நிமித்த காரணம், உபாதான காரணம் என்று இரண்டு உண்டு. ஒரு பானை இருந்தால் அது உண்டாவதற்கு மண் என்று ஒரு வஸ்து இருக்க வேண்டும். மண்தான் பானைக்கு உபாதான காரணம். ஆனால் மண் எப்படிப் பானையாக ஆகும்? தானே அது ஒன்று சேர்ந்து பானையாகுமா? குயவன்தான் மண்ணைப் பானையாகப் பண்ண வேண்டியிருக்கிறது. மண்ணினால் ஒரு பானை உண்டாக வேண்டுமானால் அதற்குக் குயவன் என்ற காரணமும் வேண்டியிருக்கிறது. குயவன்தான் நிமித்த காரணம்.
ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் சொன்ன நிமித்தம் வேறு, இந்த நிமித்தம் வேறு.
அணுக்களை உபாதான காரணமாகக் கொண்டு ஈச்வரன் என்கிற நிமித்த காரணம் ஜகத்தைப் பண்ணியிருக்கிறது என்பது நியாய- வைசேஷிகக் கொள்கை.
மண்ணைப் பானையாக்குவதற்குக் குயவன் அவசியம் வேண்டும். அவன் இல்லாவிட்டால் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை என்ற விளைவை மண்ணிலிருந்து குயவன் உண்டாக்குகிறான் என்று சொல்வார்கள். இதற்கு ஆரம்பவாதம் என்றும், அஸத்-கார்ய-வாதம் என்றும் பெயர். ‘ஸத்’ என்றால் இருப்பது. ‘அஸத்’ இல்லாதது. வெறும் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை அதிலிருந்து விளைந்தது. இப்படித்தான் ஈச்வரன் அணுக்களைக் கொண்டே அணுக்களில் இல்லாத சிருஷ்டியைப் பண்ணியிருக்கிறான் என்கிறார்கள். இது நியாயக் கொள்கை.
ஸாங்கியர்களுக்குக் கடவுளே கிடையாது என்று முன்னேயே சொல்லியிருக்கிறேன். அவர்கள் பிரகிருதி என்ற இயற்கையே ஜகத்தாகப் பரிணமித்தது என்பார்கள். இது இந்தக் காலத்து நாஸ்திகர்கள் சொல்வது மாதிரியே என்று நினைத்து விடக்கூடாது. ஏன் என்றால் (நிர்குண பிரம்மத்தின் ஸ்தானத்தில் இருக்கப்பட்ட) சுத்த ஞான ஸ்வரூபமான ‘புருஷன்’ என்பவனையும் ஸாங்கியர்கள் சொல்வார்கள். ஜடமான ப்ரகிருதி இத்தனை ஒழுங்காக இயங்குவதற்கு புருஷனின் ஸாந்நித்தியமே காரணம் என்பார்கள். ஸாந்நித்தியம்தான் காரணம், புருஷனே நேராக ஈடுபட்டு ஸ்ருஷ்டியைச் செய்யவில்லை என்கிறார்கள். ஸூரிய வெளிச்சத்தில் தானாக பயிர் முளைக்கிறது, ஜலம் வற்றுகிறது, துணி காய்கிறது; ஸந்நிதி விசேஷத்தாலேயே இவை நடக்கின்றன. ஸூரியன் இங்கே உள்ள இன்ன பயிரை முளைக்க பண்ண வேண்டும், இந்த குட்டையிலுள்ள ஜலத்தை வற்ற வைக்க வேண்டும் என்று நினைத்தா இவை நடக்கின்றன? ஐஸைத் தொட்டால் கை மரத்துப் போகிறது. அதனால் அந்த ஐஸ் நம் கையை மரக்கப் பண்ண வேண்டும் என்று உத்தேசித்ததாகச் சொல்லலாமா? இப்படித்தான் புருஷன் ஸ்ருஷ்டியிலே கொஞ்சங்கூடப் பட்டுக் கொள்ளாவிட்டாலும் புருஷனிடமிருந்து பெற்ற சக்தியாலேயே பிரகிருதி இத்தனையையும் தன்னிலிருந்து தானே உண்டாக்கிக் கொள்கிறது. நிமித்த காரணம் என்பதாக ஈச்வரன் என்று ஒருவன் பண்ணவில்லை. பிரகிருதியே இப்படி ஸ்ருஷ்டியாகப் பரிணமித்திருக்கிறது என்பது ஸாங்கியர் கொள்கை. இதற்குப் பரிணாமவாதம் என்று பேர்.
நையாயிகர்களின் அஸத்-கார்ய-வாதத்திற்கு மாறாக ஸாங்கியர்கள் ஸத்-கார்ய-வாதத்தைச் சொல்கிறார்கள். உபாதான காரணமான மண்ணிலே இல்லாத பானையை நிமித்த காரணமான குயவன் பண்ணினான் என்று அஸத்-கார்ய-வாதிகள் சொல்கிறார்களல்லவா? ஸத் கார்யவாதிகளான ஸாங்கியர்கள் “மண்ணுக்குள்ளே பானை முதலிலேயே இருக்கத்தான் செய்தது. எள்ளுக்குள்ளேயே இருக்கிற எண்ணெயைத்தானே வாணியன் செக்கிலே ஆட்டி வெளிக்கொண்டு வருகிறான்? அதுபோல மண்ணில் மறைமுகமாக இருக்கிற பானைதான் பிறகு காரியத்தால் வெளியிலேயும் பானையாக வருகிறது. மண்ணை உபயோகித்தால்தானே பானை வருகிறது? எள்ளை வைத்துப் பானை பண்ணை பண்ண முடியுமா? அல்லது மண்ணைப் பிழிந்து எண்ணெய் எடுக்க முடியுமா? பானையிலே இருப்பதனைத்தும் மண்ணின் அணுக்கள்தான். அந்த அணுக்களின் ரூபத்தை இப்படி ஒழுங்கு செய்ததால் பானை என்ற ஒன்று உண்டாயிருக்கிறது” என்பார்கள்.
நம் ஆசாரியாள், “ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை ஸ்ருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்மக் குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது – பால் தயிராகப் பரிணமித்த மாதிரி என்றாலும் தப்பு. அப்படிச் சொன்னால் பால் தயிரானபின் தயிர் தான் இருக்குமே தவிர பால் இருக்காது. இம்மாதிரி பரமாத்மா ஜகத்து பரிணமித்தபின் இல்லாமல் போய் விட்டார் என்றால் அது மஹா தப்பல்லவா? அதனால் பரிணாமமும் இல்லை. தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே இன்னொரு பக்கம் மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார். இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான், வேஷம்தான்! ஒருத்தன் ஒரு வேஷம் போட்டுக் கொள்கிறான் என்றால் அப்பொழுது அவன் அவனாக இல்லாமல் போய் விடுகிறானா என்ன? அப்படித்தான் இத்தனையும் வேஷம், கண்கட்டு வித்தை! இத்தனையாலும் பாதிக்கப்படாமல் ஸத்வஸ்து ஏகமாக அப்படியே இருந்துகொண்டேயிருக்கிறது” என்று ஒரே அடியாக அடித்துவிட்டார். இதற்கு “விவர்த்த வாதம்” என்று பெயர்.
ஒரு கயிறானது பாம்பு மாதிரித் தோன்றுவது விவர்த்தம். கயிறு என்ற உபாதான காரணத்தை வேறு ஒரு நிமித்த காரணம் பாம்பாக மாற்றவில்லை. எனவே இது ஆரம்ப வாதம் இல்லை. கயிறு பாம்பாகப் பரிணமிக்கவுமில்லை; அதாவது transform ஆகிவிடவில்லை. கயிறு கயிறாகவே தான் இருக்கிறது. ஆனால் நம் அஞ்ஞானத்தால் பாம்பு மாதிரித் தோன்றுகிறது. இப்படியே அஞ்ஞானம் அல்லது அவித்யை என்பதால் பிரம்மம் லோகமாகவும் தனித்தனி ஜீவர்களாகவும் நமக்குத் தெரிகிறது.
ஆசார்யாள் சொன்ன இந்த உண்மைக்குப் போவதற்கு நியாயத்தின் யுக்திவிசாரணை படி போட்டுக் கொடுக்கிறது.
யுத்தியால் பதார்த்தங்களைத் தெரிந்து கொண்டு, அதிலிருந்து வைராக்யம் பெற்று, சுகதுக்கங்கள் இல்லாத வெறுமையான அபவர்க்கம் என்ற ஸ்தானத்துக்குப் போவதோடு நியாய-வைசேஷிகம் நிறுத்திவிடுகிறது. த்வைதத்தில் இதற்குமேல் போக முடியாது. அத்வைதமாக ஒரே ஸத்தைப் பிடித்து அதுவே நாம் என்கிற போதுதான் நிறைந்த நிறைவான மோக்ஷம் கிடைக்கிறது. ஆனாலும் இப்போதிருக்கிற லோக வாழ்வோடு திருப்திப்படாமல் இதற்கு மேலே ஒரு அபவர்க்கத்துக்குப் போக நியாயம் தூண்டி விடுகிறது என்பதே விசேஷந்தான்.
இந்த சாஸ்திரத்தின் இன்னொரு பெருமை, அது எத்தனை தினுசான யுக்தி உண்டோ அத்தனையையும் கொண்டு வாதம் பண்ணி, பௌத்தர்கள், ஸாங்கியர்கள், சார்வாகர்கள் (எனப்படும் லோகாயதர்கள்) ஆகியோருடைய கொள்கைகளை ஆக்ஷேபித்து ஈச்வரன் என்ற கர்த்தா உண்டு என்று நிலை நாட்டியிருப்பதாகும்.