இங்கே அந்த ஒரு குருவே முழுக்க வழிகாட்டிக் கொண்டுபோய் சிஷ்யனை - குரு வந்து விட்டதால் முன்னே 'ஜீவன்' என்று சொல்லப் பட்டவன் 'சிஷ்யன்' ஆகி விடுகிறான்!அந்த சிஷ்யனை - மோக்ஷத்தில் சேர்ப்பதாகச் சொல்லவில்லை. கதையில் வழிப்போக்கன் கந்தார ஆஸாமிக்கு வழியைச் சொல்லிவிட்டு, அதோடு போய்விடுகிறான். ஆஸாமி தானாகவே அந்தப்படி க்ராமம், க்ராமமாக அதற்கு மேலேயும் விசாரித்துக்கொண்டே போய் ஊர் சேர்ந்தான் என்றுதான் இருக்கிறது. இப்படி விசாரித்து அறிந்த அவனை 'பண்டிதன்', 'மோதாவி' என்று அடைமொழி கொடுத்துச் சொல்லியிருக்கிறது. அதாவது அவன் ஸரியாக ஊர் போய்ச் சேர்ந்ததற்கு இந்த யோக்யதாம்சங்களும் ஸஹாயம் செய்ததாகச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
இதை ஜீவன் ஞானவழியில் போய் மோக்ஷத்தை அடைகிற விஷயத்தில்
பொருத்திப் பார்த்தால், முதலில் ஒரு குரு, அவர் பொதுவாக வழி சொல்லிவிட்டு முடித்து விடுகிறார், அப்புறம் ஜீவன் அந்தப்படி அநுஷ்டானங்களில், ஸாதனைகளில் ஒவ்வொன்றாக முன்னேறி - அதுதான் கந்தார ஆஸாமி க்ராமம், க்ராமமாக முன்னேறியது - அந்தந்த கட்டங்களிலேயும் அநுஷ்டாதாக்களை (நல்ல அநுஷ்டானமுள்ளோரை) விசாரித்து மேலும் விஷயங்கள் தெரிந்துகொண்டு போய்ப் போயே லக்ஷ்ய ஸித்தி பெறுகிறான் என்று ஆகும். அந்த அநுஷ்டாதாக்கள் எல்லாரும் உபகுருக்கள் என்ற ஸ்தானம் பெற்றுவிடுகிறார்கள். முதல் குரு - முக்யமானவர் அவர்தான், அவர் - அஞ்ஞானக் கண் கட்டை எடுத்த விட்டதால் இவனுக்கு ப்ரஹ்மஞானமே வந்துவிடாவிட்டாலும் நல்ல அறிவு விழிப்பும், அதாவது பண்டிதத் தன்மையும், சொல்லிக் கொடுத்ததை த்ருடமாகப் புத்தியில் நிறுத்திக் கொள்கிற மேதாவித்தன்மையும் உண்டாகி, அந்த இரண்டின் பலத்தால் இவன் அத்தனை உபகுருமார்கள் உபதேசித்ததையும் தப்பாமல் கடைப்பிடித்து ஸித்தி ஸ்தானத்தைச் சேருகிறான் என்பதாகவே அந்த கதை ஒப்புவமை ஜீவன் விஷயத்தில் அர்த்தம் கொடுக்கும். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.
பண்டிதனாக, மேதாவியாக சிஷ்யன் ஆகிறான் என்று ஏன் சொல்லவேண்டும் என்றால், சிஷ்ய லட்சணம், அவனுக்கான யோக்யதாம்சம் என்ன என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே இருக்கலாம்.
ஒரே குருவோடு முடிக்காமல் பல பேரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே step by step -ஆக முன்னேறியதாக ஏன் சொல்லவேண்டும்? 'வழிப்போக்கன் கண்கட்டை அவிழ்த்துவிட்டு, முழுசாக வழியும் நன்றாகச் சொல்லிக் கொடுத்தான்' என்று சொல்லியிருக்கலாமே!அல்லது இன்னுங்கூடப் பொருத்தமாக, காட்டிலே கந்தார ஆஸாமியைப் பார்த்துக் கட்டவிழ்த்துவிட்டவன், தானே 'லீட்' பண்ணி வழிகாட்டிக் கொண்டபோய் அவனை ஊரில் கொண்டு சேர்த்தான், என்று சொல்லியிருக்கலாமே!
இதைப்பற்றி யோஜித்துப் பார்த்ததில் எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இதிலே, 'ஆசார்யனைப் பெற்றவனுக்கே ஞானம்';அதாவது 'ஆசார்யனின் உபதேசத்தினாலேயே ஒருவன் ஞானம் பெற முடியும்' என்று இருப்பதுதான்
எல்லோருக்கும் பொதுவான உபதேசமாகத் தோன்றுகிறது. அங்கங்கே கிராமந்தோறும் பலபேர் வழியை நிச்சயப்படுத்தினாலும், முதலில் ஒருத்தன் சொன்னதைத்தான் அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த முதலாமவன் தான் கண் கட்டை அவிழ்த்தவனும். ஆக, அப்படி ஒரு ஆசார்யன், ஒரே ஆசார்யன் அவச்யம் என்று எடுத்துக்கொள்வதூன் பொதுவாகச் செய்யவேண்டியது.
ஆனாலும் சில பேருக்கு ஸம்ஸ்கார விசேஷத்தால், முக்யமாக ஒரு குரு வழி சொல்லித் தருவது, ஆனாலும் வேறே ஒரு, அல்லது பல உபகுருமார்கள் அந்த சிஷ்யனுடைய ஸாதனா மார்க்கத்தில் ஒவ்வொரு ஸ்டேஜில் அவனுக்கு ஸஹாயம் செய்வது என்றும் இருக்கிறது. நம் கதை உதாஹரிக்கிற மாதிரியான அந்த சிஷ்யர்களுக்கு முதலிலே ஒரு குரு வழி சொல்லிக் கொடுப்பார், அப்புறம் வேறே உபகுருமார்கள் அதற்கு அநுகூலமாகவே அந்த சிஷ்யர்களின்
ஸாதனையின்போது ஒவ்வொரு ஸ்டேஜிலும் அடுத்த ஸ்டேஜ் போக வழிகாட்டி முடிவாக முதல்வர் சொன்ன லக்ஷ்ய ஸ்தானத்தில் அவர்களைச் சேர்ப்பதாக இருக்கும்.
உபகுரு என்று இரண்டாவது ஸ்தானம் கொடுப்பதற்கில்லாமல் ஸம ஸ்தானம் கொடுக்கக் கூடியவர்களாகவே சில பேருக்கு - பிற்காலத்தில் மஹான்களாகவே ஆனவர்களிலுங்கூடச் சில பேருக்கு - ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் வேதம் சொல்லிக் கொடுத்து, முக்யமாக கர்மத்திற்கும் தர்மத்திற்குமே குருவாக சிஷ்யனின் க்ருஹஸ்தாச்ரமம் முடிகிறவரையில் இருக்கும் ஒருவர் 'வித்யாகுரு' என்பவர். பிற்பாடு அந்த வழிக்கு மேலாக ஸந்நியாஸ ஆஸ்ரமம் தருகிற 'ஆச்ரம' குரு என்கிறவர் இன்னொருவர். இப்படி இரண்டு பேர். இப்போது நான் சொன்னது இந்த இரண்டு விதமானவர் பற்றியில்லை. ஸந்நியாச்ரமம் தந்து ப்ரஹ்ம வித்யா உபதேசிக்கும் குருவாகவே ஒன்றுக்கு மேற்பட்டவர் இருந்திருப்பதைத் தான் சொல்கிறேன்.
(சிறிது சிந்தித்து) ஆரம்பகால வேதவித்யா குரு பற்றியுந்தான் கொஞ்சம் சொல்கிறேனே குருகுலத்திற்கு அதிபராக இருந்தவர்தான் அந்த வேதவித்யாகுரு. ப்ரஹ்மசாரி சிஷ்யர்களுக்கு அவரே முக்ய குரு. ஆனாலும் அவரே எல்லாப் பாடமும் நடத்தாமல் மற்ற குருமாரும் நடத்துவதாகவும் இருந்திருக்கிறது. 'தைத்திரீய'த்தில் 'சீக்ஷ£வல்லி'யில் சிஷ்யனின் வித்யாப்யாஸத்தை முடிப்பித்து அவனை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறபோது குரு கூறும் வசனங்களிலிருந்து அநேக குருமார்கள் அவனுக்குப் படிப்பித்ததாகத் தீர்மானமாகத் தெரிகிறது. பஹ§ வசனத்திலேயே - 'ப்ளூர'லிலேயே 'பன்மையிலேயே' - பேசிக்கொண்டு போகிறார்.
'ஆபஸ்தம்ப தர்ம ஸ¨த்ர'த்தில் ஒவ்வொரு வேதத்தையும் அதிலே நிபுரணராயிருக்கும் ஒவ்வொரு குருவிடம் அத்யயனம் பண்ணவேண்டும் என்றும், அப்போது அந்த ஒவ்வொருவரிடமும் இருக்கும்போது அவரிடமே அதீனமாக, அதாவது சரணாகதனாக இருந்து கொண்டிருக்கவேண்டும் என்றும் இருக்கிறது. இப்படிப் பார்த்தால், நாலு வேதங்களில் அநேகமாக அத்யயனத்திலேயே இல்லாத அதர்வத்தை விட்டு விட்டாலும், ஒருத்தனுக்கே மூன்று குருமார் என்று ஆகிறது.
கொஞ்சம் தள்ளியே, இன்னுங்கூட 'ரிலாக்ஸ்' பண்ணி, அந்த தர்ம சாஸ்த்ரப் புஸ்தகத்திலே, ஒரு சிஷ்யனுக்கு இஷ்டமான எந்த வித்யையையும் ஒரே குருவிடமிருந்து நன்றாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் வேறே குருவிடம் போய் க்ரஹித்துக் கொள்ளலாம் என்றும் இருக்கிறது.
வித்யா குரு என்கிற இவர், ஒரு சிஷ்யன் வித்யாப்பயாஸம் முடித்த பின்னும் பூர்ணமாகத் தனக்குப் பராதீனன் என்றே நினைத்து ஆக்ஞைகள் செய்வதை நிறுத்திவிடவேண்டும் என்றுங்கூட அந்த ஸ¨த்ரத்தில் இருக்கிறது. நம்முடைய தட்சிண தேசத்தில் ரொம்பவும் அநுஷ்டானத்திலுள்ள இந்த ஸ¨த்ரந்தான்.
ஏதோ கொஞ்ச நஞ்சம் இருக்கிற குருபக்தியையும் சிதிலப்படுத்துவதற்காக
இதையெல்லாம் சொல்லவில்லை. குரு பக்தி ரொம்ப, ரொம்ப, ரொம்ப அத்யாவச்யந்தான். ஆனால் ஸந்யாஸாச்ரமியான சிஷ்யன் தவிர மற்ற பேருக்கு அதற்கும் வரைமுறை கட்டியிருக்கிறது என்றே காட்ட வந்தேன்.
வித்யா குருவிடமிருந்து ஆச்ரம குருவுக்குப் போகலாம்.