துறவிக்கு அபிவாதனம் கூடாது அபிவாதன ஸமாசாரத்தில் இருந்தோம் அதை நான் சொன்னதற்குக் காரணம் – எங்களுக்கு

துறவிக்கு அபிவாதனம் கூடாது

அபிவாதன ஸமாசாரத்தில் இருந்தோம். அதை நான் சொன்னதற்குக் காரணம் – எங்களுக்கு அபிவாதனம் சொல்லித்தான் நமஸ்காரம் பண்ணணும் என்பதாகவே இருக்கும் என்று யாராவது நினைத்தால், அதுதான் இல்லை என்று காட்ட வந்தேன். முன்னேயே காட்டியதைக் கொஞ்சம் ‘ஆலாபனை’ செய்கிறேன்: ஸந்நியாஸிக்கு நமஸ்காரம் பண்ணும்போது அபிவாதனம் சொல்லக்கூடாது என்று சாஸ்திரம் இருப்பதைச் சொன்னேன்.

அதற்கும் முன்னேயே சொன்னேன், ஸந்நியாஸி நிர்நமஸ்காரனும், நிராசீர்வாதக்காரனும் என்று. இவனுக்கு நமஸ்காரம் என்பதே ஜன ஸமுதாயத்தின் ‘ஸெண்டிமென்’டை ‘ரெஸ்பெக்ட்’ பண்ணிப் போனால் போகிறதென்றுதான் ‘அலவ்’ பண்ணியிருக்கிறது என்றும் சொன்னேன்…சொன்னேனோ, சொல்லவில்லையோ? இப்போது சொல்கிறேன்.

தன்னை நமஸ்கரிக்கிறவன் யார், என்ன என்பதைப் பற்றி நினைக்காமல், ஒரே நினைப்பு ஆத்மாவைப் பற்றியதாகத்தான் ஸந்நியாஸி இருக்க வேண்டும் என்பதாலேயே இப்படி வைத்தது. தன்னை வந்தனை பண்ணுபவன்… நிந்தனை பண்ணுபவனுந்தான் – எவனானால் என்ன என்று உதாஸீனமாகவே இருக்க வேண்டியவன் ஸந்நியாஸி.

குரு பீடத்தில் இருக்கிற எங்களுக்கும் ஸந்நியாஸி வேஷம் இருப்பதால் (நமஸ்கரிப்பவர் அபிவாதன வாசகம் சொல்லக்கூடாதென்ற) அந்த ‘ரூல்’ இங்கேயும் அமல் செய்யப்படுகிறது.

தெரியாத்தனத்தால் எனக்குச் சில பேர் நமஸ்காரம் பண்ணினவிட்டு “அபிவாதயே” என்று ஆரம்பிப்பார்கள். உடனே, கூட இருப்பவர்கள், “கூடாது, கூடாது!” என்றுன் சத்தம் போட்டுக் கொண்டு தடுப்பார்கள். எனக்குச் சிரிப்பாக வரும். ஏனென்றால்: அந்த அபிவாதனத்தில் வருகிற நல்ல நல்ல விஷயங்கள் – ரிஷிகளின் பெயர், கோத்ரப் பெயர், ஸுத்ரப் பெயர், வேதப் பெயர் என்ற நல்ல விஷயங்களே – ஸந்நியாஸிக்கு அவச்யமில்லைதான் என்று சாஸ்திரத்தில் தடை போட்டிருக்கிறது. ரூலாக இருப்பதை infringe பண்ணினால் (மீறினால்) பாபம் என்று இங்கேயும் அமல் படுத்துகிறோம்… ஸரி! ஆனால், நான் என்ன பண்ணுகிறேன் என்றால், அந்த அபிவாதனத்தில் சொல்லப்படும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டு, நமஸ்காரம் பண்ணுபவர்களைப் பற்றிய ஊர் அக்கப் போர் அத்தனையும் விசாரித்துத் தெரிந்து கொள்கிறேன்! ரிஷி ப்ரவரம் வேண்டாம் என்று விட்டு விட்டு, நமஸ்காரக்காரனின் மாமா யார், தாத்தா யார், அடுத்தாத்துக்காரன் யார், ஆஃபீஸர் யார், எப்பவோ அவன் பார்த்த வேலை என்ன, இருந்த ஊர் என்னென்ன என்று ஜாடா விசாரித்துத் தெரிந்து கொள்கிறேன்! அவர்கள் ரிஷி உறவு, வேத உறவு சொல்வதையெல்லாம் ‘வேண்டாம்’ என்று வைத்துவிட்டு, யாரையாவது ஒருத்தரைச் சொல்லி அவருக்கு எத்தனையோ சுற்றி வளைத்து இவனுக்கு உள்ள உறவை நானாகவே வேறே சொல்லி, அப்படித்தானா என்று நிச்சயப்படுத்திக் கொள்கிறேன். ஞான த்ருஷ்டி, அபார ஞாபக சக்தி, அது, இது என்று ஸ்தோத்ரமும் ஸம்பாதித்துக் கொள்கிறேனே!

Formal-ஆகக் கேட்டுக் கொள்ளாத, கோத்ர-ஸுத்ராதி அபிவாதன ஸமாசாரங்களையும் informal-ஆகக் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் செய்கிறேன்.

என்ன பண்ணலாம்? சிஷ்யர்கள் என்று மடத்தை அபிமானித்துக் கொண்டு அதனால் தாங்கள் பெற வேண்டிய தர்மரக்ஷையை ஜனங்கள் பெற்றுக் கொண்டு தங்களால் அது பெறவேண்டிய த்ரவிய ரக்ஷையை அதற்கு தந்து, இப்படியாகப் பரஸ்பரம் மடமும் ஜனஸமூஹமும் போஷித்துக் கொண்டு வளர வேண்டுமானால் ஜனங்களுக்கு மடத்திடம் அந்த அபிமானத்தை, பற்றுதலை ஏற்படுத்தித் தருகிறதற்காக அங்கே ஸ்வாமிகள் என்று உட்கார்த்தி வைக்கப்பட்டிருப்பவர் அவர்களுடைய ஸமாசாரங்களில் இன்ட்ரஸ்ட் காட்டி, ப்ரியமாகப் பழகத்தான் வேண்டும். மடாதிபதி விட்டேற்றியாயிருந்தால் சிஷ்யர்களுக்கு மடத்திடம் எப்படி ஒட்டுதல் உண்டாகும்? அவர்களும் விட்டேற்றியாக, விட்டு விட்டுப் போய் விடுவார்கள்.

இப்படிச் சொன்னால், “கார்யார்த்தமாகத்தான் இந்த ப்ரியமான விசாரிப்பா?” என்று நினைத்துவிடக்கூடாது. மடாதிபதி என்று இருக்கிறவனுக்கு மடத்தின் லக்ஷ்யத்தில் – ஜனங்களுக்கு தர்மங்களை எடுத்துச் சொல்வது என்பது தானெ லக்ஷ்யம்? அதில்-நிஜமான ஈடுபாடு இருந்தால் ஸ்வபாவமாக அவனுக்கு  சிஷ்யலோகத்திடம் ஒரு அக்கறையும் பரிவும் ப்ரியபாவமும் உண்டாகத்தான் செய்யும். அதாவது கார்யர்த்தம், காரணார்த்தம் என்றெல்லாம் இல்லாமலே இயற்கையாகவே உண்டாகும் என்கிறேன்……..