உபநிஷதங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இந்த ஆரண்யகங்களுக்கு முடிவிலேதான் உபநிஷதங்கள் வருகின்றன. ஸம்ஹிதை மரம் என்றால், அதற்கு பிராம்மணம் பூ, ஆரண்யகம் காய், உபநிஷதந்தான் முடிவான பழம் (பலம்-பலன்). ஞானமார்க்கத்திலே ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை ஸாதித்துக் கொடுப்பதற்காக ஏற்பட்ட நேர் ஸாதனம் உபநிஷத்துதான். இதில் நம்மைச் சேர்ப்பதற்கே ஸம்ஹிதையும், பிராம்மணமும், ஆரண்யகமும் இருக்கின்றன. உபநிஷத்துக்களில் பலதரப்பட்ட வித்யைகள், யக்ஞங்கள், தேவதா உபாஸனைகள் அங்கங்கே சொல்லியிருந்தாலும், முக்கியமாக அது தத்வ விசாரம்தான். கர்மா எல்லாம் விட்டுப் போகிற நிலையைச் சொல்வதுதான் உபநிஷதங்களின் பரம தாத்பரியம்.

இதை வைத்துத்தான் வேதத்தையே கர்மகாண்டம், ஞான காண்டம் என்று இரண்டாக பிரித்திருக்கிறது. இதையே (முறையே) பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்று சொல்வதுண்டு.

கர்ம காண்டத்தை ஆராய்ச்சி பண்ணி, அதுவே முடிந்த முடிவான பலன் என்று ஜைமினி மஹரிஷி செய்திருக்கிற சாஸ்திரத்துக்குப் “பூர்வ மீமாம்ஸை” என்று பெயர். இம்மாதிரியே ஞானகாண்டத்தை விசாரித்து அதையே பரம தாத்பரியமாக முடிவு பண்ணி, வியாஸர் செய்த பிரம்ம ஸூத்ரம் “உத்தர மீமாம்ஸை” எனப்படுகிறது. கர்ம காண்டத்தோடு பார்க்கும்போது, உபநிஷத் பாகமான ஞானகாண்டம் ரொம்பச் சின்னதுதான். இதற்கேற்பவே ஜைமினி ஸூத்ரம் ஆயிரம் ஸெக்ஷன் கொண்ட, “ஸஹஸ்ர அதிகரணி”யாகவும், பிரம்ம ஸூத்ரம் இருநூறுக்கும் குறைவான அதிகரணமுள்ளதாகவும் இருக்கின்றன. ஒரு விருக்ஷத்தில் இலைகள் நிறைய இருந்தாலும் புஷ்பமும் பழமும் கொஞ்சமாகவே இருக்கிறாற்போல், வேத விருக்ஷத்தில் கர்மகாண்டம் நிறையவாகவும், உபநிஷத் பாகம் கொஞ்சமாகவும் இருக்கிறது.

உபநிஷத்தின் தத்வ விசாரம் என்பது இதர தேசங்களில் ஃபிலாஸஃபிகாரர்கள் புத்தி பூர்வமாக ரொம்பவும் ஆழமாக ஸத்யத்தை ஆராய்கிற மாதிரி மட்டும் முடிந்து விடவில்லை. புத்தியினால் ஆராய்ந்ததை அநுபவத்தில் தெரிந்து கொள்வதுதான் முக்கியம். ஹல்வா தித்திக்கிறது என்று தெரிந்து கொண்டால் மட்டும் என்ன பிரயோஜனம்? அதைச் சாப்பிட்டுத் தித்திப்பை அநுபவிக்க வேண்டும். மற்ற ஃபிலாஸஃபிகளுக்கு இல்லாமல் உபநிஷதங்களுக்கு மாத்திரம் இருக்கிற பெருமை, அது மந்திராக்ஷரங்களைக் கொண்டதாதலால், எந்த தத்வங்களைச் சொல்கிறதோ அதை மந்திர சப்தத்தின் சக்தியால் அநுபவத்துக்குக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறது. மற்ற தேசத்து ஃபிலாஸஃபிகள் போல் வெறும் அறிவாராய்ச்சியாக அதை அநுபவத்தில் உறைக்கும்படியாகப் பண்ணுவதற்கு எப்பேர்ப்பட்ட வாழ்முறை வேண்டுமோ அப்பேர்ப்பட்ட தர்மங்கள் நிறைந்த ஒழுக்கமான வாழ்க்கையை வேதத்தின் கர்மகாண்டம் சொல்லியிருக்கிறது. அதன்படி வாழ்ந்து, தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு, அப்புறம் கர்மாக்களை விட்டுவிட்டு, இந்த உபநிஷத்துக்களை ஒருத்தன் அநுஸந்தானம் பண்ணும்போது, அதிலுள்ள தத்வங்கள் வெறும் புத்திவாதமாக இல்லாமல் அவனுடைய அநுஷ்டானத்திலேயே ஜீவனோடு பிரகாசிக்கின்றன. இந்த தத்வங்களுக்கெல்லாம் உச்சியில்தான் ஜீவப் பிரம்ம அபேதம் இருக்கிறது.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டறக் கலக்கும் அந்த உச்சஸ்தானத்தைப் பிடிப்பதற்காகத்தான், கர்மாக்களால் பக்குவம் பெற்ற ஒருத்தன், ஸகல கர்மங்களையும் விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கி கொள்வது. அப்படி வாங்கி கொள்கிற ஸமயத்தில் அவனுக்கு மஹா வாக்யங்கள் என்று நாலு மந்திரங்கள் உபதேசிக்கப் படுகின்றன. இந்த நாலும் ஜீவப்பிரம்ம அபேதத்தைச் சொல்லுபவையே. அவற்றை மனனம் பண்ணி, நிதித்யாஸனம் என்ற பெயரில் ஆழ்ந்து தியானம் செய்தால், அபேத நிலை பிரத்யக்ஷமாகவே ஸித்தித்துவிடும். இப்படிப்பட்ட நாலு மஹாவாக்கியங்களும் நாலு உபநிஷத்துக்களில்தான் இருக்கின்றன. எத்தனையோ கர்மா, தினுசு தினுசான பிரார்த்தனை, வாழ்க்கை விதிகள் எல்லாம் ஸம்ஹிதை, பிராம்மணம் முதலான பாகங்களில் இருந்தாலும், முடிந்த முடிவாகப் பரம லக்ஷ்யத்தைப் பிடிக்க வேண்டும் என்று வருகிறபோது, அதை ஸாதித்துக் கொடுப்பதாக இருப்பது உபநிஷத் மஹாவாக்கியங்கள் தான்.

“உயர்ந்த அநுபவ ஞானமேதான் பிரம்மம்” என்ற தாத்பரியத்தில் ஐதரேய உபநிஷத்தில் ஒரு மஹா வாக்கியம் இருக்கிறது. இது ரிக்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத்து. “நான் பிரம்மமாக இருக்கிறேன்” என்று அர்த்தமுள்ள ஒரு மஹாவாக்யம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது. இது யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. “நீயும் பரமாத்மாவும் ஒன்றுதான்” என்று சிஷ்யனுக்கு குரு உபதேசிக்கிற ரூபத்தில் சாந்தோக்ய உபநிஷத்திலே ஒரு மஹா வாக்கியம் இருக்கிறது. இதுதான் ஸாம வேதத்துக்கான மஹா வாக்கியம். ‘இந்த ஆத்மா என்பது பிரம்மமேதான்’ என்று சொல்கிற மஹாவாக்யம், மாண்டூக்ய உபநிஷத்தில் வருகிறது. இது அதர்வ வேதத்தைச் சேர்ந்தது. இப்படியாக நாலு வேதங்களிலும் விசேஷமாக இருக்கப்பட்ட மஹாவாக்கியங்கள் அந்தந்த வேதத்தைச் சேர்ந்த உபநிஷத்துக்களிலேயே வருகின்றன.

ஆசார்யாள், கடைசியில் உபதேச ஸாரமாகச் சொன்ன “ஸோபான பஞ்சக”த்தில், வேதத்தை (ஸம்ஹிதையை) அத்யயனம் பண்ணுங்கள், அதில் (பிராம்மணத்தில்) சொல்லியுள்ள எல்லா கர்மாக்களையும் பண்ணுங்கள் என்று ஆரம்பித்து, இந்த மஹாவாக்யங்களில் உபதேசம் வாங்கிக் கொண்டு, அவற்றையே அநுஸந்தானம் செய்து பிரம்ம பாவத்தை அடையுங்கள் என்று முடிக்கிறார்.

அத்தனை வேதங்களுக்கும் முடிவான நிலை உபநிஷத்தில் சொன்னதுதான். உபநிஷத்துக்களுக்கே “வேதாந்தம்” என்ற பெயர் இருக்கிறது. அந்தம் என்றால் முடிவு; வேதத்துக்கு அந்தமாக இருப்பது வேதாந்தம்.

உபநிஷத்துக்கள் இரண்டு விதத்தில் வேதத்துக்கு முடிவாக இருக்கின்றன. ஒவ்வொரு சாகையை எடுத்துக் கொண்டாலும் முதலில் ஸம்ஹிதை, அப்புறம் பிராம்மணம், பிறகு ஆரண்யகம் என்று வந்து, அந்த ஆரண்யகத்தின் கடைசியில் உபநிஷத்து வருகிறது. அதனால் ஒவ்வொரு சாகைக்கும் முடிவாக இருக்கிறது. அதோடுகூட வேதங்கள் சொல்லும் தாத்பரியத்துக்கும் முடிவாக, லக்ஷ்யமாக இருப்பது உபநிஷத்துக்கள்தான். இப்படியாக புஸ்தகங்களில் அமைப்பு (order of texts), தாத்பரியம் என்ற இரண்டு விதத்திலும் வேதங்களுக்கு முடிவாக இருப்பவை உபநிஷத்துக்கள்.

ஊருக்குக் கோயில், கோயிலுக்குக் கோபுரம், கோபுரத்துக்குச் சிகரம் என்று உயர்ந்துகொண்டே போகிற மாதிரி, நம்முடைய தத்துவங்களுக்கு சிகரமாக, வேத முடிவாக இருப்பது உபநிஷத்துக்களே.

‘உப-நி-ஸத’ என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். ‘பிரம்மத்துக்குப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது’ என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ‘உபநயனம்’ என்றால், ‘குருவிடம் கொண்டு விடுவது’, ‘பரமாத்மாவிடம் கொண்டு விடுவது’ என்று இரண்டு விதமாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் இருப்பதுபோல, ‘உபநிஷத்’ என்றாலும் இப்படி இரட்டைப் பொருள் கொள்ளலாம்.

பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்கிற உபதேசம் என்றால். அது ரஹஸ்யமானது என்று அர்த்தம். மதிப்புத் தெரியாத அபக்குவிகளுக்கு அது சொல்லத் தக்கதல்ல. இதனால்தான் உபநிஷத்களுக்குள்ளேயே கதா பாகங்களாக இல்லாமல் ரொம்பவும் ஸூக்ஷ்மமான தத்வங்களைச் சொல்கிறபோது, ‘இது உபநிஷத், இது உபநிஷத்’ என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும். வேதத்தில் மறை பொருளாக இருக்க வேண்டியவற்றை ‘ரஹஸ்யம்’ என்பார்கள். வேதாந்தமான உபநிஷத்தில் அப்படிப்பட்ட ரஹஸ்யங்களையே ‘உபநிஷத்’ என்று சொல்லியிருக்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பிராம்மணம், ஆரண்யகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிரம்ம ஸ¨த்ரம்
Next