ஆண் பெண் வித்யாஸப் பண்பாடு
இங்கே சொன்ன ஆலிங்கனம் முதலான எல்லாவித சரீர ஸ்பர்சமும் நம் தேசத்தில் ஆண்-பெண் பாலர்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாலருக்கிடையிலே மாத்திரம் பண்ணிக்கொள்வதுதான். வேறே விதமாக நினைத்துப் பார்க்கவும் தெரியாத உத்தமமான கலாசாரம் நம்முடையது. விவாஹத்தில் மட்டுமே பிறர் பார்க்கும்படி இருந்தாலும், கொஞ்சமும் விகல்பத்திற்கு இடம் தராத பவித்ரமான சாஸ்த்ர கர்மாவாக பாணிக்ரஹணம் இருக்கிறது. வெள்ளைக்காரர்களில் அப்படியில்லை. அதிகம் விமர்சிக்க நான் ப்ரியப்படவில்லை. ஜகத்ஸ்ருஷ்யிலே ஈச்வர ஸங்கல்பத்தில் அந்த பூப்ரதேசஸ்தர்கள் (நிலப்பகுதியினர்) முக்யமாக பெளதிகமாக இருந்து கொண்டு, அதிலேயே விசேஷமாக அபிவ்ருத்தி காணும்படியாகவும் இருக்கலாம். அதனால் அவர்கள் அதற்கேற்றாற்போல ஒரு மாதிரியாகச் செய்கிறார்கள். இந்த பரத கண்டவாஸிகளோ ஆத்ம ஸம்பந்தமான ஸத்யங்களைக் கண்டே அதிகம் அநுபவிக்க வேண்டியவர்களாக ஈச்வர ஸங்கல்பத்தில் ஸ்ருஷ்டிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றுதான் நம்முடைய ஆதிக்கும் ஆதி காலத்திலிருந்து ஆரம்பித்துப் பார்த்துக் கொண்டு வந்தால் தெரிகிறது. மற்றவர்களுக்கு பெளதிகம்தான் சாப்பாடு, ஆத்மிகம் ஊறுகாய் என்கிற மாதிரியும், நமக்கு ஆத்மிகமே சாப்பாடு, பெளதிகம் ஊறுகாய் மாதிரி என்றும் சொல்லலாம். ஸ்ருஷ்டி லீலையை விமர்சிக்க நமக்கு யோக்யதை இல்லையாகையால் அவர்களை ஒன்றும் நாம் குறை சொல்ல வேண்டாம்.
ஆனால் தற்போது நடக்கிறாற்போல நமக்கென்று ஏற்பட்டுள்ள நிறைவான நிறைவைக் குறைவாக நினைத்து, அவர்களுடைய வாழ்க்கை முறையை நாமும் நமக்கு நிறைவாக நினைத்து அதற்குப் பாயவும் வேண்டாம்.
ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம்: (இப்போது) பார்த்துக் கொண்டு போன சரீர ஸ்பர்ச greeting முறைகளில் சிலவற்றைத் தற்போது நம்முடைய தேசத்திலும் ஸ்த்ரீ-புருஷ வ்யவஸ்தையை மீறி அவர்கள் மாதிரிப் பண்ணுவதாகத் தெரிகிறது. ரொம்பவும் தப்பான போக்கு.
இப்போது, நம் தேசத்தில் பெரிய ஸ்தாபனங்களுக்கு ஸ்த்ரீகளும் வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளாகவும் ஸ்த்ரீகள் வருகிறார்கள். அப்போது வெளி தேசத்து முக்யஸ்தர் வருகிறாரென்றால் அவரோடு ஸஹஜமாகக் கை குலுக்குவது தேசாசாரத்தில் ஒரு ஜீவ நரம்பை முள்ளால் குத்துகிறமாதிரியாகும். மனஸிலே விகல்பமில்லாமலே இப்படிப் பண்ணுவதாக இருக்கலாம். ‘ப்ரோடோகால்’ என்றும் சொல்லலாம். என்ன சொன்னாலும் ஸரியான ஸமாதானமாகாது. ‘பதியொருத்தன் தவிரப் பிறர் கை பிடிக்கிற வழக்கம் எங்கள் தேசத்தில் இல்லை’ என்று மரியாதையோடு தெரிவித்தால் எந்த தேசத்தாரானாலும், ‘அப்படியா”’ என்று ‘ரெஸ்பெக்’டே பண்ணுவார்கள்.
கை குலுக்குகிற மாதிரியேதான், மாலை போடுவதும், புருஷர்களுக்குப் புருஷர்களும் ஸ்த்ரீகளுக்கு ஸ்த்ரீகளுந்தான் மாலை போட வேண்டும். மாறிப் பண்ணினால் அது நம்முடைய கலாசாரத்துக்குப் பெரிய களங்கம்.
இதே மாதிரி இன்னொன்று – இந்த அளவுக்கு விகாரமில்லாவிட்டாலும், சுபமில்லாததாக இன்னொன்றும் இந்நாளில் நடக்கிறது. ஸ்த்ரீகளூக்கும் பொன்னாடை, சால்வை மரியாதை என்று செய்யும்போது அவர்கள் கழுத்திலேயே அதைப் போடுவதைத்தான் சொல்கிறேன். அந்த மாதிரி புருஷர்களுக்குத்தான் போட்டுப் போர்த்தலாம். ஸ்த்ரீகளுக்குக் கையில்தான் கொடுக்கவேண்டும். தாம்பாளத்தில் தாம்பூலத்தோடு வைத்துக் கொடுக்கவேண்டும்.