நமஸ்காரம் தனக்குத்தானே பயன்
நமஸ்காரம் பண்ணி அதன்மூலம் வேறேதோ காமனையின் நிறைவேற்றம் என்ற பலனைக் கேட்பதே ஒரு தினுஸில் அசட்டுத்தனந்தான். ஏனென்றால் அதுவேதான் ‘ஆடோமாடிக்’காக விநயம் என்ற மஹா பலனைக் கொடுத்து விடுகிறதே! அதுவே பலன், பாக்யம், செல்வம் எல்லாம். ஆசார்யாள்கூட வேறே யாரோ தரித்ர தம்பதிக்காகக் கனகதாரை கேட்டு மஹா லக்ஷ்மியை ஸ்துதித்தாரே தவிர, அந்த ஸ்துதியில் தமக்கு இன்னது வேணும் என்கிற போது கனகம் முதலான பொருட்செல்வம் எதையும் கேட்காமல், அவளை நமஸ்கரிப்பது என்பதேதான் தாம் வேண்டும் செல்வம் என்று சொல்லியிருக்கிறார். “த்வத் வந்தனானி மாமேவ மாதரநிசம் கலயந்து” என்று.*
*இதன் விரிவு: “தெய்வத்தின் குரல்” பகுதி 5, “குருமூர்த்தியும் திரிமூர்த்திகளும்’ என்ற உரையில். ‘நமஸ்காரமே செல்வம்: ஆசார்யாள் உணர்த்துவது’ என்ற பிரிவு.