[1954-ல்] எனக்கு ஷஷ்டியப்த பூர்த்தி பெரிய உத்ஸவமாகப் பண்ணவேண்டும் என்பதற்கு பக்தர்கள் என்னிடம் அநுமதி கேட்டார்கள். அப்போது நான் சொன்னது இதுதான்: “எனக்கென்று ஒரு உத்ஸவமும் வேண்டாம். இந்த தேசத்தைவிட்டு என் காலத்தோடு வேதம் போய் விட்டது என்ற அபக்கியாதி எனக்கு ஏற்படாதபடி பண்ணிவிட்டால் அதுதான் எனக்கு உத்ஸவம்” என்று சொன்னேன். அதைப் பண்ண என்னால் முடியாவிட்டால் எனக்கு உத்ஸவம் கொண்டாடிக் கொள்ள லாயக்கே இல்லை என்று சொன்னேன்.
இதற்கு மேல்தான், ‘ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்’ என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது வேத பாஷ்யங்களைப் படிப்பதற்கு உற்சாகமூட்டுவதற்காக ஏற்படுத்திய டிரஸ்ட்.
வேதங்களுக்கு அர்த்தம் சொல்லித் தாத்பரியங்களை விளக்குவதே வேத பாஷ்யம். வேத மந்திரங்களின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்வதான இந்தக் காரியம் வேதத்தை அத்யயனம் பண்ணின பிற்பாடு செய்ய வேண்டியதுதான்.
ஆனாலும் அப்போதிருந்த நிலையில் வேத அத்யயனம் பண்ணுகிறதாவது கொஞ்சம் கொஞ்சம் நடந்து வந்தது. அதற்கப்புறம் பாஷ்யம் படிப்பதுதான் அடியோடு போய் விடுகிற மாதிரி இருந்தது. அதனால் அதற்கு முதலில் உயிர் கொடுக்க வேண்டும் என்று இந்த ஏற்பாட்டை செய்தது.
அப்புறம் [1957-ல்] கலவையில் நான் பீடத்துக்கு வந்து ஐம்பது வருஷம் முடிந்ததைக் கொண்டாட வேண்டும் என்று பக்தர்கள் ஆசைப்பட்டபோது, வேத பாஷ்யத்தோடு நின்றால் போதாது என்று, நேரே வேத அத்யயனத்துக்கு ஏற்பாடு பண்ணி வேதபாடசாலைகளை எடுத்துக் கொண்டு நடத்துவதற்கு கலவை பிருந்தாவன டிரஸ்ட் ஏற்படுத்தினோம். கலவைதான் என்னுடைய குரு, பரமகுரு என்கிற இரண்டு பூர்வாசாரியார்களின் ஸித்தி ஸ்தலம். அங்கே அவர்களுக்கு பிருந்தாவனம் [ஸமாதி] இருக்கிறது. அவர்களுக்கு அர்ப்பணமாகிற விதத்தில் கலவை பிருந்தாவன டிரஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டது.
பிற்பாடு, ‘வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை’ என்று ஒன்றை ஏற்படுத்தி, அநேக இடங்களில் வேத ஸம்மேளனங்கள் நடத்திப் பண்டிதர்களைக் கெளரவிக்க ஏற்பாடாயிற்று.
அப்புறம் [1960-ல்] இந்த எல்லாக் காரியங்களையும் சேர்த்து பிடித்து நடத்துவதற்காக ‘வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்’ என்பதை ஏற்படுத்திற்று. இப்போது இந்தியா முழுவதிலும் வேத பாடசாலைகள் நடத்துவதற்கும், வேத பண்டிதர்களை கெளரவிப்பதற்கும் இந்த டிரஸ்ட்தான் பொறுப்பேற்றுக்கொண்டு, அநேக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
இதிலே ஒரு திட்டம்: பாடசாலைகளிலோ அல்லது சம்பிரதாயமான வைதிகர்களின் கிருஹத்திலோ இந்தியா முழுதிலும் எங்கே எந்தப் பையன் அத்யயனம் செய்தாலும் சரி, அப்படிப்பட்டவர்களுக்காகப் பல இடங்களில் வருஷத்துக்கு ஒரு பரிக்ஷை வைக்கிறோம்.
ஒரு சாகை அத்யயனம் பண்ணி மனப்பாடமாக்கிக் கொள்ள எட்டு வருஷம் பிடிக்கிறது. எட்டு வருஷமும் இப்படி வருஷாந்தரப் பரிக்ஷை நடத்தி, முடிகிறபோது பட்டம் தருகிறோம். முன்னே நான் வேதங்களை அத்யயனம் பண்ணுவதில் பதம், கிரமம் என்று பல இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? இதன்படி ‘பதாந்த ஸ்வாத்யாயி’ அல்லது ‘க்ரமபதி’ என்று பட்டம் கொடுக்கிறோம்.
பட்டம் இருக்கட்டும். திரவிய சகாயம் செய்து அல்லவா வேத வித்யையை ஊக்கவேண்டும்? இதற்கு என்ன செய்கிறோமென்றால், படிக்கிற காலத்திலேயே அத்யாபகர் (குரு), வித்யார்த்திகள் (சிஷ்யர்கள்) ஆகிய இருவருக்கும் ஒரு விகிதாசாரப்படி சம்பாவனைகளைக் கணக்குப் பண்ணிக் கூட்டிக் கொண்டு போகிறோம். இதிலிருந்து அத்யாபகருக்கு மாஸா மாஸம் கொடுத்து விடுகிறோம். அரைகுறையாகக் கற்றுக்கொண்டு வித்யார்த்தி ஓடிவிடக் கூடாது என்பதால் அவனுக்கு மட்டும் அத்யயனத்தை முடிக்கிறபோதுதான் சேர்த்துத் தருகிறோம்.
இந்த திட்டத்தின்படி, ஒரு குரு ஒரு வருஷத்துக்கு ஒரு வித்யார்த்திக்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய் வரையில் பெறுகிறார். பத்து வித்யார்த்திகள் இருந்தால், குருவுக்கு ஒரு வருஷத்தில் 1500 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொரு வித்யார்த்தியின் பங்கிலும், வருஷத்துக்கு முந்நூறு, நானூறு [ரூபாய்கள்] சேர்ந்து எட்டு வருஷ முடிவில் அவனுக்கு இரண்டாயிரத்திலிருந்து நாலாயிரம் ரூபாய் வரையில் lump sum – ஆகக் (ஒட்டு மொத்தமாக) கொடுக்கிறோம்.
இப்படி அத்யயனம் முடித்தபின் காவியம், சாஸ்திரம் முதிலயவற்றையும் படித்து, ஸம்ஸ்கிருத பாஷையில் நல்ல ஞானத்தை அபிவிருத்தி பண்ணிக்கொண்டு, “ஸலக்ஷண கனபாடி” என்ற தகுதியைப் பெறுகிற வித்யார்த்திக்கு 1500-லிருந்து 3000 ரூபாய் வரை சம்பாவனை செய்கிறோம். ஒவ்வொரு வித்யார்த்தியும் பெறுவதில் கால் பங்கு குருவுக்கும் கொடுக்கிறோம்.
அத்யயனத்துக்குப் பின் ஸலக்ஷண கனபாடியாகத் தேர்ச்சி பெற மூன்று, நாலு வருஷங்கள் படிக்க வேண்டியிருக்கிறதென்று அநுபவத்திலிருந்து தெரிகிறது.
“ஸமிதாதானம்” என்று தினமும் அக்னியில் மந்திர பூர்வமாக ஸமித்துக்களை ஹோமம் பண்ண வேண்டியது பிரம்மசாரியின் தர்மம். அதேமாதிரி இன்னொரு தர்மம், வீடுவீடாகப் போய் பிக்ஷை வாங்கி வருவது. வேதம் படிப்பதோடு மட்டுமில்லாமல் இப்படி ஸமிதாதானமும் பிக்ஷாசர்யமும் செய்கிற வித்யார்த்திகளுக்கு, சம்பாவனையை இரட்டிப்பாக்கிக் கொடுக்கிறோம்.
ஸலக்ஷண கனபாடி ஆனதற்குப் பிறகுதான் முதலில் சொன்ன வேத பாஷ்யப் படிப்பு வருகிறது. அதற்கு ஏழெட்டு வருஷம் பிடிக்கிறது.
அதாவது வேதக் கல்வி பூரணமாக ஆவதற்கு முதலில் எட்டு வருஷம் (க்ரமபதி விருது வாங்குவதற்கு), அப்புறம் ஸலக்ஷண கனபாடியாக நாலு வருஷம், பிற்பாடு பாஷ்யத்துக்கு ஏழு வருஷம் என்று சுமார் இருபது வருஷங்கள் பிடிக்கின்றன. முதல் கிளாஸிலிருந்து எம்.ஏ. வரைக்கும் படித்து முடிக்க 17, 18 வருஷம் ஆகவில்லையா? அப்படித்தான் இதுவும். அதைவிட நிறைய ஆத்மக்ஷேமம் தருகிற, அதை விட உபயோகமான, லோக உபகாரமான படிப்பு வேத வித்யை.
வேத பாஷ்யம் படிக்க வருகிறபோதே, ஒருத்தனுக்கு உத்தியோகத்துக்குப் போகிற வயசு வந்து விடுகிறது. அவனை அப்படிப் போகாமல் இதற்குத் திருப்பி விட வேண்டுமானால், படிக்கிற போதே ஸ்டைபென்ட் மாதிரிக் கொடுத்தால்தான் முடியும் என்று நினைத்தோம். அதனால் ஏழு வருஷங்களில் பதின்மூன்று பரீக்ஷைகள் நடத்தி, ஒவ்வொன்றிலும் பாஸ் பண்ணினவுடன் முதல் வகுப்பானால் மாஸத்துக்கு 60 ருபாய், இரண்டாவது வகுப்பானால் 40 ருபாய், மூன்றாவது வகுப்பானால் 30 ருபாய் என்று சம்மானம் செய்கிறோம். தவிர, இரண்டாவது பரீக்ஷை கொடுத்தவன் மூன்றாவது பரீக்ஷைக்குப் போகிற வரைக்கும் அவனுக்கு உபயோகமாயிருப்பதற்காக 100 ருபாயும், இப்படியே மூன்றாவது பரீக்ஷை கொடுத்தவனுக்கு 200 ருபாயும், அதற்கு மேலான பரீக்ஷைகள் கொடுக்கிறவர்களுக்கு 250 ருபாயும் விசேஷ சம்மானமாகத் தரப்படுகிறது. ஒரு வித்யார்த்தி இரண்டு தரம் ஃபெயிலானாலுங்கூட இந்த சம்மானம் கொடுக்கப்படுகிறது. எப்படியாவது அவர்கள் இந்தப் படிப்பை விட்டு விடாமல் தொடரப் பண்ண வேண்டும் என்பதே எனக்கு விசாரமாக இருப்பதால், இப்படி ஏற்பாடு செய்திருக்கிறது. அதாவது பிரதி வருஷமும் வேத பாஷ்ய வித்யார்த்தி ஒருவனுக்கு சுமார் 600 ரூபாய் கிடைக்க வேண்டுமென்பது திட்டம்.
இப்படியெல்லாம் சுமார் இருபது வருஷம் படித்து முடிக்கிறவனை, அப்படியே கடைசி வருஷ சம்பாவனையோடு மட்டும் நடுத்தெருவில் விட்டு விடக்கூடாது! அவனுடைய வேத வித்யை அவனுக்கு எந்நாளும் கால் வயிற்றுக் கஞ்சிக்கு வழி பண்ணுமாறு செய்யவேண்டும் என்று தோன்றிற்று. இதற்கு மூலதனமாக முழுப்படிப்பையும் முடித்து விட்டுப் போகிறவனுக்கு முதல் வகுப்பில் தேறியிருந்தால் 7000 ரூபாயும், இரண்டாம் வகுப்பானால் 5000 ரூபாயும், மூன்றாம் வகுப்பானால் 3000 ரூபாயும் கொடுக்கிறோம்.
முதல் வகுப்பில் தேறியவனுக்கு “பாஷ்ய ரத்ன” என்றும், இரண்டாவதில் தேறியவனுக்கு “பாஷ்ய மணி” என்றும், மூன்றாவதில் தேறியவனுக்கு “பாஷ்யக்ஞ” என்றும் பட்டம் கொடுக்கிறோம்.
இவை தவிர பாரம்பரிய நியமாத்யயனத் திட்டம் என்றும் ஒன்று வைத்திருக்கிறோம். அது என்னவென்றால், குருகுலவாஸம் என்பது சில தலைமுறைகளுக்கு முன்னேயே பல இடங்களில் மாறி ஒரு பிரம்மசாரியானவன் வேறே குருவைத் தேடிப் போய் அவரோடு வாஸம் பண்ணாமல் தன் தகப்பனாரிடமிருந்தே படிக்கிற முறையாக ஆகி இருக்கிறது. இப்படி அநேக குடும்பங்களில் தகப்பனார்-பிள்ளை என்பதே குரு-சிஷ்யக் கிரமமாக அமைந்து சில தலைமுறைகளாக வேத வித்யை இவ்விதத்தில் தொடர்ந்து வந்திருக்கிறது. தற்போதும் அபூர்வமாக இப்படி வீட்டிலேயே பிதா-புத்ரன் என்று படித்து வருகிறவர்களை உத்ஸாஹப்படுத்தி விருத்தி செய்ய வேண்டும்; நல்ல வேத சாஸ்திர ஞானம் உள்ள ஒரு பிராமணர், தன் பிள்ளைக்கும் அதைக் கற்றுக் கொடுக்கும்படியாக ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே நியமாத்யயனத் திட்டம் போட்டிருக்கிறோம். இதன் கீழ் ஒவ்வொறு வித்யார்த்தியும் திட்டத்தில் சேர்கிறபோதே, அவன் பேரில் 12,500 ரூபாய் மூலதனம் போட்டுவிடுகிறோம். அதன் வட்டியிலிருந்து அவனுடைய படிப்புக் காலம் முழுவதும் மாஸா மாஸம் 40 ரூபாய் ஸ்டைபென்டும் படிப்பைப் பூர்த்தி பண்ணுகிற போது ‘ல்ம்ப்’பாக 9000 ரூபாயும் கொடுக்கிறோம். அதோடுகூட, முதலில் இவன் பேரில் போட்ட 12,500 ரூபாய் மூலதனத்தின் வட்டியிலும் 80% இவனுக்கு ஆயுஸ் உள்ள வரையில் கிடைத்து வரும்.