அப்புறம் அவன் கர்வம் அடங்கி, அப்பாவையே அந்த உபதேசம் தரும்படிப் ப்ரார்த்தித்து, அவரும் உபநிஷத்திலேயே உச்சமான மஹாவாக்யத்தை அவனுக்கு உபதேசித்ததாகக் கதை போகிறது.
ப்ரமாணங்களில் உச்சஸ்தானம் - எண்சாண் உடம்புக்கு சிரஸே ப்ரதானம் என்பதுபோல ப்ரதானமான ப்ரமாணமாயிருப்பது - வேதம். அதற்கும் சிரஸ் உபநிஷத்துக்கள், 'ச்ருதிசிரஸ்' எனப்படுபவை. அவற்றில் வரும் உபதேசங்களிலும் சிரஸாகச் சிலதை மஹாவாக்யம் என்பார்கள. ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றே என்பதைச் சொல்கிற உபநிஷத் வாக்யங்கள் எல்லாவற்றுக்குமே மஹாவாக்யங்கள் என்று பேர் இருந்தாலும், அவற்றிலும் சிரஸாகக் குறிப்பாக வேதத்திற்கு ஒன்றாக நாலை ரொம்ப விசேஷித்துச் சொல்வார்கள். அந்த நாலிலும் சிரஸாகச் சொல்வது, நேராக ஒரு சிஷ்யனிடம் குரு 'நீயே ப்ரஹ்மம்' என்று சொல்கிற மஹாவாக்யம். அது ஸாமவேத மஹாவாக்யம். அப்படி சிரஸுக்குச் சிரஸுக்குச் சிரஸுக்குச் சிரஸுக்குச் சிரஸாக உள்ள அந்த வாக்யம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் கதையில் வருகிற பிள்ளைக்குத் தகப்பனார் உபதேசித்ததுதான்
சொல்ல வந்தது, அந்தப் பிள்ளை தன் குருமார்கள் தங்களுக்குத் தெரிந்த எந்த ஒரு வித்யையும் தனக்குச் சொல்லித்தராமல் இருந்திருக்க மாட்டார்கள் என்றதைத்தான்.