குருவின் விநயம்

குருவின் விநயம்

சிஷ்யன் மாத்திரமில்லை, குருவும் விநயமுள்ளவராகத்தான் இருப்பார் என்றும் நாம் ப்ரச்னோபநிஷத்தில் பார்த்ததிலிருந்து தெரிகிறது. "கேளுங்கோ!எனக்குத் தெரிஞ்சா தெரிஞ்சது முழுக்க சொல்றேன்" என்று KS சொல்வதில்தான்!இப்படிச் சொன்னது அவருடைய 'அநுத்தத்த்வ'த்தைக் காட்டுகிறது என்று ஆசார்ய பாஷ்யம். 'உத்ததி' என்றால் கர்வம். 'அநுத்ததி' என்றால் கர்வமில்லாத குணம். அதாவது விநயம். அப்படி இருப்பதே 'அநுத்ததத்வம்'.

இங்கே ஆசார்யாள் அழகாகச் சொல்கிறார், 'பின்னாடி அந்த ஆறு பேர் கேட்ட கேள்விக்கெல்லாம் அவர் ஸரியாக பதில்கள் சொல்லி அவர்களுக்கு தெளிவு தருவதிலிருந்து அவர் ஆத்மசாஸ்த்ரம் நன்றாகவே தெரிந்தவர் என்றாகிறது. ஆனபடியால் தெரிஞ்சா சொல்றேன்' என்று அவர் சொல்வது ஞானக் குறைவினாலோ, விஷயத்தைப் பற்றி அவருக்கே ஸம்சயமிருந்ததாலோ அல்ல. அநுத்ததையால்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்' என்கிறார்.

சிஷ்யன் என்று ஒருத்தன் இவருக்கு விஷயம் தெரியும் என்று நம்பிக்கையின் மேலேயே வந்து கேட்கிறபோது குரு ஸ்தானத்திலிருப்பவர் அவனிடமே 'தெரிந்தால் சொல்கிறேன்' என்று சொல்லவேண்டுமனால் அதற்கு எவ்வளவு ஸத்ய சீலமும், அதைவிட விநயமும் இருக்கவேண்டும்?

குருவிடம் சிஷ்யனுக்கு விநயம் என்பதற்கு மறு பக்கமாக இப்படி ஒரு அபூர்வமான விநயத்தை குருவே சிஷ்யன் விஷயமாகக் காட்டுவதை, எந்த குருவும் அப்படிச் செய்யவேண்டும் என்பதற்காகவே உபநிஷத் காட்டியிருக்கிறது.

இதற்கு உச்ச ஸ்தானமாக நான் நினைக்கும் ஒன்று உண்டு.

தைத்திரீயோபநிஷத் KS - அதாவது குரு - நிறைய ப்ரம்மசாரிகள் தன்கிட்ட வந்து சிஷ்யாளாகச் சேரணும், சேரணும் என்று தவித்துக்கொண்டு ப்ரார்த்திக்கிறார். அதைப் பார்க்கும்போத ஒரு பையனுடைய வாழ்க்கைக்கே பொறுப்பேற்றுக்கொண்டு அவனை அகத்தோட வைத்துக்கொண்டு ரக்ஷிக்கும் கஷ்டமான பொறுப்பை எத்தனை இஷ்டத்தோடு அந்தக் கால குருமார்கள் வரவேற்றார்கள் என்று தெரிகிறது. சரிந்து ஆழமாகப் போய்முடிகிற ஒரு பள்ளத்தை நோக்கி எப்படி ஜலமெல்லாம் ஓடி வந்து ஒன்று சேருமோ, மாஸங்கள் எப்படி ஒன்று சேர்ந்து வருஷமாகிறதோ அந்த மாதிரி சிஷ்யர்கள் தன்னிடம் ஒன்று கூடணும் என்று ரொம்பவும் அழகாக அந்த KS சொல்கிறார். 'குரு கிடைக்கணுமே, கிடைக்கணுமே!' என்று சிஷ்யனுக்கு இருப்பதற்குக் குறைச்சலில்லாமல், சிஷ்யன் கிடைக்கணும் என்று குருவுக்கும் இருந்த ஹ்ருதய தாபம் இங்கே தெரிகிறது!அது இருக்கட்டும். விநயத்துக்கு வருகிறேன்...

இரண்டும் ரொம்ப அழகான, ஆழமான உபமானம் ஜலம் சேராவிட்டால் பள்ளம் ஒன்றுக்கும் ப்ரயோஜனமில்லை 'பாழுங் கிணறு' என்றே சொல்கிறோமே, அப்படி சிஷ்யர்களைப் பெறாத ஒரு வித்வானுடைய - வித்வானென்று உசந்த அர்த்தத்தில் சொல்கிறேன், அதாவது, ஆத்ம சாஸ்த்ரம் உள்பட எந்த வித்யையிலும் தேர்ந்தராயுள்ள ஒருத்தருடைய-வாழ்வே பாழ்தான் என்ற அபிப்ராயம் இங்கேவருகிறது. வெறும் பள்ளம் ஆபத்துக்கே ஹேது. உயிரை

வாங்கிவிடக்கூடியது!அதுவே ஜலம் நிரம்பினால் பல பேருக்கும் பரமோபகாரம்.

தன் வாழ்க்கை பாழாகிவிடாமல் அதை ஸமூஹத்துக்குப் பரம ப்ரயோஜனமாக்குவதே சிஷ்யன்தான் என்ற எண்ணத்தோடு குரு இருந்திருக்கிறார் என்று இங்கே தெரிகிறது.

மாஸங்கள் இல்லாவிட்டால் வருஷம் என்றே ஒன்று இல்லைதானே? பள்ளம் என்னும்போது பாழாகவாவது காட்டுவதற்கு ஒன்று இருக்கிறது. ஒரு எல்லைக்குள்ளே இருக்கிற சூன்யத்தை அப்படிக் காட்டுகிறோம். மாஸங்கள் இல்லாவிட்டாலோ வருஷம் என்கிறது முழு சூன்யமேதான்!காட்டவே ஒன்றுமில்லாத பெரியே கோளா!சிஷ்யர்கள் என்பவர்கள் ஒன்றுசேர்ந்துதான் ஆள் என்றே தானொருத்தன் என்ற அளவுக்கு ஆசார்யன் நினைத்திருக்கிறார்!தம் வாழ்க்கை பூரா அவர்களுக்கே என்று த்யாகம் செய்வது போதாதென்று, அவர்களை உயர்த்தி வைத்து, அவர்கள்தான் தம்முடைய வாழ்க்கையையே வாழ்க்கையாக்கித் தருகிறார்கள் என்று நினைக்கிற பாவம்!இவர் அவர்களுக்கா வாழ்ககையை த்யாகம் செய்கிறார் என்கிறபோது இவர் மேல் ஸ்தானத்திலிருந்து கொண்டு அவர்களுக்கு ஒன்றைக்கொடுக்கிறார், நல்லது செய்கிறார் என்றாகிறது. அவர்களாலேயே இவருக்கு வாழ்க்கை வாழ்க்கையாவது என்கிறபோதோ அவர்கள்தான் கொடுக்கிறவர்களாக, இவருக்கு நல்லது செய்கிறவர்களாக இருக்கிறார்கள்!இவர் கொடுக்கிறபோது இவருக்கு அவர்களுடைய நமஸ்காரம், அவர்கள் கொடுக்கிறபோது இவருக்கு அவர்களிடம் நன்றி, அதிலே உள்ளூர விநயம் என்றுதானே இருக்கும்?

இப்படி சிஷ்யன் விஷயமாகவே குருவுக்கு விநய மனப்பான்மையும் இருக்கும்படியாக நம்முடைய ஸநாதன தர்மத்தில் அந்த ஸ்தானத்தை வகுத்துத் தந்திருக்கிறது.

நேரே விநயமென்று அவனிடம் இவர் தழைந்திருப்பது இல்லை. அது அஸம்பாவிதம். சிஷ்யனுக்கே கெடுதி பண்ணுவது. மனஸுக்குள்ளே அந்த பாவமும் ஒரு குருவுக்கு இருக்கவேண்டும் என்னும் போதுதான் அதில் ஒரு ரஹஸ்யமானஅழகு, delicate, refinement -நுண்ணியபண்பு என்கிறது - ப்ரகாசிக்கிறது


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'சிஷ்ய'விளக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஸர்வமும் உபதேசிப்பதற்குச் சான்று
Next