ஆத்ம ஸம்பந்தம், மத ஸம்பந்தம், தர்ம ஸம்பந்தம் இல்லாத ஸெக்யூலர் ஸப்ஜெக்ட்களை மட்டுமே போதித்த குருமார்கள் பூர்வ காலத்திலும் இருந்திருக்கி -றார்கள். ஆனால் அவர்களில் நாஸ்திகம் சொல்லிக் கொடுத்தவர்கள் தேடித் தேடிக் கண்டுபிடிக்கும்படியாகத்தான் எங்கேயோ இரண்டொருத்தர் இருந்தார்கள். சூதாட்டம் சொல்லித் தந்தவர்களும் அப்படித்தான். திருட்டுத்தனம் சொல்லித் தந்த ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்வல்பமானவர்களும் யார் கண்ணுக்குமே அகப்படாமல் (சிரித்து) திருட்டுத்தனமாகத் தான் கற்றுக் கொடுத்தார்கள்! மற்ற கௌரவமான ஸெக்யூலர் ஸப்ஜெக்ட்களான கணிதம், ஆயுர்வேதம், பௌதிக - ரஸாயனாதிகள், சில்ப - சித்ர - ந்ருத்ய - கீதாதிகள், தநுர்வேதம் முதலியவற்றை மாத்திரம் சொல்லிக் கொடுத்தவர்களும் பூர்வ காலத்திலிருந்தே இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாமுங்கூட, ஸெகன்டரியாக தர்மாதர்மங்களையும் சொல்லிக் கொடுக்காமலில்லை. அதாவது moral instruction - நன்னெறி போதனை என்பது - இல்லாமல் ஸெக்யூலர் படிப்புங்கூட நடக்கவில்லை. ஏதோ பாடமாகச் சொல்லிக்கொடுத்து அதோடு விடுவது என்றில்லாமல், நிஜ வாழ்க்கையிலேயே மாணவன் நன்னெறியுடன் ஒழுகினாலொழிய அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற தள்ளியே இருக்கிறார்கள்.
நிகழ்காலக் கல்வி முறையிலோ, வெள்ளைக்கார ஆட்சியின் போது பேருக்காவது இருந்த 'மாரல் இன்ஸ்ட்ரக்க்ஷனும் நீர்ததுப் போய்விட்டிருக்கிறது. 'மாரல்' என்கிறபோது அதைத் தொட்டுக்கொண்டு தெய்வம், மதம் என்று வந்துவிடப் போகிறதே, தங்களுடைய 'முற்போக்கு' எனப்படுகிற கொள்கையான ஸெக்யுலரிஸம் அதனால் பாதிக்கப்பட்டு ஜனங்கள் எங்கே நல்லபடியாக ரூபமாகி விடுவார்களோ என்ற பயத்தினால் ஸ்வதந்திர ஸர்கார் இப்படிப் பண்ணிவிட்டது! வாத்தியார்களே பசங்களை நன்னெறிக்கு நேரெதிரான அரசியல், அராஜகம், ஸ்த்ரி விஷயம் ஆகியவற்றில் தூண்டி விடுவதாகவுங்கூட ஒரொரு இடங்களிலிருந்து ரிப்போர்ட் வருகிறது.
இந்தத் தமிழ்த் தேசத்தில் அதோடுகூட வெள்ளைக்காரர் காலத்திலும் இருந்து வந்த ஸம்ஸ்க்ருதப் படிப்பைக் குழியை வெட்டிக் குமுறப் புதைக்க எத்தனை உண்டோ அத்தனையும் வேறே பண்ணி, இந்தப்பெரிய தேசத்தின் நாகரிகத்திற்கும், அதுமட்டுமில்லாமல் இப்போது வாய்ப்பேச்சிலே மட்டும் முழக்கிக் கொண்டிருக்கிற ஒருமைப்பாட்டுக்கும் முதுகெலும்பாக இருந்த அத்புதமான பாஷை ஜனங்களுக்குக் கிடைப்பதற்கில்லாமல் பெரிய வஞ்சனை பண்ணியிருக்கிறது. மத த்வேஷமும், ஒரு ஜாதியிடமுள்ள த்வேஷமுந்தான் இதற்குக் காரணமென்பது பஹிரங்க ரஹஸ்யம். ஆனால் ஸம்ஸ்க்ருதம் மதப் புஸ்தகங்கள் மட்டும் இருக்கிற பாஷையில்லை. மத ஸம்பந்தம் என்று சொல்ல முடியாத அநேக தத்வப் புஸ்தகங்களும் அந்த பாஷையில்தான் இருக்கின்றன. லோகமே கொண்டாடுகிறபடி அறிவுக்கு விருந்தாக அவை இருக்கின்றன. காவ்ய - நாடகாதிகளும் வெளி தேசங்களிளெல்லாம் தர்ஜுமா பண்ணி வைத்துக்
கொள்ளும்படியான இலக்கிய அழகுகளோடு யதேஷ்டமாக இருக்கின்றன. அது மாத்திரமில்லை. ஆர்ட், ஸயன்ஸ் என்கிற கலைகள், பல விதமான விஞ்ஞானத்
துறைகள் எல்லாவற்றிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அநேக ஸ¨க்ஷ்மங்களைத் தெரிவிக்கிற புஸ்தகங்களும் இருக்கின்றன.ராஜநீதி என்கிற பாலிடிக்ஸ் -ஸ்டேட் க்ராஃப்ட், ஆயுர்வதேம் என்கிற வைத்தியம் என்றிப்படி ஒரு துறை பாக்கியில்லாமல் எல்லாவற்றிலும் உசந்த புஸ்தகங்கள் இருக்கின்றன. அது எப்படி மத பாஷை மட்டுமில்லையோ, அதே மாதிரி குறிப்பிட்ட ஜாதி பாஷையுமில்லை. காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை எல்லா ஜாதிப் படிப்பாளிகளுக்குமே அது பாஷையாயிருந்ததால்தான் இந்தப் பரந்த உபகண்டத்தையே அது அறிவு ரீதியில் ஒற்றுமைப்படுத்தி நிஜமான ஒருமைப் பாட்டை உண்டாக்கிற்று. விவேகாநந்தர் இருந்தார். எங்களைப்போலப் 'பத்தாம் பசலி சாஸ்த்ரக் குடுக்கை' களோடு சேர்க்காமல் புரட்சிக் கருத்தும் முன்னேற்ற மனப்பான்மையும் கொண்ட ஒருவராக அவரை இப்போது புரட்சியாளர்களும் ஸ்தோத்திரிக்கிறார்கள். அவரக்கு புத்தரிடமும் புத்த மதத்திடமும் அபிமானம் உண்டு. அப்படிப்பட்டவரே, இந்த தேசத்தின் உசந்த கல்ச்சருக்கு - கலாசாரத்துக்கு - பெரிய ஹானி எப்போது ஆரம்பித்ததென்றால் பெனத்தர்கள் ஸம்ஸ்க்ருதத்தைத் தள்ளி விட்டுப் பாலி பாஷையிலே தங்கள் புஸ்தகங்களை எழுதிப் பிரசாரம் பண்ணினபோதுதான் என்ற அளவுக்குச் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மஹா பெரிய குலதனத்தை நம்முடைய தமிழ் ஜனங்களுக்கு இல்லாமல் பண்ணியுள்ள விபரீதத்துக்கு விமோசனம் உண்டா, எப்படி, எப்போது என்பதே என் விசாரமாயிருக்கிறது...
பழங்காலத்தில் தர்ம போதனை இல்லாமல் படிப்பு மட்டும் என்று இருக்கவேயில்லை. போதித்தவர்கள் அதற்கேற்ற தார்மிக சீலங்களோடு இருந்தார்கள்.