பெண்டிரும் பிரம்மவித்தையும்

பெண்டிரும் பிரம்மவித்தையும்

இப்படிச் சொன்னதிலிருந்து அவரோ, அவருக்கும் முந்தைய அந்தப் பூர்வ ரிஷிகளோ ஸ்த்ரீகளையும் ப்ரஹ்ம வித்யா குருக்களாகக் கொள்ளலாமென்று அபிப்ராயப் பட்டதாகத் தப்பர்த்தம் செய்துகொண்டு விடக்கூடாது. இந்த இடத்தில் மூலத்திலும் ஸரி, பாஷ்யத்திலும் ஸரி, ஆத்ம சாஸ்த்ர உபதேசம் பற்றி எதுவும் இல்லை. இங்கே சொல்லப்பட்ட ரிஷிகள் இந்தந்த அம்மாமார்களின் பிள்ளைகள் என்று மட்டுமே இருக்கிறதே தவிர, அவர்களிடமிருந்து இவர்கள் எந்த வித்யையிலும் உபதேசம் பெற்றதாக இங்கேயும் இல்லை, உள்ளே எங்கேயும் இல்லை. பாஷ்யத்திலும் புத்ரன் குணவானாவதைப் பற்றித்தான் இருக்கிறதே தவிர வித்யாவானாக, ஞானவானாக இருப்பதைப் பற்றி இல்லை.

உபநிஷத் காலத்தில் அத்யாத்ம சாஸ்த்ர விஷயங்களில் ஆழமாகத் தெரிந்து கொண்ட ஸ்த்ரீகள் வித்வத் ஸிம்ஹங்களாக இருக்கப்பட்ட (ஆடவ) ரிஷிகளிடமும் பெரிதாக வாதம், ஸம்வாதம் (ஸம்பாஷணை) செய்திருப்பதாக அந்த உபநிஷத்துக்களிலிருந்தே நிஸ்ஸந்தேஹமாக (சந்தேகத்திற்கிடமின்றி) த் தெரிவதும் வாஸ்தவம். என்றாலும் அந்த ஸ்த்ரீகளிடமிருந்து யாரும் உபதேச க்ரமத்தில் வித்யா ஸ்வீகரணம் (கல்வி கற்றல்) செய்ததாக ஒரு இடத்திலேயும் காணோம் அதே மாதிரி, யாஜ்ஞவல்க்யர் ஒருத்தர் தம் பத்னியைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு ஆத்ம விஷயங்களை சொல்வதாக இருக்கிற ஒரு இடம் தவிர ஸ்த்ரிகள் குருமார்களிடம் உபதேசம் பெற்றதாகவும் விவரம் எதுவுமில்லை. பேச்சுவாக்கிலும், சூழ்நிலைப் பழக்க விசேஷத்தாலும் - 'சூழ்நிலை' என்கிறபோது, வித்வத் ச்ரேஷ்டர்களாகவும், ஞானிகளாகவும் அப்போது இருந்த கொண்டிருந்தவர்களின் ஸாந்நித்ய விசேஷத்தை 'ரேடியேஷ'னைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். அந்த விசேஷத்தாலும் - எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்காகவே உள்ளுக்குள்ளே ஏற்பட்ட ஆத்யாத்மிக அபிலாஷையினாலும் சில ஸ்த்ரீகளும் ப்ரஹ்மவாதினிகளாக ஆனதாகத்தான் தோன்றுகிறதே தவிர, ஸம்ப்ரதாய க்ரமத்தில், அவர்கள் சிஷ்யர்களாகவோ - சிஷ்யைகளாகவோ - குருமார்களாகவே இருந்து கற்றுக் கொண்டதாகவோ, கற்றுக் கொடுத்ததாகவே அழுத்தமாக 'எவிடென்ஸ்' இல்லை.

இந்த விஷயமாக ரொம்பவும் அதிக பட்சமாக தெரிவது, வேதோபநிஷதங்கள் முதலாக லோகத்தில் பிரசாரத்துக்கு வந்த பூர்வ யுகத்திலும் தொடர்ந்து வந்து கலிக்கு முற்பட்ட யுகங்களிலும் சில மந்த்ரங்கள், சில உபாஸனைகள், சில வித்யைகள் ஆகியவற்றை அகத்துப் பெரியவர்களே பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்கிற அளவுக்குத்தான் அநேகமாக உபநிஷத் மாதிரியும், பிற்கால தர்சனங்கள் மாதிரியும் ஃபிலாஸபிகலாக இல்லாத ஆராதனா முறைகளையும், Arts என்கிற கலைகளையும், லௌகிக ஞானத்தைத் தரும் சில வித்யைகளையுந்தான் ஸ்த்ரீ ப்ரஜைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அபூர்வமாகத்தான் வேத மந்த்ரங்கள் சிலதும் பெண்டுகளுக்கு ஒரு சில ஸமூஹங்களில் கற்றுக் கொடுத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. ரொம்பவும் தீக்ஷண்ய புத்தியோடு ஃபிலாஸாபிகலாகத் தெரிந்து கொள்ள வேணுமென்று ஒரு ஸ்த்ரீ ப்ரஜை ஆசைப்படும் போது ஃபிலாஸஃபியும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டுமென்றும்

ஊஹிக்கமுடிகிறது. ஆனாலும் எல்லா புருஷ ப்ரஜைகளுக்கும் கம்பல்ஸரியாகவே உபநிஷத், தர்சனங்கள் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுத்த மாதிரி இல்லாமல், 'எக்ஸெப்ஷனல்' என்று சொல்லும்படியாகச் சின்ன வயஸிலேயே நல்ல புத்தி ப்ரகாசத்துடன் இருந்த பெண்களுக்கு மட்டுமே இப்படி வேதாந்தமும் இதர தத்வார்த்த ஸப்ஜெக்டுகளும் சொல்லிக் கொடுத்திருக்கி -றார்களென்றுதான் தெரிகிறது. ஒரு ரிஷியிடம், ஆசார்யரிடம் குருகுலவாஸம் என்று படித்திருக்கிற பசங்கள் பற்றி வேதத்திலிருந்து ஆரம்பித்து பிற்கால இலக்கியங்கள் வரை பலவற்றில் நிறைய வருகின்றன. அவற்றைப் பார்க்கிறபோது நூற்றுக்கு ஒரு எக்ஸாம்பிளாகத்தான், அகத்துப் பெரியவர்களிடமிருந்து மட்டும் என்றில்லாமல் குருகுலம் வைத்து நடத்திய ஆசார்யனிடமும் பெண்கள் படித்த மாதிரித் தெரிகிறது. அந்த நூற்றுக்கொரு குருகுலத்திலும் புருஷப் பிள்ளைகளாக நூறு வித்யார்த்திகள் படித்தார்களென்றால் பெண் வித்யார்த்திகளாக இரண்டொருத்தர்தான் இருந்திருப்பார்கள் என்றும் ஊஹிக்க முடிகிறது.

முன்னே சொன்ன (ப்ருஹதாரண்யக) உபநிஷத்திலேயே மாத்ருபூர்வமாக (தாய்வழியில்) வம்சம் சொன்ன அந்த பாகத்திற்குக் கொஞ்சம் முந்தி, இப்படியிப்படியான குணமுள்ள ப்ரஜை பிறப்பதற்குப் பிதா இன்னின்ன அநுஷ்டானம் பண்ணணும் என்று சொல்கிற இடத்தில் பண்டிதையாக ஆகக்கூடிய ஸ்த்ரீ ப்ரஜை (பெண் குழந்தை) பிறக்க வேண்டுமானால் இன்ன விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இருக்கிறது. இதிலிருந்து ஆதிகாலத்தில் ஸ்வயமாகவே நல்ல புத்திசாலினியாகப் பிறந்து தத்வ சாஸ்த்ரங்களும் தெரிந்து கொண்டு பண்டிதைகளான பெண்கள் இருந்தது மட்டுமில்லாமல், அப்படி ஒரு பெண் ப்ரஜை தனக்கு உண்டாணும் என்று ஆசைப்பட்ட பிதாமார்கள் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனாலும் இங்கே கூட ஆசார்யாள் நமக்கான கலிகால தர்மத்தை மனஸில் வைத்துக் கொண்டே பாஷ்யம் பண்ணியிருக்கிறார். அப்படிப் பண்ணும்போது, 'பண்டிதை' என்பது ப்ரஹ்ம வித்யா சாஸ்திரத்தில் பாண்டித்யம் பெறுவதைக் குறிக்காது என்று அபிப்ரயாப்பட்டு, அதற்கு காரணமாக "ஏனென்றால் ஸ்த்ரீகளுக்கு வேதத்தில் அதிகாரமில்லாததால் (வேதம் கற்க உரிமையில்லாதால்) " என்கிறார். பின்னே 'பண்டிதை' என்று ஏன் சொல்லியிருக்கிறது என்பதற்கு, "க்ருஹ தந்த்ர விஷயத்திலே பாண்டித்யம் பெறுவதாலேயே பண்டிதை" என்று பதில் கொடுத்திருக்கிறார். 'க்ருஹ தந்த்ரம்' என்றால் வீட்டை நல்ல முறையில் நடத்துவது, இல்லறத்தை நல்லறமாக நடத்துவது, (சிரித்து) 'domestic management'! அதை ஸாமர்த்யமாக, திறம்படச் செய்கிற கலையில் தேர்ந்திருப்பதுதான் பெண்களுக்குப் பாண்டித்யம் - இப்படி ஆசார்யாள் அபிப்ராயப்பட்டிருக்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தாய் வழியில் ரிஷிகளின் பெயர்கள்; ஆசார்யாள் காட்டும் அன்னை மகிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பெண்களின் பாண்டித்யம்;அக்கால-இக்கால மாறுபாடு
Next