பித்ருவம்சமே குருவம்சமாகவும்

பித்ருவம்சமே குருவம்சமாகவும்

சாகிற ஜன்மாவைத் தரும் அப்பாவே சாகாமையில் ஜன்மிக்கச் செய்கிற குருவாகவும் ஆகி - (சிரித்து) 'கொஞ்சம்' அப்பா, 'முழு' அப்பா இரண்டும் ஆகி - இருப்பதையும் ஆதியிலிருந்து நிறையப் பார்க்கிறோம். இப்படித் தொடர் சங்கிலியாகப் போய் அப்பா - பிள்ளை வம்சாவளியே குரு - சிஷ்ய வம்சாவளியாக இருந்திருப்பதும் உண்டு. (ஸ்மார்த்தர்களான) நம்முடைய ப்ரஹ்மவித்யா குரு பரம்பரையே அப்படித்தான் முதல் அஞ்சு, அறு பேர் வரை போகிறது. இந்த ஸம்ப்ரதாயத்தில் முதல் குரு நாராயணன். அவர் நேர் குருவாக இருந்து அவரிடம் உபதேசம் பெற்று (இச் சம்பிரதாயத்தில்) அடுத்த குரு ஆனவர் யாரென்றால், அவருடைய பிள்ளையான ப்ரஹ்மாதான். அந்த ப்ரஹ்மாவை குருவாகக் கொண்டு அவருக்கு அடுத்து குரு ஸ்தானம் வஹிக்கிறவர் வஸிஷ்டர். அவர் ப்ரஹ்ம புத்ரர்தான். அவருக்கு அடுத்தவர் வஸிஷ்டருடைய புத்ரரான சக்தி. அடுத்தவர் சக்தி மஹர்ஷியின் புத்ரரான பராசரர். பராசரருக்கு அப்புறம் அவருடைய புத்ரரான வ்யாஸாசார்யாள், பௌத்ரரான சுகாசார்யாள் என்று அதுவரை அப்பா - பிள்ளைகளே குரு - சிஷ்யர்களாக அமைந்துதான் நம் குரு பரம்பரை உருவாகியிருக்கிறது. நைஷ்டிக ப்ரஹ்மசாரியான சுகாசார்யா ளிலிருந்துதான் மாறுதல். அவர் ஸந்நியாஸியான கௌடபாதருக்கு குருவாகி உபதேசித்ததிலிருந்து கௌடபாதருக்கு அப்புறம் கோவிந்த பகவத்பாதர், நம்முடைய ஆசார்யாள், அவருடைய ஸந்நியாஸ சிஷ்யர்கள், அவர்களுடைய பரிபாலனத்தில் வந்த மடாலய அதிபதிகளின் பரம்பரை என்பதாக, குருவும் ஸந்நியாஸி, சிஷ்யரும் ஸந்நியாஸி என்றாயிற்று.

ஜெனரலாகவே KS வம்சங்கள் முழுவதும் வெறும் அப்பா - பிள்ளை வம்சம் மட்டுமில்லை, அந்த அப்பா -பிள்ளைகளே குரு - சிஷ்யர்களாகவும் இருந்த வித்யா ஸம்ப்ரதாய பரம்பரைகளுந்தான்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பிற மதங்களிலும் பிதா-குரு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  தாய் வழியில் ரிஷிகளின் பெயர்கள்; ஆசார்யாள் காட்டும் அன்னை மகிமை
Next