பிரத்யக்ஷ, அநுமானங்களோடு நியாயம் சொல்கிற மற்ற இரு பிரமாணங்கள் உபமானமும் சப்தமும் ஆகும்.
உபமானம் என்பது என்ன? நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்த ஒன்றின் ஒப்புவமையால் தெரிந்து கொள்வது. ‘கவயம்’ என்று ஒரு மிருகம் இருக்கிறது. அது எப்படியிருக்கும் என்று நமக்குத் தெரியவில்லை. காட்டெருமை மாதிரி ஒன்று அது; பார்த்தால் மாடு மாதிரியே இருக்கும் என்று அதைப்பற்றிச் சொல்லியிருக்கிறது. நாம் எங்கேயோ காட்டுப் பக்கம் போகிறோம். அங்கே இப்படி மாடு மாதிரியான ஒரு மிருகத்தைப் பார்க்கிறோம். இதுதான் கவயம் என்று தெரிந்து கொள்கிறோம். ‘உபமானம்’ என்பது இதுவே.
சப்தப் பிரமாணம் என்பது வாக்கு ரூபமான வேதப் பிரமாணமும், ஸத்துகளான பெரியவர்களின் வாக்குமாகும். நமக்குத் தெரியாத விஷயங்களை வேதமும், மஹான்களும் சொல்லும்போது அதிலே பொய்யே இருக்காது என்று பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். “வேதம் ஈச்வர வாக்கு” என்பதே நையாயிகர்களின் (நியாய சாஸ்திரக்காரர்களின்) கருத்து. அதனால் அது பிரமாணம். ஸத்ய ஸந்தர்களாக இருக்கப்பட்ட மஹான்கள் சொல்வதும் சப்தப் பிரமாணத்தில் சேர்க்கப்பட வேண்டியது.
இந்த நாலு பிரமாணங்களும் மீமாம்ஸையில் குமாரில பட்டரின் ஸித்தாந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றோடு கூட அர்த்தாபத்தி அநுபலப்தி என்ற இரண்டையும் சேர்த்து அவர் ஆறு பிரமாணங்களைச் சொல்கிறார். நம்முடைய அத்வைத வேதாந்தத்திலும் இந்த ஆறு பிரமாணங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
அர்த்தாபத்தி என்பதற்கு நம் சாஸ்திர நூல்களில் ஒரு உதாரணம் சொல்லிச் சட்டென்று புரிய வைத்திருக்கிறது. “பீனோ தேவதத்தோ திவா ந புங்க்தே” என்று சொல்லியிருக்கும். “குண்டன் தேவதத்தன் பகல் வேளையில் சாப்பிடுவதில்லை” என்று அர்த்தம். பகலில் சாப்பிடாமலும் அவன் இளைக்கவில்லை, குண்டாக இருக்கிறான் என்று இந்த வாக்கிலிருந்து ஆகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? அவன் இரவில் நன்றாகச் சாப்பிடுகிறான் என்று தெரிகிறது. சாப்பிடாமலிருப்பது, ஆனாலும் அதனால் இளைக்காமலிருப்பது என்பது மாதிரியான ஒரு முரண்பாட்டிலே இது முரண்பாடு இல்லை என்பதற்கான காரணத்தைக் கண்டு கொள்ள உதவுவதே ‘அர்த்தாபத்தி’ என்ற பிரமாணம்.
தேவதத்தன் இரவிலே சாப்பிடுகிறான் என்று நாம் ஊகிப்பது முன்னே இரண்டாவதாகச் சொன்ன ‘அநுமானம்’ என்ற பிரமாணத்தைச் சேராது. அநுமானத்தில் ஒரு விஷயத்தை ஊகிப்பதற்கு அதிலிருந்தே ஒரு அடையாளம் – மேகத்திலிருந்தே இடிமாதிரி, நெருப்பிலிருந்தே புகை மாதிரி – தோன்ற வேண்டும். இங்கே அப்படிப்பட்ட ‘லிங்கம்’ எதுவுமில்லை.
உபமானத்திலும் இப்படியே. ‘இது கவயம்’ என்று நாம் காட்டு மிருகத்தைக் கண்டவுடன் ஊகித்து விடுவதால் மட்டும் அது அநுமானமாகி விடாது. இங்கேயும் லிங்கத்தைக் கொண்டு மிருகத்தை நாம் அடையாளம் புரிந்துகொள்ளவில்லை. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த கவய வர்ணனையின் ஒப்புவமையாலேயே அறிகிறோம்.
கடைசிப் பிரமாணம் அநுபலப்தி. ஒன்று இல்லை என்பதை அறிந்து கொள்வதே அநுபலப்தி. அபாவம் என்பதை ஏழு பதார்த்தங்களில் கடைசியாக நியாயத்தில் சொல்லியிருக்கிறது என்றேனல்லவா? அந்த அபாவத்தை நாம் எதனால் தெரிந்து கொள்கிறோமே அதுவே அநுபலப்தி.
“அந்தக் கொட்டகையில் யானை இருக்கிறதா, போய்ப் பார்!” என்று சொன்னால் போய்ப் பார்க்கிறோம். யானை இருந்தால் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிற மாதிரியே, யானை இல்லாவிட்டால் இல்லை என்பதையும் தெரிந்து கொள்கிறோம். யானையைத் தெரியவில்லை. ஆனால் அது அங்கே இல்லை என்ற உண்மை தெரிகிறது. யானையைத் தெரியாததாலேயே இந்த உண்மை தெரிகிறது. இம்மாதிரி ஒன்று தெரியாததாலேயே உண்மை தெரிவது அநுபலப்தி.
நியாயத்தில் அர்த்தாபத்தியும், அநுபலப்தியும் இல்லை. மீமாம்ஸையிலும், அத்வைத வேதாந்தத்திலுமே உள்ளன. (மீமாம்ஸையிலும் பாட்ட மதத்தில் மட்டுமே அநுபலப்தி உண்டு; பிரபாகரரின் ஸித்தாந்தத்தில் கிடையாது.)