அண்ட கோளங்கள் சுற்றி வருவதும் நாம் ப்ரதக்ஷிணம் செய்வதும்
ஏன் சுற்றணும் என்பதற்கு இன்னொரு காரணம். நாம் இத்தனைபேரும் வஸிக்கும் இந்த லோகம், பூகோளம் என்பதே ஸதாவும் சுற்றிக் கொண்டுதானே இருக்கிறது? இரண்டு தினுஸான சுற்றலை அது பண்ணிக் கொண்டே இருக்கிறது. தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது; அது ஒன்று. இரண்டாவது, இப்படித் தன்னைத்தானே சுற்றியபடியே ஸுர்யனையும் சுற்றுகிறது.
பூமி மாத்ரமில்லை. க்ரஹங்கள் எல்லாமுந்தான். ‘அஸ்ட்ராலஜி’ என்கிற நம்முடைய ஜ்யோதிஷ சாஸ்திரப்படி பூமியைச் சேர்க்காமல் ஆனால் ஸூர்ய சந்திரர்களைச் சேர்த்து நவக்ரஹம் என்று ஒன்பது. ‘அஸ்டரானமி’ என்கிற வான சாஸ்த்ரப்படி பூமியையும் க்ரஹமாகச் சேர்த்து ஒன்பது. ‘ப்ளானெட்’ என்பது. ஸுர்ய, சந்திரர்களை அங்கே சேர்ப்பதில்லை. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி அங்கேயும் உண்டு. அவை இரண்டுக்கும் பொது. ராஹு, கேது அங்கே இல்லை. அங்கே பிற்காலத்தில் கண்டுபிடித்த யுரேனஸ், நெப்ட்யூன், ப்ளுட்டோ நம் ஒன்பதில் இல்லை.
பூமியும் மற்ற க்ரஹங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை rotation என்றும், இப்படிச் சுற்றிக் கொண்டே ஸுர்யனை அதுகள் ஒவ்வொன்றும் ‘அயனம்’, ‘orbit’ என்கிற ஒவ்வொரு பாதையில் சுற்றுவதை ‘revolution’ என்றும் சொல்வது.
பூமி கிழக்குப் பார்க்கத் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அப்படிச் சொன்னதிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது என்றே ஆகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். யோஜித்துப் பார்த்தால், (சிரித்து) அபிநயம் பண்ணிப் பார்த்துக் கொண்டீர்களானால் புரியும். ”The earth spins on its own axis from West to East” என்று சின்ன க்ளாஸில் படித்த விஷயம். அதனால்தான் இராப்-பகல் வித்யாஸம்; அந்த ராப்-பகல்களிலும் தேசத்திற்குத் தேசம் நேர வித்யாஸம் என்றெல்லாம் படித்திருக்கிறோம். இன்னும், இப்படி பூமி மேற்கு-கிழக்காகச் சுற்றுகிறதால்தான் அதிலே இருந்து கொண்டு வெளியே பார்க்கிற நமக்கு ஆகாசத்தில் ஸுர்ய-சந்த்ராதிகள் கிழக்கிலிருந்து மேற்காகப் போவதாகத் தோன்றுகிறது; வேகமாக ஓடுகிற ஒரு வண்டிக்குள்ளிருந்து கொண்டு பார்த்தால் வெளியில் உள்ளவை எதிர்த்திசையில் ஓடுகிற மாதிரித் தோன்றுவதைப் போலத்தான் இது என்றும் அந்தப் பாடத்தில் படித்திருக்கிறோம். (சிரித்து) அநேகமாக மறந்தும் போயிருக்கிறோம்!
இப்படி பூமி முதலானவை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றிக் கொண்டிருப்பது அப்ரதக்ஷிணமாகத்தான்! அதாவது ப்ரதக்ஷிண க்ரமத்திற்கு நேர் எதிர்த் திசையில்தான். நாம் அந்த மாதிரிப் பண்ணவே கூடாது என்று சாஸ்திரங்களில் இருக்கிறது.
ப்ரதக்ஷிணத்தை clockwise என்றும் அப்ரதக்ஷிணத்தை anti-clockwise என்றும் சொல்கிறார்கள். கடிகார முள் எப்போதும் வலது பக்கமாகவே நகர்வது – அதாவது, வலம் வருவது - clockwise, இடது பக்கமாக நகர்வது அதற்கு anti. பூமி முதலான கோளங்கள் இப்படி இடது பக்கமாகத்தான் சுற்றிக்கொள்வது.
‘சுற்றிக்கொள்வது’, ‘சுற்றுவது’ இரண்டுமே இப்படி அப்ரதக்ஷிணமாகத்தான். நின்ற இடத்திலே அப்படியே சுழல்வதுதான் ‘சுற்றிக் கொள்வது’ – rotation. வெளியிலுள்ள வேறே ஒன்றைச் சுற்றுவதைத்தான் ‘சுற்றுவது’ என்றே சொல்வது – revolution என்று சொன்னது.
ஸுர்யனை க்ரஹங்கள் சுற்றுவதும் அப்ரதக்ஷிணந்தான், ‘ஆன்டி-க்ளாக்வைஸ்!’.
சலனம் என்பது சக்தியின், அம்பாளின் கார்யம். மஹா பெரிய க்ரஹாதிகளும் மஹா வேகத்தில் ஸதாவும் சலித்துக் கொண்டிருப்பது அவளுடைய விசேஷமான சக்தி விலாஸத்தில்தான். அவளுடையது இடது பக்கம்தானே? * அதற்கேற்பவே இந்த சராசர கோளங்களின் சலனமும் இடமாக இருக்கிறது. கோளங்களெல்லாம் சுற்றுவதாகவும், அவற்றில் நமக்குத் தெரியும் ப்ரபஞ்சத்திலுள்ள க்ரஹங்களெல்லாம் தங்களுக்கு மத்யமாக ஸுர்யனை வைத்துக் கொண்டு அவனைச் சுற்றி வரும்படியாகவும் ஈச்வரன் நியமித்து அப்படியே கோடாநுகோடி காலமாக நடந்து வருகிறது. அந்த ‘ஸோலார் ஸிஸ்ட’த்திலேயே இருக்கிற நமக்கும் அந்த தர்மம் உண்டுதானே? அதனால் தான் ஆத்ம ஜ்யோதியான ஈச்வரனை மத்யமாக வைத்து நாமும் ப்ரதக்ஷிணம் செய்யவேண்டுமென்று நம்முடைய பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றிக் கொண்டேயிருப்பதிலிருந்து விடுபட்ட நிலையாகிற சாந்தமே நமக்கு லக்ஷ்யம் என்று நாம் முடிவாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சுற்றி வந்தாலும் சாந்தத்தைக் காட்டும் ப்ரதக்ஷிண ரீதியில் வலமாகவே வர வேண்டுமென்று வைத்திருக்கிறார்கள்.
*சிவன் – வலம்; அம்பாள் – இடம். அர்த்தநாரி ஸ்வரூபம்.
ஸூர்யனைச் சுற்றிவருவதோடுகூட, பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வது போலவும் நாம் பண்ண வேண்டும்; இருக்கிற இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை நாமே சுற்றிக் கொள்ளவும் வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள்.
நமக்கு வெளியிலே ஸ்வாமி என்று வைத்து அவரைச் சுற்றி நடந்து ப்ரதக்ஷிணம் பண்ணுவதோடுகூட, அந்த ஸ்வாமி நமக்குள்ளேயும் இருக்கிறார் என்பதை ஏதோ சில க்ஷணத்திற்கு ஒரு பாவனையாகவாவது புரிந்து கொண்டு, பாவிக்கப்படுகிற அவன் நம்முடைய ஹ்ருதய மத்தியிலேயே ஜீவமூலமாக இருக்கிறவன். பாவிக்கிறவன் என்று அவனுக்கு வேறாக நாம் உள்ள மட்டும் அந்த மத்தியைச் சுற்றிச் சுற்றி வந்தே வாழ்கிறோம்’ என்ற நினைப்போடு உள்ளே அசலமாயிருக்கும் அந்த ஈச்வரனான மத்யப் புள்ளியை அந்தப் புள்ளி தவிரச் சலிதமாகவேயிருக்கும். இந்த ஜீவ சரீரத்தால் ப்ரதக்ஷிணம் பண்ண வேண்டும். இது நமக்குள்ளேயே உள்ள நம்முடைய நிஜ நானை பொய் நானான சரீரத்தால் சுற்றும் ஆத்ம ப்ரதக்ஷிணம். இதைத் ’தன்னைத் தானே சுற்றிக் கொள்வது’ என்று சொல்வது. அப்படிச் சொல்லும்போது முதலில் சொன்னது நிஜமான ‘தான்’ (Self); அப்புறம் சொன்னது பொய்யான ’நான்’ (ego). இரண்டையுமே ஸம்ஸ்க்ருதத்தில் ஆத்மா என்று சொல்லும் வழக்கமிருப்பதால் ‘ஆத்ம ப்ரதக்ஷிணம்’ என்று சுருக்கமாகச் சொல்வது.
கடிகார முள் கடிகாரத்தைவிட்டு வெளியிலே போய் அதைச் சுற்றி வரவில்லை. கடிகாரத்துக்குள்ளேயேதான் சுற்றுகிறது. அதன் ஒரு கோடி கடிகாரத்தின் மத்யப் புள்ளியுடனேயே ஐக்யப்பட்டிருக்கிறது. அந்தக் கோடி அசலம். அதுதவிர, முள்ளின் மற்ற பாகம் பூராவும் சலமாக அந்த மத்யத்தைத்தான் சுற்றி வருகிறது. அந்த மாதிரிதான் இதுவும் என்று வைத்துக் கொள்ளலாம்.
இப்படி இருந்த இடத்திலிருந்தே சுற்றிக் கொள்வது, இன்னொன்றை மத்யமாக வைத்து அதைச் சுற்றுவது என்ற ‘ரொடேஷன்’, ‘ரெவல்யூஷன்’ ஆகிய இரண்டிலுமே நமக்கும் பூமி முதலான க்ரஹங்களுக்கும் ஒரு பெரிய வித்யாஸம் சொன்னதை இன்னொரு தடவை வின்யாஸம் செய்கிறேன்: கோளங்கள் rotation, revolution ஆகிய இரண்டையுமே அப்ரதக்ஷிணமாகத்தான் பண்ணுகின்றன! தன்னைத்தானே சுற்றிக் கொள்வது, ஸூர்யனைச் சுற்றி வருவது என்ற இரண்டிலும் ப்ரபஞ்ச தர்மம் என்று நான் சொன்ன விதி அப்ரதக்ஷிணமாகத்தான் இருக்கிறது. ‘வலம்’ வருவது இல்லை; ‘இடம்’ வருவது!
ப்ரபஞ்ச தர்மத்தின் அம்சமாகவே மநுஷ்யனும் ஆத்ம ப்ரதக்ஷிணமும், வெளி சுவாமி ப்ரதக்ஷிணமும் பண்ணுவது என்று சொல்லிவிட்டு இப்படி இரண்டிற்கும் ஒரு பெரிய வித்யாஸமும் சொன்னால்?
ப்ரபஞ்ச தர்மத்தை ஒட்டியே மநுஷ்யன் போக வேண்டும் என்பது வாஸ்தவந்தான். ஆனால் அதோடு முடிந்து போய்விடக்கூடாது. அதோடு ஒட்டிப் போயே அதற்கு மேலே எழும்பி, உசந்து போக வேண்டும். தர்மம், அதர்மம் எல்லாவற்றையும் கடந்த பரம ஸத்ய நிலைக்குப் போக வேண்டும்.
ப்ரக்ருதி தர்மத்தை ஒட்டிப் போவது, அதைக் கடந்து போவது என்ற இரண்டையும் சேர்த்துத்தான் நமக்கு ப்ரதக்ஷிண விதியை ஏற்படுத்தித் தந்திருப்பதாக தெரிகிறது. ப்ரபஞ்ச தர்மத்தையே நாமும் அநுஸரித்துப் பண்ணுவதற்குத்தான் க்ரஹங்கள் மாதிரியே ஒரு மத்ய மூலத்தை, கேந்திர ஸ்தானத்தைச் சுற்றுவதும், தனக்குள்ளேயே உள்ள மத்ய மூலத்தை சுற்றிக் கொள்வதும். அவற்றின் தர்மத்தைக் கடக்கிறபோது மாறுதலாகக் காட்டினால்தானே ‘அந்த தர்மம் போயாச்சு’ என்று புரியும்? அதனால் அந்தச் சுற்றுதல்களை எதிர்த் திசையில் பண்ணுவது.
அசேதனமான கோளங்கள் பண்ணுவதற்கு வித்யாஸமாகத்தானே சேதனமான ஜீவன் பண்ணுவது இருக்க வேண்டும்? அப்படிச் சேதனன் பண்ணுவதுதான் ஏக சைதன்யத்திலேயே (ஒன்றேயான பேருணர்வும் பேரறிவுமானதிலேயே) கொண்டு சேர்க்கும். அதுதான் வலது பக்கத்தையே மூலவஸ்துவுக்கு எப்போதும் காட்டிப் பண்ணுகிற ப்ரதக்ஷிணம்.
சக்தி விலாஸத்தைக் காட்ட அசேதன கோளங்கள் சக்திகரமாகச் சலித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் சேதனனுக்கு சக்தி விலாஸத்தில் எத்தனையோ அற்புதங்கள், ஸெளந்தர்யங்கள் இருந்தாலும் சக்தியெல்லாம் அடங்கிய சாந்தத்தில்தானே பூர்ணத்வம்? ‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்று உபநிஷத்தே சொல்லியிருக்கிறது.* அந்த சாந்த சிவனுக்குரிய பக்கம் வலம். சாந்தத்தில் முடிய வேண்டிய நாம் அந்தப் பக்கமாகத் தானே சுற்றணும்? சக்தி விலாஸத்துக்காகச் சுற்றுவது, அதிலேயே சாந்த முடிவையும் முடிச்சுப் போட்டு வலமாகச் சுற்றுவது என்று ப்ரதக்ஷிண தத்வத்தை அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.
ப்ரபஞ்ச ரீதியிலேயே ஓடினால் ப்ரபஞ்ச அநுபவத்தோடேயே வாழ்க்கை முடிந்து போய்விடும். ஆத்மாநுபவத்திற்கு வழி ஏற்படாது. லோக வாழ்க்கையில் இருக்கிற மட்டும் அதற்கு அநுஸரணையாக இருந்து கொண்டு, கர்மாவைக் கழித்தே, அதைக் கடப்பதற்கான வழியைப் பண்ணிக் கொள்ளவேண்டும். அதுதான் ப்ரதக்ஷிண தத்வம். ஜட ப்ரபஞ்சத்துக்கும் சேதன ஜீவனுக்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை இணைத்துக் காட்டிப் புரியவைக்கும் தத்வம்.
‘ப்ரபஞ்ச ரீதியிலேயே ஓடுவது’ என்றேன். ஓட்டப் பந்தயத்தில் பார்த்தீர்களானால் அப்ரதக்ஷிணமாகத்தான் ஓடுவார்கள். அங்கே முழுக்க பெளதிக சக்தியின் கார்யந்தானே? ஆத்ம ஸம்பந்தம் இல்லைதானே? அதனால் பூத ப்ரபஞ்சமான க்ரஹங்கள் பண்ணும் ரீதியிலேயே மநுஷ்யனும் பண்ணுவது. பெளதிகமான சரீரத்தின் ப்ரயாஸை நிறைய இருக்கிறபோது பூத ப்ரபஞ்ச தர்மந்தான். மாற்றிப் பண்ணினால் பெளதிகமாக இருக்கப்பட்ட நம்முடைய சரீரத்துக்குக் கெடுதி உண்டாகும். கோவில் கோபுரங்களுக்குள்ளேகூட சுற்றிச் சுற்றி ஏறிப் பார்ப்பதற்காகப் போட்டிருக்கும் படி வரிசைகள் இடது பக்கமாகவே திரும்பிப் போகிற மாதிரிதான் போட்டிருப்பார்கள். ‘அந்த நாளிலேயே, இவர்களுக்கு எத்தனை ஸயன்ஸ் ஞானம்?’ என்று அந்நிய தேசஸ்தர்கள் கூட ஆச்சர்யப்பட்டுச் சொல்கிறார்கள்.