மாதா - பிதாவுக்கும் மேல் குரு
மாதா - பிதா - குரு - தெய்வம் என்கிற நாலில் மாதா - பிதாக்களையே குரு என்றும், தெய்வம் என்றுங் கூடப் போற்றுகிறோம். ஆனால் மாதாவைப் பிதா என்பதில்லை, பிதாவை மாதா என்பதில்லை. குருவையும் தெய்வத்தையுந்தான் மற்ற மூன்றாகவுமே சொல்வது.
மாத்ரு பாசம், பித்ரு பாசம் ரொம்ப வலுவானது. அந்தப் பாசத்தை காட்டிக் குழந்தையை அன்பு பண்ணி, செல்லம் கொடுத்து வளர்க்கிறபோதேதான், அதோடேயே - இரண்டாம் பட்சமாக என்று சொல்லலாமோ என்னமோ? அப்படி 'ஸெகன்டரி'யாக - 'இன்ஃபார்ம'லாகக் கொஞ்சம் 'டீச்'சும் பண்ணுவதோடு பெற்றோர்கள் நல்வழிப்படுத்துவது முடிந்து போகிறது. நல்ல வழியில் வராவிட்டால்கூட, வயிற்றிலே பிறந்தது என்பதால் ப்ரஜையைத் தள்ளிவிடாமல் அந்த இரண்டு பேரும் வளர்ப்பார்கள் - பாசத்தால் பாதி, கடமை என்று நினைத்துப் பாதி இப்படிச் செய்வார்கள. குரு என்றே இருப்பவருக்குத்தான் நல் வழிப்படுத்துவதொன்றே கார்யமாக, முழுக் கடமையாகக் கொடுத்திருக்கிறது. நிறைந்த அன்பு - எல்லை கட்டமுடியாத க்ருபை என்கிற அளவுக்கு அன்பு - அவருக்கு சிஷ்யனிடம் இருக்கிறதென்றாலுங்கூட அதுவும் அவனை நல்வழிப்படுத்துவதிலேயேதான் ஒருமுகப்பட்டிருக்கிறது. சொந்தப் பாசத்தினால் அந்த லட்சியத்திலிருந்து அவர் திசை திரும்பி விடுவதில்லை. ஆகையினால், மாதா-பிதா-குரு என்ற மூவரில் ஒருவனுக்கு நிஜமான நல்லதை - நல்லதை மாத்திரமே - செய்வது குருதான். 'அம்மா - அப்பா சரணமில்லை, குருதான்!' என்று அதனால்தான், ஆசார்யாள் 'பால போத ஸங்க்ரஹம்" என்கிற அத்வைதத்தின் அரிச்சுவடி மாதிரியாக புஸ்தகத்தில் சொன்னது.