குரு:முடிவான லக்ஷ்யத்திற்கும் இடைநிலைகளுக்கும்
கடைசிவரைக்கும் வழி சொல்லித் தருகிற குரு மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு வழி சொல்லி தருகிற குருக்களும் ஆதியிலிருந்து இருந்திருக்கிறார்கள். உபநிஷத்தில் அநேக இடங்களில், ஒவ்வொரு குருமாரிடம் ஒரோரு வித்யைகளை மட்டும் கற்றுக் கொண்டு மற்றதற்கு வேறே குருமார்களிடம் சிஷ்யர்கள் போனது தெரிகிறது.
அந்த வித்யை, இந்த வித்யை என்று பலதுக்குப் போகாமல், (ஆத்ம) ஸாக்ஷ£த்காரம் ஒன்றே goal என்று பிடித்துக்கொண்டு அதற்கே நேராக வழி பண்ணும் ஒரு ஸாதனா க்ரமம்தான் வேணும் என்று இருந்த சிஷ்யர்களும் உண்டு. அதே மாதிரி, ஸகல வித்யைகளும் அடங்குகிற அந்த ப்ரஹ்ம வித்யையை நேராகத் தாம் ஒருவரே உபதேசித்த குருமார்களும் உண்டு. நம் ஆசார்யாளே அப்படித்தான். பொது லோகத்திற்கு அவர் கர்மாநுஷ்டானம் சொல்லயிருக்கலாம், பக்தி - ஸ்தோத்ரம், பூஜை இத்யாதி சொல்லியிருக்கலாம், ஆனால் பக்வி (பக்கவம் பெற்றவர்) களுக்கென்று வேதாந்தமாக பாஷ்யங்கள், ப்ரகரணங்கள் பண்ணினபோது முழுக்க ஸாக்ஷ£த்காரத்தையே மத்யமாக வைத்துத்தான் -மத்யம், எல்லாமாகவும் வைத்துத்தான் - உபதேசம் பண்ணினார்.
ஒன்று என்ன கவனிக்கணுமென்றால், தன்னளவில் ப்ரஹ்மஞானியாகவே இருந்த குருமார்களும் சிஷ்யர்களின் பக்வம், அவர்கள் உள்ள ஸ்டேஜ் முதலியதைப் பொருத்து, நேரே ப்ரஹ்ம வித்யை உபதேசிக்காமல், அதற்கு உபாங்கம் மாதிரி, முன்னோடி மாதிரி - subsidiary, preliminary, auxiliary, ancillary என்றெல்லாம் சொல்கிறபடி உள்ள இதர வித்யைகளை உபதேசித்திருப்பதும் உண்டு.
இன்னொன்றும்: ப்ரஹ்மஜ்ஞானிகளான குருமார்களுக்கே அத்தனை வித்யைகளும் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. அத்தனையும் அடங்கும் அகண்ட ஆதார தத்வம் அவர்களுக்குத் தெரியும் என்பதால் அது ஒன்றொன்றும் தனித்தனியாய்த் தெரிந்துதானிருக்கணும் என்று இல்லை. அப்படி உள்ளபோது ப்ரஹ்ம வித்யை உபதேசிக்கும் அவரை முக்ய குருவாகக் கொண்டு, இதர வித்யைகளை மற்றவர்களிடமிருந்து உபதேசம் பெறுவதும் உண்டு.