விநயத்தின் சிறப்பு
நம்முடைய புராதனமான ‘ட்ரெடிஷ’னில் விநய குணத்திற்கு ரொம்பவும் சிறப்புக் கொடுத்திருக்கிறது. பதவி, பணம், அறிவு, அழகு என்று ஒவ்வொன்றை வைத்தும் அஹங்காரம், தலைக்கனம் ஏற இடமுண்டானாலும் அந்தத் தலைக்கனமும் ரொம்பத் தலைதூக்கி நிற்பது ‘அறிவிலே நாம் பெரியவர்’ என்று ஒருவர் நினைக்கிற போதுதான்! அப்படியிருப்பவர்கள் எதையும் துச்சமாக, தூக்கி எறிந்து, பரிஹஸித்து எல்லாம் பேசுவார்கள். ஆகையால் அப்படிப்பட்ட அறிவு விருத்தியை விநயத்தோடு சேர்த்து இறுக்கி முடிச்சுப் போட்டுக் கொடுத்து விட்டால் எல்லாவிதமான தலைக்கனங்களையும் அடக்கி இறக்கி விட்டதாக ஆகிவிடும். இதைத்தான் நம் சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கின்றன…. அதாவது வித்யையானது விநயத்தோடு சேர்ந்தே பயிலப்பட வேண்டும்; இல்லா விட்டால் ‘கற்றது அனைத்தும் வீண்’ என்று சொல்லியிருக்கின்றன. பகவானும் கீதையில் “வித்யா-விநய ஸம்பன்ன” என்று சேர்த்துச் சொல்லியிருக்கிறார்*.
விநயம் இருக்கிற இடத்தில்தான் ஈச்வர க்ருபை சேருமாதலால் எல்லாரும் அதற்கு ஆசைப்பட்டு, அதற்கு உபாயமாக உள்ள நமஸ்காரத்தை நிறையப் பண்ண வேண்டும். பெரியவர்களைத் தேடித் தேடிப் போய் நமஸ்காரம் பண்ணணுமென்று அந்த நாளில் சொல்லிக் கொடுப்பார்கள்.