இப்படி ஸ்வாரஸ்யத்திற்காகச் சுற்றி வளைத்து ட்ராமா போட்டு லக்ஷணம் சொல்லாமல் Factual -ஆக டீச்சருக்கு லக்ஷணம் கொடுக்கும் ஒரு டெஃபனிஷனும் இருக்கிறது:'திசதி வித்யாம் இதி தேசிக:' கல்வியைத் தருவதுதானே டீச்சரின் லக்ஷணம்? அதை நேராக, சுருக்கமாக இந்த வாசகம் தெரிவிக்கிறது. 'வித்யாம்' - கல்வியை, 'திசதி' - தருகிறார், 'இதி' - என்பதால், 'தேசிகர்' - தேசிகன் எனப்படுகிறார். இங்கே குரு என்று பொதுப்படச் சொல்கிறவருக்கு உள்ள அநேகப் பெயர்களில் 'தேசிக' என்பது வந்துவிடுகிறது.
வேதோபநிஷதங்களில் (வேதத்திலும் உபநிஷத்திலும்) 'தேசிகர்' என்ற வார்த்தை போடாவிட்டாலும், 'தேசிக'பத டெஃபனிஷன் எந்தக் கார்யத்தை, function -ஐ அவருக்குக் கொடுத்திருக்கிறதோ அதையே குருவின் கார்யமாக, function -ஆகச் சொல்லியிருக்கும் இடங்கள் அவற்றில் உண்டு.
'தேசிக' என்பதற்குள்ள டெஃபனிஷன்களில் ஒன்று 'திசை காட்டுபவனே தேசிகன்' என்று தெரிவிக்கிறது. ஆத்ம லக்ஷ்யத்தை அடைய எந்த வழியில் போகணும் என்று திசை காட்டும் கார்யம். குரு வழிகாட்டுகிறவர், சிஷ்யன் அவரைப் பின்தொடர்ந்து போகிறவன் என்பது பொதுவாகவே சொல்லும் விஷயந்தானே?