுக்கும், அவர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டிலேயே பெருவாரியாக உள்ள ‘இதுவரை இருந்து வந்த நடைமுறையை மாற்றப்படாது’ என்று நினைக்கிறவர்களுக்கும் மனோ பாதிப்பு ஏற்படும்படியாக எதுவும் பண்ண வேண்டாம். இப்போது இருப்பதை மாற்றாமல், இதோடு கூடுதலாகத் தமிழ் அர்ச்சனையையும் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பதில் change இல்லை; இருப்பதற்கு addition தான். ஸம்ஸ்க்ருத அர்ச்சனைக்குப் பதிலாகத் தமிழர்ச்சனை இல்லை; அதோடு கூடத்தான் தமிழர்ச்சனையும். Instead of இல்லை; in addition to தான்.
’இது கோவிலில் நடக்கிற பொது வழிபாடு குறித்து. தனிப்பட்ட ஸேவார்த்திகளுக்கு அவரவர் இஷ்டப்படி ஸம்ஸ்க்ருதத்திலோ, தமிழிலோ எந்த பாஷையில் வேண்டுமானாலும் செய்யலாம்.’
- இப்படி நான் அவருக்குச் சொன்னேன்.
அவர் ஒருமைப்பாடு, ’இன்டக்ரேஷன்’ என்று சொன்னதற்கு இந்த ஏற்பாட்டில் ஹானி ஏற்படாததைப் புரிந்துகொண்டு நான் சொன்னதற்கு ஒப்புக்கொண்டு போனார்.
தமிழில் அர்ச்சனைக்காக நாமாவளிகள் – அஷ்டோத்தர (சத)ம் (108), ஸஹஸ்ரம் (1000) – வேண்டுமே! அப்படி இதுவரை மஹான்கள் செய்ததாக எதுவும் இல்லை. அதனால் புதுசாகத்தான் பண்ணியாக வேண்டும்.
ஆனால் கவனமாகக் கேட்டுக்கொண்டு பின்பற்ற வேண்டிய விஷயம் என்னவென்றால்: அர்ச்சனைக்கான தமிழ் நாமாவளிதான் புதிசாய் செய்யணுமேயன்றி, அதில் வருகிற நாமங்கள் பழையதாகத்தான் இருக்க வேண்டும். அதாவது தமிழ்நாட்டின் பழைய மஹான்களின் வாக்கில் வந்த நாமங்களாகவே அவை இருக்க வேண்டும். ஈச்வராநுபவம் பெற்ற அவர்கள் வாக்குக்கே தனியான ‘அதாரிடி’யும், ‘ஸாங்க்டிடி’யும் உண்டு. அப்படிப்பட்ட நாமாக்களையே பொறுக்கி எடுத்து நூற்றியெட்டு, ஆயிரம் என்று கோக்க வேண்டும். அதாவது புதிசாக செய்வது சொந்தமாகக் கவனம் செய்கிறதல்ல; compilation என்று பழையதையே ஒன்று சேர்த்துத் தொகுத்துத் தருவதாகவே அது இருக்க வேண்டும். அவற்றில் தெய்வ சக்தி, மந்த்ர சக்தி இருக்க வேண்டும். அவற்றில் தெய்விக சக்தி, மந்த்ர சக்தி இருக்க வேண்டுமானால் இப்படித்தான் செய்யவேண்டும். அர்ச்சனை நாமங்கள் நமது பூர்வ கால்த்திலிருந்த பரம் அபக்த சிரோமணிகளின் வாக்கிலிருந்ஹ்து வந்த்வையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவற்றையே அஷ்டோத்த்ர நாமாவளியாகவும், ஸஹஸ்ரநாமாவளியாகவும் தொகுக்க வேண்டும்.
சிவ நாமாக்கள் தேவார, திருவாசக, திருமுறைகளிலிருந்து பொறுக்கி எடுக்க வேண்டும். விஷ்ணுநாமாக்கள் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்திலிருந்து; அம்பிகை நாமங்கள் அபிராமி பட்டர், குமரகுருபரர் – அவர் மீனாக்ஷியம்மன் மேலே பாடியிருக்கிறார், ராமலிங்க ஸ்வாமிகள் – அவர் திருவொற்றியூர் திரிபுரஸுந்தரி மேல் பாடியிருக்கிறார் – இன்னும் இப்படிப்பட்ட பழுத்த பக்தர்களின் துதிகளிலிருந்து; ஸுப்ரஹ்மண்ய நாமாக்கள் திருப்புகழ், கந்தரநுபூதி போன்ற நூல்களிலிருந்து; விக்நேச்வர நாமாக்கள் ஒளவையார், நம்பியாண்டார் நம்பி, கபில தேவ நாயனார், அதிராவடிகள் முதலியவர்களின் நூல்களிலிருந்து – இப்படியாக அநுபவ கனம் வாய்ந்த பெரியோர்களின் நூல்களிலிருந்தே நாமாவளிகள் தயாரிக்க வேண்டும்.
ஸம்ஸ்க்ருதத்திலுள்ள அர்ச்சனை நாமாவளிகளில் மிகப் பெரும்பாலானவை அதே நாமாவையே அதே வரிசையில் கோத்துச் சொல்கிற மூலமான ஒரே ஸ்தோத்ர நூலிலிருந்து அப்படியப்படியே எடுத்துக் கொடுத்ததாக இருக்கும். உதாரணமாக விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தில் ஆயிரம் நாமாக்களைச் செய்யுளுருவத்தில் சொல்லியிருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு நாமாவாக அந்த வரிசைப்படியே எடுத்து, ஒவ்வொரு நாமாவுக்கு முன்னாடி ப்ரணவமும் பின்னாடி ‘நம:’வும் சேர்த்துத்தான் அர்ச்சனை நாமாவளி என்பது இருக்கிறது. இப்படி மூல நூல் செய்யுளுருவிலான ஒரே ஸ்தோத்ரமாயிருப்பதால் பெரிய ஸெளகர்யம், அதை ஸுலபமாக மனப்பாடம் செய்து விட முடியும். அப்படி மனப்பாடம் செய்து நன்றாகக் கரைத்துக் குடித்துவிட்டால், அப்புறம் அதிலிருந்து ஒவ்வொரு நாமாவாகப் பிரித்து, ‘ஓம்’ முதலிலும் ‘நம:’ முடிவிலும் சேர்த்துச் சொல்வதும் மனப்பாடமாக ஆரம்பித்துவிடும். மனப்பாடமானால், புஸ்தகத்தைப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல், மனஸ் ஒருமுகப்பட்டு விருவிருவென்று அர்ச்சனை பண்ணிக் கொண்டு போகலாம்.
இப்போது தமிழில் நாமாவளி என்கிறபோது, ஒவ்வொரு நாமாவளியும் ஒரே துதியில் வருகிற தொடர் நாமங்களாக இருக்காது; பல துதிகளிலிருந்து பொறுக்கியெடுத்துப் போட்டதாகவே இருக்கும். எனவே மூலமான ஒரே துதியை மனப்பாடம் செய்வதற்கும், அப்புறம் அதிலிருந்து முதலில் ‘ஓம்’, முடிவில் ‘போற்றி’ சேர்த்த அர்ச்சனை நாமாவளியையும் ஈஸியாக மனப்பாடம் செய்வதற்கும் இங்கே இடமில்லை. மனப்பாடம் செய்வதற்கு ‘ஈஸி’யான செய்யுளுருவம் இல்லாத வெறும் நாமாவளியைக் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அப்படி (மனப்பாடம்) பண்ண முடியும். அதனால் பரவாயில்லை என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
செய்தவர் இன்னார் என்றே தெரியாமல், ஆனாலும் மனஸை உருக்குவதாகவும் அர்த்த புஷ்டி கொண்டதாகவும் பல துதிகள், உதிரிப் பாடல்கள் தமிழில் இருக்கின்றன. அவற்றிலிருந்தும் அர்ச்சனைக்கு நாமாக்கள் எடுத்துக் கொள்ளலாம். சங்க இலக்கியம், கம்பர்-வில்லிபுத்தூரார், கச்சியப்ப சிவாசார்யார் போன்ற பக்த கவிகளாக இருந்த பெரியவர்களின் நூல்கள் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் கொள்ளலாம். ‘Time-tested’ என்கிறார்களே, அப்படிப் பல காலமாக ஜீவனோடு இருந்து வருகிற நூல்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
ஏற்கனவே இருக்கிற நூல்களிலிருந்து கிடைக்கும் நாமாக்கள் போதவில்லையென்றால் அப்போது மட்டுமே புதிதாகப் பண்ணிக் கொள்ள வேண்டும். அப்படிப் பண்ணுகிறவை ஸம்ஸ்க்ருத நாமாவளிகளின் மொழி பெயர்ப்பாக இருக்கவேண்டும். இதுவே நம்முடைய ப்ராசீன பத்ததிக்குக் காட்டுகிற மரியாதை.
நாமெல்லாம் ரொம்பச் சின்னவர்கள். நம்முடைய ஸ்வல்ப பக்தியில் நாமாகப் புதுசாய் பண்ணுகிற வாக்குக்கு என்ன ஜீவ சக்தி இருக்கமுடியும்? அதனாலும்தான் old is gold என்பது போல் பழைய பொன்மொழிகளின் ஆதாரத்தைக் காட்டச் சொன்னது.
மஹாலக்ஷ்மி, தக்ஷிணாமூர்த்தி, நவக்ரஹங்கள் உள்படப் பல முக்யமான தெய்வங்களுக்கு தமிழ் நூல்களிலிருந்து நாமாவளிகள் தொடுப்பது முடியாமலிருக்கலாம். இது மாதிரி இடங்களிலெல்லாம் ஸம்ஸ்க்ருத நாமாவளிகளை மொழி பெயர்ப்பது என்று வைத்துக் கொண்டு விடலாம்.
ஒரு முக்யமான விஷயம். தமிழ் அர்ச்சனைக்கு பாஷை புரிய வேண்டுமென்பதைத்தான் முக்யமான காரணமாகச் சொல்கிறார்கள். பாஷைப் போட்டியிலேயே இந்தப் பிரச்னையைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்றாலும், வெளியில் காரணம் என்று காட்டும்போது ‘புரிகிற பாஷையாக இருக்க வேண்டும்’ என்கிறதையே காட்டுகிறார்கள். வாஸ்தவத்தில் ஸம்ஸ்க்ருத நாமாவளிகளில் பாதி நாமங்கள் எல்லாருக்கும் அர்த்தம் புரிவதாகத் தானிருக்கும். பழந்தமிழ் நூல்களிலிருந்து பொது ஜனப்பழக்கமும், அவர்களுடைய மனப்போக்கு, கிராஹ்ய சக்தி ஆகியவற்றை நன்றாக அறிந்து கொள்ளும் அநுதாபப் பார்வையும் இல்லாத வெறும் புலவர்கள் புது நாமாவளிகள் தயாரித்தால் அதில் பாதி, அல்லது அதற்கு மேலேயும், அந்தப் புலவர்களுக்கு மட்டுமேதான் புரிகிறவையாக அமைந்து விடக்கூடும். பாஷைப் போட்டியை விட்டு, அர்த்தம் புரிவது என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு பார்க்கிற பக்த ஜனங்கள், ‘இதைவிட ஸம்ஸ்க்ருத அர்ச்சனையே தேவலை’ என்று நினைக்கும்படி ஆகிவிடலாம்!
ஆகவே ஜனங்களுடைய நிலைமையை உணர்ந்து அவர்களோடு ஒட்டிப் போகிற தன்மையுள்ள புலவர்களிடமே இந்தக் காரியத்தைக் கொடுக்க வேண்டும்.
மொழி பெயர்ப்புப் பணியை ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கொடுக்க வேண்டும்.
ஜீவ சக்தியுள்ள வாக்காகவும் இருக்கவேண்டும்; பொது மக்களுக்குப் புரிவதாகவும் இருக்கவேண்டும் – என்ற இந்த இரண்டு லக்ஷ்யங்களையும் ஸர்வ ஜாக்ரதையுடன் கருத்தில் கொண்டு, குறுகிய மனப்போக்கை விட்டு, விசால நோக்குடன் செய்யவேண்டிய காரியம்.
வழிபாடு என்பது மக்களுக்கு ப்ராணாதாரமான விஷயம். அதிலே வழிபாட்டுக்கு ஸம்பந்தமேயில்லாத பாஷா மோஹம், பாஷா த்வேஷம் முதலியவற்றால் தலையிட்டுப் புராதன பத்ததியையும் குலைத்து, புதுசாகவும் சரிவர ஒன்றை அமைத்துத் தர முடியாமல் கெடுத்தால் ஈச்வரன் க்ஷமிப்பானா? இந்த ஞாபகம் மறக்காமலே, செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும்.
ஸம்பந்தப்பட்டவர்களுக்கு அப்படிப்பட்ட நல்லறிவு பிறப்பதற்கு அந்த ஈச்வரனையே நாமும் பிரார்த்திக்க வேண்டும். நாம் செய்யக்கூடியது, செய்ய வேண்டுவது, அதுதான்……….
(நமஸ்கார) ‘டாபிக்’குக்குத் திரும்புகிறேன். ஸகல விதமான கோளாறுகள் நீங்குவதற்கும் நமக்கு ஏற்பட்ட ஒரே உபாயம், பலவிதமான கருத்துக்கள் கொண்ட நம் எல்லாருக்கும் பிதாவாக இருக்கப்பட்ட அந்த நாராயணனுக்கு நமஸ்காரம் பண்ணுவதுதான்.