ஸ்ரீ சங்கர பகவத்பாதர் இயற்றிய பிரபஞ்சஸாரத்தில் காயத்ரீயைப் பற்றி
மந்திரத்தின் பொருள் :
ஓம்:- உடலிலும் வெளி உலகிலும் உள்ள அனைத்து சக்தியின் இறுகிய வடிவம்.
பூ:- உள்ளதனைத்திலும் உள்ள உண்மை.
புவ:- உண்மை உலகின் காரணமாக உருவடைந்தது.
ஸுவ:- எல்லாவற்றையும் தனதாக்கித்தானானது.
தத்:- சூரியமண்டலத்திலுள்ள அந்த மூலகாரணமான
ஸவிது:- உயிரினமனைத்தையும் தோன்றச் செய்கிற
வரேண்யம்:- நாடப்பட்ட - வேண்டப்பட்ட
தேவஸ்ய:- பேரொளியுடன் நல்லுதவி புரிகின்றவருடைய
பர்க:- பாபத்தை வறுத்தழிக்கின்ற பேரொளியை
தீமஹி:- தியானம் செய்வோம். தெய்வீகமான அறிவுக்கண்களால் கண்டுகளிப்போம்.
ய :-இவ்வாறு தியானிக்கப்பட்டதெதுவோ (அது)
ந :- நம் அனைவரது.
திய :- மனப்போக்கை - சித்தப்போக்கை
ப்ரசோதயாத் :- நல்வழிகாட்டி அதில் செல்லத்தூண்டுகிறது.
காயத்ரீ மந்திர சித்தி பெற நியமத்துடன் 24 லட்சம் தடவை ஜபம் செய்யவேண்டும். பாயஸம், எள், நெய், அருகம்புல், அரசு, ஆல், அத்தி இச்சி மரஸமித்துகள் இவற்றின் ஒவ்வொன்றாலும் 3000 தடவை ஹோமம் செய்யலாம். அல்லது எள்ளால் 24,000 தடவை ஹோமம் செய்யலாம். பாபம் நீங்கவும் நீண்ட ஆயுள் பெறவும் பாயஸம், நெய் சேர்த்தோ தனித்து நெய்யாலோ ஹோமம் செய்யலாம் அல்லது எள்ளும் அருகம்புல்லும் சேர்த்து 3,000 செய்யலாம். பால், நெய், தேன், இவற்றில் நனைத்த செந்தாமரைப் பூவால் 10,000 தடவை ஹோமம் செய்ய செல்வம் பெருகும். இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவான். உணவு நிறைவை நாடுபவன் அன்னத்தாலும் பிரும்மதேஜஸை விரும்புபவன் புரசுஸமித்தாலும் ஹோமம் செய்யலாம். விரும்பியது அனைத்தையும் பெற முன்குறிப்பிட்ட அனைத்து திரவியங்களாலும் ஹோமம் செய்யலாம்.
விரும்பத்தக்கதும், தன்னை அண்டியவரின் பாபத்தைப் போக்குவதும், உலகைப்படைத்துக் காத்துருள்வதுமான தேவனது பேரொளியைத் தியானிப்போம். அது நம் சித்தப்போக்கை நல்வழிப்படுத்தட்டும்.
இந்தப் பேரொளி பற்றிய தியான ஸ்லோகம்
முக்தாவீத்ரும ஹேம நீல தவளச்சாயைர் முகைஸ் த்ரீக்ஷணை :
யுக்தாபிந்துகலா நிபத்தமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாங்குசகசா : சுப்பரம் கபலாம் குணம்
சங்கம் சக்ரமதாரவிந்த யுகனம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே.
முத்து, பவழம், பொன் நீலம், வெண்மை ஆகிய வண்ணங்களுடன் கூடிய ஐந்து முகங்களுடனும் முக்கண்களுடனும் சந்திர கலை பொருந்திய கிரீடங்களுயனும் தத்வார்த்தம் விளக்குகின்ற 24 தத்துவங்களின் வடிவான அக்ஷரங்களின் வடிவினவளாக வரமுத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக்கபாலம், பாசக்கயிறு, சங்கு, சக்கிரம், இரண்டு தாமரைப்பூக்கள் இவற்றைக்கைகளில் ஏந்தியவளாக விளங்குகின்ற காயத்ரீ தேவியை வழிபடுகிறேன்.
அக்ஷஸ்ரக் குடிகா ஹஸ்தம் சுத்தஸ்படிக நிர்மலாம்.
ஸர்வ வித்யாமயீம் வந்தே காயத்ரீம் வேதமாதரம்.
51 மணிகள் கொண்ட ஜபமாலையும் கமண்டலமும், கைகளில் ஏந்தியவளும் தூயஸ்படிக மணி போன்று அப்பழுக்கற்றவளும் எல்லாவித்தைகளின் வடிவானவளும் வேதங்களின் தாயுமான காயத்ரீயை வணங்குகிறேன்.
யோ தேவஸ் ஸவிதாஸ்மாகம் தியோ தர்மாதிகோசரா :
ப்ரேரயேத் தஸ்ய யத்பர்க்க : தத்வரேண்ய முபாஸ்மஹே.
எந்த ஸவிதா எனும் தேவன் தர்மப்பணிகளில் ஈடுபடும்படி நமது அறிவைத் தூண்டுகிறாரோ அவரது சிறந்த விரும்பியதைத் தரவல்ல ஒளிவடிவைத் தியானம் செய்வோம். (இந்த ஸ்லோகம் காயத்ரீமந்திரப் பொருள் அடங்கியது. காயத்ரீ மந்திரத்தின் சக்தி பெற்றது)