ஒற்றை ‘நம:’ இல்லை
நாம் தேடிப் போகிற அந்தப் பெரியவர்கள் அவர்களே ஆசீர்வாதம். செய்கிறவர்களாகவோ, நமக்காக நாராயணனின் ஆசீர்வாதத்தை ப்ரார்த்திக்கிறவர்களாகவோ, தனக்கு ஸம்பந்தமில்லையென்று அவனிடம் நமஸ்காரத்தைத் தூக்கிப் போடுபவர்களாகவோ, எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நாம் அதைப் பற்றி யோஜிக்காமல் பெரியவராக இருக்கிற அந்த எல்லா தினுஸுக்காரர்களுக்கும் முன்னாடி “நமோ நம:” என்று பூமியில் சரீரத்தைத் தள்ளி விட்டோமானால் அந்த நாராயணனின் க்ருபை எப்படியோ ஒரு ரூபத்தில் நமக்குக் கிடைத்து விடும்.
ஒற்றை ‘நம:’ சொல்வதில்லை; ”நமோ நம:” என்று பலவாகப் பெருக்கியே சொல்வது. பேச்சு வார்த்தையில் கூட “உனக்கு ஆயிரம் நமஸ்காரம்; கோடி நமஸ்காரம்” என்கிறோம்! “அனந்த கோடி நமஸ்காரம்” என்றே பெரியவர்களுக்குக் கடிதாசு முதலியதில் எழுதுவது.*
“நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமோ நம:” – என்றே அம்பாளுக்கு நமஸ்காரத்தை அடுக்கிக் கொண்டு போய் அநேக ச்லோகங்கள் ‘ஸ்பதசதீ’யில் இருக்கிறது.**
*“அனந்த நமஸ்காரம்” என்றே ஓர் அடியார் ஸ்ரீசரணருக்கு மடல் எழுதுவது. இதுபற்றி அவரிடம் குறிப்பிட்ட ஸ்ரீசரணர், “நீ ஏன் ‘கோடி’யைத் தள்ளிவிட்டு எழுதுகிறாய்’ என்று முதலில் நினைத்தேன். உடனேயே புரிந்து விட்டது. ‘அனந்தம்’ என்று சொன்னதற்கு அப்புறம் அதற்குக் கோடி மடங்கு ஏது, மடங்கு என்பதே ஏது? அனந்த கோடி ஸரியில்லைதான்’ என்று புரிந்து கொண்டேன்” என்றார். ‘அனந்தம்’ என்றால் ‘முடிவில்லாதது’, முடிவிட முடியாத எண்’ என்று பொருள்.
** துர்கா ஸப்தசதீ (’தேவி மஹாத்மியம்’, ’சண்டீ’ என்றும் வழங்குவது) அத்.5
ரொம்பவும் பெரியவர்களாக இருப்பவர்களுக்கு ஸாஷ்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணும்போது நாலு தடவை பண்ணவேண்டும் என்று சிஷ்ட ஸம்ப்ரதாயத்தில் (சான்றோர் மரபில்) இருந்து வருகிறது. வைஷ்ணவர்களில் ஒரு ஸம்ப்ரதாயத்தில் அந்தப் பெரியவர் போதுமென்று சொல்லும்வரை நமஸ்கரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நமஸ்காரத்தை வளர்த்துக் கொடுத்திருக்கும் ட்ரெடிஷனில் வந்த நாம் இந்தப் பெரிய பிதுரார்ஜிதம் வீணாக விடப்படாது.
விநயத்தோடு, மேலும் மேலும் விநயத்திற்காக ஆசைப்பட்டு இந்த க்ரியையைப் பண்ண வேண்டுமென்பது ரொம்பவும் முக்யம். அந்த அடிப்படை எண்ணம் இல்லாவிட்டால் நமஸ்காரம் என்பது தண்டால் மாதிரி ஒரு கஸரத்துத்தான். தண்டாகார நமஸ்காரத்தைத் தண்டால் நமஸ்காரமாக்கி ஒன்றுக்குமே உதவாத ‘தண்ட’மாகப் பண்ணி அபசாரப்படக்கூடாது. கஸரத் பழகி உடம்பை புஷ்டி பண்ணிக் கொண்டு மட்டும் என்ன ப்ரயோஜனம்? உள்ளத்தை திவ்யாநுபவங்களால், ஆத்மாநுபவத்தால் புஷ்டி பண்ணிக் கொள்ள இந்த மநுஷ்ய ஸ்ருஷ்டி ஒன்றுக்கே பகவான் வழி போட்டுக் கொடுத்திருக்கிற போது, உடம்பளவில் மட்டும் மிருக பலத்தை விருத்தி செய்து கொண்டால் நாமும் திர்யக் ஜீவராசிதான். பகவான் கொடுத்திருக்கும் அந்த வழிகள் பலவிதமாக இருந்தாலும் முக்யமான லக்ஷ்யம், கொழுத்துக் கிடக்கிற அஹம்பாவ புஷ்டியை விநயத்தினால் மெல்லிசு பண்ணி இளைத்துத் தேய வைப்பதுதான். அதற்கு உபாயம் நராக்ருதியில் நமக்கு நேரே பெரியவர்களாக இருந்து கொண்டிருப்பவர்களின் காலடியில் “நமோ நம:’ ‘நமோ நாராயணாய” என்று விழுவதுதான்.