தெய்வங்களுள் பேதம் ஏன் ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒவ்வொரு ஸ்வாமியையும் குறித்ததாக ஒவ்வொரு புராணம் இருப்பதால் சில ஸந்தேஹங்கள் வருகின்றன. சைவமான புராணங்களில், ‘சிவன் தான் பரமாத்ம தத்வம்; சிவன்தான் ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் எல்லாவற்றுக்கும் அதிகாரி. இவர் சொல்படி இவருக்கு அடங்கித்தான் விஷ்ணு பரிபாலனம் பண்ணுகிறார். அவர் [விஷ்ணு] வெறும் போகி, மாயையில் அகப்பட்டுக் கிடப்பவர். சிவன்தான் யோகி, சிவன்தான் ஞானஸ்வரூபி’ என்றெல்லாம் சொல்லியிருக்கும். ‘சிவனுக்கு விஷ்ணு அடங்கினவர். சிவனை விஷ்ணு பூஜை பண்ணுகிறார். சிவனுக்கு அடங்காமல் சில சமயத்தில் அவர் சிவனை எதிர்த்தபோது தோற்றுப் போய் மானபங்கப்பட்டிருக்கிறார்’ என்றெல்லாம் சொல்லி, இது ஒவ்வொன்றுக்கும் திருஷ்டாந்தமாக அநேக கதைகளைச் சொல்லியிருக்கும். வைஷ்ணவமான புராணங்களைப் பார்த்தாலோ இதை அப்படியே தலைகீழாகத் திருப்பி வைத்து, அதற்கும் ஆதரவாக ஏகப்பட்ட விருத்தாந்தங்களைக் காட்டியிருக்கும். “பேய் பிசாசுகளைக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் உட்கார்ந்திருக்கிற சிவனா ஒரு ஸ்வாமி? சக்கரவர்த்தியான வைகுண்டநாதனின் தாஸர்தான் அவர்” என்று அவற்றில் சொல்லியிருக்கும்.

சிவன் விஷ்ணு என்ற இரண்டு தெய்வங்களுக்குள் மட்டும் என்றில்லை. ஒவ்வொரு புராணத்திலும் ஏதோ ஒரு தெய்வத்தை – அது ஸுப்ரமண்யராயிருக்கலாம், பிள்ளையாராக இருக்கலாம், அல்லது சூரியனாக இருக்கலாம். ஏதோ ஒன்றை – முழுமுதற் கடவுளாகச் சொல்லி மற்ற எல்லா தெய்வங்களையும் மட்டம் தட்டி, அவை இந்த ஒரு மூர்த்தியைத்தான் பூஜை பண்ணுகின்றன, அப்படிப் பண்ணாமல் அஹம்பாவப்பட்டபோது இதனிடம் தோற்றுப் போய் மானபங்கப்பட்டிருக்கின்றன என்று கதைகளிருக்கும்.

இதைப் பார்த்தால், ‘என்ன இப்படி ஒன்றுக்கொன்று வித்தியாஸமாய் இருக்கிறதே! இதில் எது நிஜம், எது பொய்? எல்லாம் நிஜமாக இருக்கமுடியாது. சிவன் விஷ்ணுவைப் பூஜை பண்ணினார் என்றால் விஷ்ணு சிவனை பூஜை பண்ணுவது அயுக்தம். இப்படி நடக்காது. திரிமூர்த்திகளுக்கு மேல் அம்பாள் இருக்கிறாள் என்றால் அவளே பரமேச்வரனிடம் பதிவிரதையாக அடங்கிக் கிடக்கிறாளென்பது தப்பு. அதனால் எல்லாப் புராணமும் நிஜமாய் இருக்கமுடியாது. எது நிஜம்? எது பொய்? ஒரு வேளை எல்லாமே பொய்தானா? அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறதே! என்று ஸந்தேஹங்கள் தோன்றுகின்றன.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் எல்லாம் நிஜமாக இருக்க முடியாதென்று தோன்றினாலும், எல்லாமே நிஜம்தான். ஒரு சமயத்தில் தோற்றுப்போன ஸ்வாமியே இன்னொரு சமயம் ஜெயிக்கிறது. ஒரு சமயம் பூஜை பண்ணின ஸ்வாமியே இன்னொரு சமயம் பூஜை பண்ணப்படும் ஸ்வாமியாகிறது.

இது எப்படி? எதற்காக இப்படி இருக்க வேண்டும்?

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய சகலத்தையும் செய்கிற பரமாத்மா ஒன்றேதான் இருக்கிறது. அதுவேதான் இத்தனை தெய்வங்களாகவும் ஆகியிருக்கிறது. எதற்காக? இந்த லோக வியாபாரம் ருசியாக இருக்கவேண்டும் என்பதற்காக எல்லா ஜனங்களையும் ஒரே அச்சாகப் படைக்காமல் பலதரப்பட்ட மனோபாவ வித்தியாஸங்களுடையவர்களாகத் தானே பரமாத்மா சிருஷ்டித்திருக்கிறார்? இந்த ஒவ்வொரு மனோபாவத்துக்கும் பிடித்த மாதிரி பரமாத்மாவும் ஒவ்வொரு ரூபத்தை எடுத்துக் கொண்டால்தான் அவரவரும் தங்களுக்குப் பிடித்ததை இஷ்ட தேவதையாய்க் கொண்டு உபாஸித்து நல்ல கதியைப் பெற முடியும். அதற்காகத்தான் ஒரே பரமாத்மா பல தெய்வரூபங்களை எடுத்துக் கொள்கிறது.

ஒவ்வொருவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியிடமே அசையாத நம்பிக்கை ஏற்படவேண்டுமல்லவா? “இதுதான் பரமாத்ம ஸ்வரூபம், பரப்பிரம்ம ஸ்வரூபம். இதற்கு மேல் ஒரு சக்தியில்லை”- என்ற உறுதியை அவர்களுக்கு ஊட்ட வேண்டுமல்லவா? அதற்காகத்தான் ஒவ்வொரு ரூபத்திலும் மற்ற ரூபங்களையெல்லாம்விடப் பெரியதாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறது. மற்ற ரூபங்கள் தன்னை பூஜை பண்ணினதாகவும் தன்னிடம் தோற்றுப் போனதாகவும் காட்டியிருக்கிறது.

இப்படிச் சொன்னதாலேயே ஒவ்வொரு தெய்வமும் மற்ற தெய்வங்களைப் பூஜித்ததுமுண்டு, மற்ற தெய்வங்களால் பூஜிக்கப்பட்டதுமுண்டு; மற்ற தெய்வங்களிடம் தோற்றதுமுண்டு, மற்ற தெய்வங்களால் தோற்கப் பண்ணினதுமுண்டு என்று ஆகிறதல்லவா?

இவற்றிலே சைவமான புராணங்களில் சிவனின் உயர்வை மட்டுமே காட்டுகிற விஷயங்களாகத் தொகுத்துக் கொடுத்திருக்கும்; வைஷ்ணவமான புராணங்களில் விஷ்ணுவின் உத்கர்ஷத்தை [மேன்மையை] சொல்கிற ஸம்பவங்களை மட்டுமே சேர்த்துத் தந்திருக்கும். இப்படியே அம்பாள், ஸுப்ரமண்யர் முதலிய மற்ற தேவதைகளைப் பற்றிய ஒவ்வொரு புராணத்திலும் அது ஒன்றே முழுமுதல் தெய்வம் என்னும்படியான விருத்தாந்தங்களை மட்டும் கொடுத்திருக்கும்.

ஆக, உத்தேசம் மற்றவற்றை மட்டம் தட்டுவதில்லை. எது ஒருத்தனுக்கு உபாஸ்யமோ அதனிடமே இவன் அனன்ய பக்தி செலுத்தும்படி பண்ணவேண்டும் என்பதே உத்தேசம். அன்னியமாக இன்னொன்றிடம் பக்தி சிதறாமல் இருப்பதுதான் ‘அனன்யம்’ என்பது. இந்த தெய்வத்தை உயர்த்திக் காட்டி இதன் உபாஸகனை உயர்த்துவதுதான் லக்ஷ்யமேயன்றி, மற்றவற்றை நிந்திப்பது அல்ல. இதை ‘நஹி நிந்தா நியாயம்’ என்பார்கள்.

எல்லாம் ஒரே பரமாத்மாவின் பல ரூபங்கள் என்று பார்க்கிறவர்களுக்கு அனன்ய பக்தி என்பதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் ஒரு தெய்வத்துக்கு இன்னொன்று அன்னியம் என்று அவர்கள் நினைத்தால்தானே ஒன்றைவிட்டு இன்னொன்றிடம் திரும்புவதைப் பற்றிய பேச்சே வருகிறது? எல்லாம் ஒன்றின் வேஷமே என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்போது எல்லாப் புராணங்களும் ஒரே பரமாத்மாவின் லீலா வினோதம்தான்; அந்த ஒன்றேதான் தன்னை வெவ்வேறு மனோபாவக்காரர்கள் அநுபவிக்கும்படியாக வெவ்வேறு தெய்வம்போல் ஆக்கிக் கொண்டு இத்தனை கூத்தும் அடிக்கிறது என்று புரிந்து கொண்டு, ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிற எல்லாக் கதைகளையும் ரஸிக்கவும் பக்தி செலுத்தவும் முடிகிறது.

பாணாஸுரன் கதையிலே சிவன் கிருஷ்ணனிடம் தோற்றுப் போகிறாரா? திருவண்ணாமலைக் கதையிலே விஷ்ணு சிவனுடைய அடியைக் காணமுடியாமல் தோற்றுப் போகிறாரா? இரண்டும் ஸத்யந்தான். கிருஷ்ண பக்தர்களை அவர்தான் பரமாத்மா என்று நம்பப் பண்ணுவதற்காக ஈச்வரன் தயங்காமல் கிருஷ்ணனிடம் தோற்றுப் போகக் கூடியவர்தான். சைவர்களுக்கு ஈச்வரனிடம் பிடிப்பை உறுதியாக்க வேண்டும் என்பதற்காக விஷ்ணு தம்மையே குறைத்துக் கொண்டு ஈச்வரனிடம் தோற்கக் கூடியவர்தான். நாம் ஜயித்தவர் – தோற்றவர் என்று வித்யாஸமாக நினைத்தாலும் அவர்களுக்குத் தாங்கள் வேறு இல்லை, ஒருவரேதான் என்று தெரியுமல்லவா? தன்னையே ஜயித்துக் கொள்வதாவது? தன்னிடம் தோற்றுப் போவதாவது? அதனால் இதெல்லாம் விளையாட்டுத்தான்! இப்படி ஒரே பரமாத்மா பல ரூபம் எடுத்துக்கொண்டு லீலை செய்கிறது.

இன்னொரு காரணமும் உண்டு. ஜனங்களுக்கு வழி காட்டியாக இருப்பதுதான் அது. லோகத்தில் பக்தி விருத்தியாக வேண்டும். இதற்காக பகவானே வழி காட்டவேண்டும். அதற்காகத்தான் சில கதைகளில் சில க்ஷேத்ரங்களில் விஷ்ணுவே பக்தனாக இருந்து கொண்டு ஈச்வரனுக்குப் பூஜை செய்கிறார்; வேறு சில கதைகளில், க்ஷேத்ரங்களில் சிவன் விஷ்ணுவுக்குப் பூஜை பண்ணுகிறார்.

மற்ற தெய்வங்களும் இப்படியே. பொதுவாக சைவம், வைஷ்ணவம் என்றே நாம் பெரிய பிரிவுகளாகப் பிரிந்திருப்பதால் ஈச்வரன், விஷ்ணு என்ற இரண்டையே அதிகம் சொல்கிறேன்.

லோகத்தில் பாதிவ்ரத்யம் [கற்பு நெறி] இருக்கவேண்டும். அதனால் அம்பாளே பதிவிரதைகளுக்கெல்லாம் வழி காட்ட வேண்டும். அப்போது, தான் பராசக்தியாக இருந்தாலும் பதிக்கு அடங்கி ஒடுங்கினவளாகத்தானே இருக்க வேண்டும்?

ஆக, புராணங்களிலே ஒன்றுக்கொன்று வித்தியாஸமாக, இந்த ஸ்வாமிதான் உசத்தி என்றும், அந்த ஸ்வாமிதான் உசத்தி என்றும் காட்டும்படியான கதைகள் வருவது அந்தந்தக் குறிப்பிட்ட சமயத்தில் ஒன்றிடமே இதுதான் பரமாத்மா என்று நாம் ஆழமாக ஈடுபட்டு நிற்பதற்காகச் சொன்னது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றைத் தாழ்த்தியது போல் சொன்னது உண்மையில் அதை நிந்திப்பதற்காக இல்லை; இன்னொன்றை இதுவே ஸகலமும் என்று கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் செய்வதுதான் உத்தேசம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is இதிஹாஸங்களின் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஒன்றே பலவாக
Next