ஸ்தல புராணங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

புராணங்களை நம்புகிறவர்கள் கூட ‘ஸ்தல புராணங்கள்’ என்று ஊருக்கு ஊர் சின்னதாக இருக்கிறவற்றை நம்புவதற்கு யோஜிக்கிறார்கள். படிப்பாளிகள் எல்லாப் புராணமுமே பொய்யென்றால், ஸ்தல புராணம் வெறும் குப்பை என்று சொல்லும் அளவுக்குப் போய் விடுகிறார்கள். என்ன காரணம் என்றால் அநேக ஸ்தல புராணங்களில் ஒவ்வொன்றிலும், ‘இங்கேதான் இந்திரனுக்கு சாப விமோசனம் ஆயிற்று’, ‘இங்கேதான் அகஸ்தியர் பார்வதி-பரமேச்வராள் திருக்கல்யாணக் காட்சியைப் பார்த்தார்’ என்று இருக்கிறது. ‘இது எப்படி ஸாத்தியம்? அவரவரும் தங்கள் ஊரை உயர்த்திச் சொல்ல வேண்டுமென்பதற்காக இட்டுக் கட்டி வைத்திருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்.

இதைப் பற்றி விஷயம் தெரிந்த ஆஸ்திகர்களைக் கேட்டால், ‘கல்பத்துக்குக் கல்பம் அதே கதைகள் திரும்பவும் நடக்கிறது. அதே கதை நடந்தாலும் ஒரே அச்சாக இல்லாமல் கொஞ்சம் கொஞ்சம் பேதமும் இருக்கும். ஒரு கல்பத்தில் ஒரு ஸ்தலத்தில் நடந்த கதை இன்னொரு கல்பத்தில் இன்னொரு ஸ்தலத்தில் நடக்கிறது. அதனால்தான் அநேக ஸ்தலங்களில் ஒரே புராணக் கதை நடந்ததாகச் சொல்லப்படுகிறது’ என்கிறார்கள்.

இதை ஒத்துக் கொள்ள முடியாதவர்களுங்கூட, ஒவ்வொரு ஊர்க்காரர்களுக்கும் புராணங்களில் வரும் புண்ணிய சம்பவங்கள் தங்கள் ஊரில் நடந்ததாக சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருக்கிறதென்று நல்ல முறையில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாமர ஜனங்கள் தங்கள் ஊருக்கே ராமர் வந்தார், கிருஷ்ணன் வந்தார், மஹரிஷிகள் வந்தார்கள், அங்கே மஹா கொடூரமான பாவங்களுக்கு விமோசனம் கிடைத்தது என்ற நம்பிக்கையைப் பெற்றதால் அந்த கோவில்களுக்குப் போவதிலும் உத்ஸவங்கள் நடத்துவதிலும் உத்ஸாஹம் அடைந்து, நல்ல பக்தி சிரத்தைகளைப் பெற்றிருக்கிறார்களா, இல்லையா? இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். ‘புத்திசாலி’களான நம்முடைய சந்தேகங்கள் இல்லாமல் அந்த எளிய ஜனங்கள் பெறும் நிறைவை ஏன் குலைக்க வேண்டும்? இந்த மாதிரி விஷயங்களில் உண்மை என்பதாக ஏதோ ஒரு யதார்த்தத்தை (fact) சொல்லி, அதனால் சாமான்ய ஜனங்கள் பெறும் திருப்தியைக் கெடுத்து அவர்களுக்கு புத்திக் கலக்கத்தை உண்டாக்கக் கூடாது. பகவானே கீதையில் சொல்கிறார்:

ந புத்திபேதம் ஜனயேத் அக்ஞானாம் கர்ம ஸங்கினாம்|

இப்படிச் சொல்வதால் ஸ்தல புராணங்கள் யதார்த்தமான சத்தியத்தைச் சொல்லவில்லை என்கிற கோஷ்டியோடு நான் சேர்ந்துவிட்டதாகவும், ஆனாலும் அதனால்கூடப் பொதுஜனங்களிடம் நல்ல விளைவை ஏற்படுத்த முடிகிறது என்பதற்காகத்தான் அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதாகவும் நினைத்துவிடக் கூடாது. பெரும்பாலான ஸ்தல புராணங்கள் உண்மையான விருத்தாந்தங்களைத்தான் சொல்கின்றன – என்பதே என் நம்பிக்கை. சிலது வேறு தினுஸாக இருக்கலாம். அப்படி இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்றுதான் சொல்கிறேன். எல்லா ஸ்தலப் புராணமுமே பொய்யென்று நான் சொல்ல வரவில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உபந்யாஸமும் திரைப்படமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸ்தல புராணங்களின் ஸத்தியத்வம்
Next