முறை வேறாயினும் முடிவு ஒன்றே : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

சுருக்கமாக, யக்ஞங்கள் என்றால் ஒவ்வொரு தேவதைக்கும் மந்திர த்வாரா ஆஹூதிகளை அர்ப்பணம் பண்ணுவது என்று அர்த்தம். ஒரு விதத்தில் அந்த மந்திரங்களே தேவதா ஸ்வரூபமாகவும் இருக்கின்றன. இன்னொரு விதத்தில் ஆஹூதி செய்யப்படும் திரவியங்களைப் போலவே, இந்த மந்திராக்ஷரங்களும் தேவதைகளுக்கு ‘ஆஹாரம்’ மாதிரி ஆகி, அவற்றின் சக்தியை விருத்தி பண்ணுகின்றன. மந்திரம் என்பது இப்படி multipurpose (பல நோக்கங்கள்) உள்ளதாக இருக்கிறது.

நாம் வரி கொடுக்கிறோம். அவையெல்லாம் ஒரே ராஜாங்கத்துக்குப் போகிறவைதான். ஆனாலும் தொழில் வரி, நிலவரி, மோட்டார் வரி என்று பல வரிகளைச் செலுத்தும்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இடம் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனியாக முத்திரைக் கடிதாசு இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு கர்மாவுக்கும் மந்திரம், தேவதை, திரவியம், காலம் எல்லாம் தனித்தனியே இருக்கின்றன. இப்படி ஒவ்வொன்றுக்கும் கிரமம் வேறுவேறாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் பரம தாத்பர்யம் பரமேச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணுவதுதான். வெவ்வேறு ஆபீஸில் டாக்ஸ்களைக் கட்டினாலும், ஒரே கவர்மென்டுக்குப் போகிறது என்ற அறிவு நமக்கு இருக்கிற மாதிரி, பல தேவதைகளை உத்தேசித்து வெவ்வேறு யக்ஞங்கள் செய்தாலும், எல்லாம் ஒரே பரமேச்வரனைச் சேர்கிறது என்ற ஞானத்தோடு, பாவத்தோடு செய்ய வேண்டும். நாம் செலுத்துகிற வரிக் கணக்குகளையும், இப்படி வரி செலுத்துகிற நம்மையுமேகூட ராஜாவுக்கு (அல்லது குடியரசானால் ராஜாங்கத் தலைவருக்கு) தெரியாது. பரமேச்வரனாகிய ராஜாவுக்கோ நம் ஒவ்வொருவர் விஷயமும் நமக்கே தெரிவதைவிட நன்றாகத் தெரியும். யக்ஞ ரூபமான நம்முடைய கர்மா வரியைச் சரியாகக் கொடுக்கிறோமா என்ற கணக்கும் அவனுக்குத் தெரியும். அவனை ஏமாற்ற முடியாது.

ஒவ்வொரு யாக கர்மாவுக்கும் இவ்விதமாக மந்திரம், திரவியம், தேவதை என்று மூன்று உள்ளன. வாயில் மந்திரம், கையில் [ஆஹூதி பண்ண வேண்டிய] திரவியம், மனஸில் தேவதை[யின் தியானம்].

 

 

 

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஜீவஹிம்ஸை செய்யலாமா ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  கலியில் ஜீவபலி உண்டா ?
Next