த‌மிழ் நாட்டின் சிற‌ப்பு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அவ்வையாரைவிட‌த் த‌மிழ் நாட்டுக்கு உப‌கார‌ம் செய்த‌வ‌ர் இல்லை. ஆயிர‌ம் கால‌மாக‌ இந்த‌த் தேச‌த்தில் ஒழுக்க‌மும் ப‌க்தியும் இருந்து வ‌ந்திருக்கிற‌தென்றால் அது முக்கிய‌மாக‌ அவ்வையாரால்தான்.

முளைக்கிற‌போதே, குழ‌ந்தைக‌ளாக‌ இருக்கிற‌போதே, ந‌ல்ல‌ ஒழுக்க‌த்தையும், ப‌க்தியையும், உண்டாக்கி விட்டால்தான் பிற‌கு அவை நிலைத்து நிற்கும். தமிழ் நாட்டில் எத்த‌னையோ ம்காக‌விக‌ள், ப‌க்த‌ர்க‌ள் இருந்திருக்கிறார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ள் பாடிய‌து முக்கிய‌மாக‌ப் பெரிய‌வ‌ர்க‌ளுக்குத்தான். அவ்வையாருக்கு அவ‌ர்க‌ளைவிட‌க் க‌விதா ச‌க்தியோ, ப‌க்தியோ குறைச்ச‌ல் இல்லை. அவ‌ள் ரொம்ப‌ப் பெரிய‌வ‌ள்; ஞானி; யோக‌ சாஸ்திர‌த்தில் க‌ரை க‌ண்ட‌வ‌ள். ஆனாலும் அவ‌ள் குழ‌ந்தைக‌ளை ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக்க‌ வேண்டும் என்ப‌தில் முக்கிய‌மாக‌க் க‌வ‌ன‌ம் வைத்து, அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ குண‌ங்க‌ளையும், ஒழுக்கத்தையும், நீதியையும், தெய்வ பக்தியையும் போத‌னை செய்து பாடினாள்.

பேர‌க் குழ‌ந்தைக‌ள் ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டுமே என்ற‌ க‌ரிச‌ன‌த்தோடு ஒரு பாட்டி ந‌ல்ல‌து சொல்வ‌து மாதிரி அவ்வைப் பாட்டி அத்த‌னை த‌மிழ்க் குழ‌ந்தைக‌ளுக்கும் உப‌தேச‌ம் செய்தாள். அவ‌ளுடைய‌ அன்பின் விசேஷ‌த்தால் அவ‌ளுக்க‌ப்புற‌ம் எத்தனையோ தலைமுறைக‌ள் ஆன‌பிற‌கு, இப்போதும் நாம் குழ‌ந்தையாக‌ப் ப‌டிக்க‌ ஆரம்பிக்கிற‌ போதே, அவ‌ளுடைய‌ ‘ஆத்திசூடி’தான் முத‌லில் வ‌ருகிற‌து.

முத‌ல் பூஜை பிள்ளையாருக்கு; முத‌ல் ப‌டிப்பு அவ்வையார் பாட‌ல்.

இத்தனை ஆயிர‌ம் வ‌ருஷ‌ங்க‌ளாக‌ அவ‌ளுடைய வார்த்தை எப்ப‌டி அழியாம‌ல் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து என்றால் அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ளுடைய‌ வாக்கின் ச‌க்திதான். ப‌ர‌ம‌ ச‌த்திய‌மான‌ ஒன்றை, நிறைந்த‌ அன்போடு சொல்லிவிட்டால், அப்ப‌டிப்ப‌ட்ட‌ சொல் ஆயிர‌ம் கால‌மானாலும் அழியாம‌ல் நிற்கிற‌து. அவ்வை இப்ப‌டி அன்போடு உண்மைக‌ளை உப‌தேசித்தாள். ந‌ம்மில் க‌ம்ப‌ர், புக‌ழேந்தி, இள‌ங்கோ போன்ற‌ க‌விக‌ளைப் ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் இருக்க‌லாம். ஆனால் அவ்வை வாக்கு ஒன்றாவ‌து தெரியாத‌வ‌ர் இருக்க முடியாது.

அவ்வையாருக்கு இத்த‌னை வாக்கு ச‌க்தி எங்கேயிருந்து வ‌ந்த‌து? வாக்குச் ச‌க்தி ம‌ட்டும் இல்லை; அவ‌ளுக்கு ரொம்ப‌ தேக‌ ச‌க்தியும் இருந்திருக்கிற‌து. அத‌னால்தான் ‘ஐயோ, தமிழ்க் குழ‌ந்தை ஒன்றுக்குக்கூட‌ ந‌ம் வாக்கு கிடைக்காம‌ல் போக‌க் கூடாதே! ஒவ்வொரு குழ‌ந்தைக்கும் நாம் இந்த‌ உப‌தேச‌ங்க‌ளைக் கொடுக்க‌ வேண்டுமே!’ என்ற‌ ப‌ரிவோடு அந்த‌ப் பாட்டி ஒரு கிராம‌ம் மிச்ச‌ம் இல்லாம‌ல் ஓடி ஓடிப் போய் குழ‌ந்தைக‌களைத் தேடித் தேடி அவ‌ர்க‌ளுக்குத் த‌ன் நூல்க‌ளைப் ப‌ரிந்து ப‌ரிந்து போதித்தாள். இந்த‌ தேக‌ ச‌க்தி அவ‌ளுக்கு எப்ப‌டி வ‌ந்த‌து? பிள்ளையார்தான் அவளுக்கு இந்தச் சக்திகளையெல்லாம் கொடுத்தார்.

அவ்வையார் பெரிய‌ பிள்ளையார் ப‌க்தை. அந்த‌க் குழ‌ந்தை ஸ்வாமியை வேண்டிக் கொண்டுதான் அவ‌ள் சின்ன‌ வ‌ய‌சிலேயே கிழ‌வியாகிவிட்டாள். ஏன் அப்ப‌டிச் செய்தாள்? வாலிப‌மாக‌வும், ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தாக‌வும் இருந்தால் ஒருத்தனைக் க‌ல்யாண‌ம் செய்து கொண்டு குடித்த‌ன‌ம் ந‌ட‌த்த‌ வேண்டியிருக்கும். ப‌க்திக்குக் குடும்ப வாழ்க்கை இடையூறு என்ப‌தாலேயே, இடையூறுக‌ளை எல்லாம் போக்கும் விக்நேச்வ‌ர‌ரை வேண்டிக்கொண்டு கிழ‌வியாகிவிட்டாள்.

ஸுப்ர‌ம்ம‌ண்ய‌ ஸ்வாமிக்குக் க‌ல்யாண‌மாக‌ ஸஹாய‌ம் ப‌ண்ணின‌ பிள்ளையார் இவ‌ளைக் க‌ல்யாணமேயில்லாத‌ பாட்டி ஆக்கினார்! யாருக்கு எதைத் த‌ர‌வேண்டுமோ அதைத் த‌ருவார். இவ‌ளைச் சிறு பிராய‌த்திலேயே கிழ‌வியாக்கிவிட்டார். ஆனால் அவ‌ர் குழ‌ந்தை ஸ்வாமி அல்ல‌வா? அத‌னால், இவ‌ள் த‌ன்னிட‌ம் ம‌ட்டும் எப்போது பார்த்தாலும் ப‌க்தியாக‌ இருந்தால் போதாது, இவ‌ளால் எல்ல‌க் குழ‌ந்தைக‌ளும் ந‌ன்மை பெற‌ வேண்டும் என்று நினைத்தார். ஒரு சின்ன‌க் குடும்ப‌ம் வேண்டாம் என்று கிழ‌வி ஆன‌வ‌ளை, அத்த‌னை குழ‌ந்தைக‌ளையும் கொண்ட‌ பெரிய‌ தமிழ் நாட்டுக் குடும்ப‌த்துக்கே உப‌தேச‌ம் செய்கிற‌ பாட்டியாக்கிவிட்டார்!

அவ‌ளும் ஸ‌ந்தோஷ‌மாக‌ அந்த‌க் காரிய‌த்தைச் செய்தாள். மாறி மாறி பிள்ளையாரைத் தியானித்துப் பூஜிப்ப‌தும், குழ‌ந்தைக‌ளுக்கெல்லாம் உப‌தேச‌ம் ப‌ண்ணுவ‌துமாக‌த் த‌ன் வாழ்க்கையைக் க‌ழித்தாள்.

அந்த‌ப் பாட்டி அன்றைக்குச் சுற்றினாள். இன்றை‌க்கு நானும் எத்த‌னையோ சுற்றியிருக்கிறேன். அவ‌ள் த‌மிழ் நாடு ம‌ட்டும் சுற்றினாள். நான் இன்னும் ம‌லையாள‌ம், தெலுங்குதேச‌ம், பெங்கால், ஹிந்துஸ்தானி தேச‌ம் என்று ப‌ல‌ இட‌ங்க‌ள் சுற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் நான் பார்க்காம‌ல் இந்த‌ த‌மிழ் நாட்டில் ம‌ட்டும் பார்க்கும் விசேஷ‌ம் என்ன‌வென்றால், த‌மிழ்நாடு ஒன்றிலேயே இப்ப‌டிச் ச‌ந்து பொந்து, ம‌ரத்த‌டி, ஆற்ற‌ங்க‌ரை எங்கே பார்த்தாலும் ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்ப‌துதான்! த‌மிழ் நாட்டைவிட்டுக் கொஞ்ச‌ம் தாண்டிப் போனால்கூட‌ இப்ப‌டிக் காணோம்!

பிள்ளையார் த‌ம‌க்குப் பெரிசாக‌ ராஜ‌கோபுர‌ம், பிராகார‌ம் க‌ட்டிக் கோயில் எழுப்ப‌வேண்டும் என்று நினைக்க‌வில்லை. சின்ன‌தாக‌ ஒரு ச‌ந்நிதி வைத்துவிட்டாலும் அவ‌ருக்குப் போதும். த‌க‌ர‌க் கொட்ட‌கை போட்டால்கூட‌ அவ‌ருக்குத் திருப்திதான்! அதுகூட‌ வேண்டாம்! ஒரு க‌ட்டிட‌மும் கூரையும் இல்லாம‌ல் வான‌ம் பார்க்க‌ அர‌ச‌ம‌ர‌த்த‌டியில் அவ‌ர் பாட்டுக்கு அம‌ர்ந்து அநுக்கிர‌ஹ‌ம் ப‌ண்ணிக்கொண்டிருப்பார். ஆற்றங்க‌ரையில் எங்கே பார்த்தாலும் ந‌ன்றாக‌ உட்கார்ந்து கொண்டு ஆன‌ந்த‌மாக‌ இருப்பார்.

இந்த‌த் த‌மிழ்த் தேச‌த்தில் ம‌ட்டும் ஏன் இந்த‌ விசேஷ‌ம் என்று கேட்டால், அவ்வையாருடைய‌ விசேஷம்தான் இது என்று தோன்றுகிற‌து. அவ‌ள் த‌மிழ் நாட்டில் ஓடாத‌ இட‌மில்லை அல்ல‌வா? அவ‌ள் போன‌ இட‌த்திலெல்லாம் அவ‌ளுடைய‌ இஷ்ட‌ தெய்வ‌மான‌ பிள்ளையாரும் வ‌ந்து உட்கார்ந்து கொண்டு விட்டார்!

த‌மிழ் நாட்டின் சிற‌ப்புக்க‌ள் என்று புஸ்த‌க‌ங்க‌ளில் எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ள் போடுகிறார்க‌ள். ஆனால் என‌க்குத் தெரிகிற‌ பெரிய‌ சிற‌ப்பு இங்கே எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிற‌துதான்.