வேதங்கள் அனந்தம், அதாவது முடிவேயில்லாதவை. வேதாந்தம் என்றாலோ வேதத்தின் முடிவு என்று அர்த்தம். வேதமுடி (ச்ருதிசிரஸ்) என்றாலும் வேதத்தின் முடிவுதான், முடிவே இல்லாத வேதத்தின் முடிவு என்றால் என்ன அர்த்தம்? தத்வரீதியிலே வேதங்களில் என்ன தாத்பரியங்களைச் சொல்லியிருக்கிறதோ, அவை எல்லாவற்றுக்கும் முடிந்த முடிவான ஆத்ம ஸாக்ஷாத்காரம் இந்த உபநிஷத் பாகத்திலேயே சொல்லப் பட்டிருப்பதால், அது வேதாந்தமாகிறது–அதாவது வேதத்தின் முடிவாக, முடிவான கொள்கையாக இருக்கிறது.
பிராம்மணனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கற்று, ஓதி, அப்பியஸிக்க வேண்டிய சாகை என்ற வேதப் பிரிவுகளில் முதலில் ஸம்ஹிதை, பிறகு பிராம்மணம், அதற்கப்புறம் ஆரண்யகம் என்று வந்து, ஆரண்யகத்தின் கடைசியிலே அந்த சாகையின் முடிவாக, அந்தமாக, உபநிஷத்துக்களே வருவதாலும் அவை வேதாந்தமாகின்றன.
கணக்கேயில்லாத வேதங்களை இப்படிப் பல சாகைகளாகப் பிரித்ததன் நோக்கம் என்ன? ஜீவன் பரிசுத்தி பெற்று ஸாக்ஷாத்காரம் பெறுவதற்கான ஸகல விஷயங்களையும் அவனுக்குச் சொல்லவேண்டும். அத்யயன ரூபத்திலும், யக்ஞம் முதலிய அநுஷ்டானங்களாலும் அவன் செய்ய வேண்டிய கர்மா, அதற்கான மந்திரங்கள்; அப்புறம் யக்ஞத்தின் தத்வார்த்தமான விசாரணை; கடைசியில் பரமாத்ம தத்வம் பற்றிய விசாரணையும், அதன் நிதித்யாஸனமும் (அதாவது தியானம் பண்ணிப் பண்ணி அநுபவ பூர்வமாக உணர்ந்து கொள்வதும்)–இப்படி மூன்றையும் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு ஜீவன் கடைத்தேறுவதற்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு கொடுக்க வேண்டும். கடைத்தேறுவதற்கு அனந்தமான வேதங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற அவசியமே இல்லை. அப்படித் தெரிந்துகொள்வது அடியோடு ஸாத்யமில்லாத காரியமும் ஆகும். பரத்வாஜர் மாதிரியான மஹரிஷிகளும் வேத மலையில் மூன்று பிடிதான் எடுத்துக் கொள்ள முடிந்தது என்று கதை சொன்னேனல்லவா? ஆகையால் எவ்வளவு தெரிந்துகொண்டால் ஒரு ஜீவன் ஸம்ஸ்காரம் பண்ணப்பட்டு, அதாவது அழுக்கு எல்லாம் நீங்கி சுத்தமாகிப் பரம்பொருளோடு கலப்பதற்குப் போதுமோ அதையே ஒரு “சாகை” என்று அனந்தமான வேதங்களிலிருந்து பிரித்துக்கொடுத்திருக்கிறது.
ஒரு சாகை என்பது ஒரு பிராம்மணன் பிறப்பது முதற்கொன்டு இறக்கும் வரையில் செய்ய வேண்டிய கர்மாக்களுக்கு உபயோகமான விஷயங்கள் அடங்கியிருப்பது. ஒரு சாகையை அத்யயனம் பண்ணி, அதாவது அதன் ஸம்ஹிதா மந்திரங்களை உருவேற்றி மனப்பாடமாக அத்யயனம் பண்ணி, இந்த மந்திரங்களை வைத்துக்கொன்டு, பிராம்மணத்திலுள்ளபடி யக்ஞங்களைச் செய்து, அப்புறம் இந்த வெளிக்காரியத்துக்கும் உள் தத்வத்துக்கும் பாலம் போட்டுக் கொடுக்கிற ஆரண்யங்களை விசாரம் செய்து, கடைசியில் உள்தத்வம் மட்டுமேயான உபநிஷத்துக்களை அனுஸந்தானம் பண்ணி, பிறகு உள்ளும் புறமும் எல்லாம் ஒன்றாகிவிடுகிற மோக்ஷ நிலையை அடைந்து விடுவதற்கு வசிதியாக, ஒவ்வொரு சாகையும் வகுக்கப்பட்டிருக்கிறது. பக்குவிகளானால் ஒரே ஒரு மந்திரம்கூடப் போதும், ஆத்மாவை கடைத்தேற்றுவதற்கு! இருந்தாலும், பொதுவாக ஒரு ஸாதாரண ஜீவன் பரிசுத்தமாவதற்கு எத்தனையோ கர்மாக்கள், உபாஸனை, ஜபம், தியானம் இவற்றைச் செய்ய வேண்டியதாகிறது. அப்படி ஒரு ஸாமானிய ஜீவன் கடைத்தேறுவதற்கான அளவுக்கு ஒவ்வொரு சாகையிலும் மந்திரங்களையும், கர்மாக்களையும் தத்வோபதேசங்களையும் கொடுத்திருக்கிறது.