முடிவுரை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தின் மஹிமை எல்லையில்லாதது. லெளகிகத்தில் அதனுடைய பெருமை ஒரு விதத்தில் புலப்படுகிறது; அதற்கு ஈடும் இல்லை இணையும் இல்லை என்று காட்டுகிறது. அதைச் சொல்லி முடிக்கிறேன்.

உலகத்தில் உள்ள க்ஷேத்திரங்களுள் காசிதான் அதிக மஹிமையுடையது என்று நினைக்கப்படுகிறது. வேறு க்ஷேத்திரங்களைப் பற்றி ரொம்பவும் உயர்த்திச் சொல்லும் பொழுது அவை காசிக்கு ஸமானமானவை என்றே சொல்கிறார்கள். அதனாலேயே காசியினுடைய மஹிமை தெரிகிறது! தக்ஷிண தேசத்திலுள்ள ஒரு ஸ்தலத்தை தக்ஷிண காசி என்று சொல்வார்கள். உத்தரகாசி என்று ஹிமாசலத்தில் ஒரு ஸ்தலத்தைச் சொல்கிறார்கள். விருத்த காசி என்று விருத்தாசலத்திற்குப் பெயர். சித்தூர் ஜில்லாவிலுள்ள புக்கே என்னும் ஊரும் ஒரு காசி என்று சொல்லப்படுகிறது. தென்காசி என்றே ஓர் ஊர் திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது. மற்ற ஸ்தலங்களை ‘இது காசி க்ஷேத்திரத்திற்கு ஸமமானது’ என்கிறார்கள். கும்பகோணத்தைப் பற்றியோ ‘இது காசியிலும் வீசம் அதிகம்’ என்று சொல்கிறார்கள். கும்பகோணம் ஸ்தலத்தைப் பற்றி ஒரு சுலோகம் உண்டு.

அந்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே விநச்யதி |

புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி |

வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி |

கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி ||

என்பது அந்த ச்லோகம். “ஸாதாரணமான ஓர் ஊரில் பண்ணும் பாபம் புண்ணிய க்ஷேத்ரத்துக்குப் போனால் போய்விடும். புண்ணிய க்ஷேத்ரங்களிலேயே பாபம் பண்ணினால்? அந்தப் பாபம் வாராணஸி என்ற காசிக்குப் போனால் போய்விடும். காசியிலும் பாபம் செய்தால்? அது கும்பகோணத்துக்குப் போனால் நசித்து விடும். ஸரி, அந்தக் கும்பகோணத்திலேயே பாபம் பண்ணிவிட்டால்? அதுவும் கும்பகோணத்திலேயே அழிந்து போய்விடும்” என்று அர்த்தம். காசியை விடக் கும்பகோணம் அதிக மஹிமையுடையது எனபது இதன் கருத்து.

இவ்வாறு காசியைவிட உத்கிருஷ்டமானது, காசிக்கு ஸமமானது என்று சொல்லுவதனாலேயே காசிக்குத்தான் தனி மஹிமை இருக்கிறதென்று தெரிகிறது! அதை உபமானமாகச் சொல்லிச் சொல்லி, அதற்கு இன்னும் கெளரவத்தை உண்டாக்கி விடுகிறாரகள். ஒரு பெரியவர் காசி க்ஷேத்திரத்தைப் பற்றி ஒரு ச்லோகம் சொல்லியிருக்கிறார். அது க்ஷேத்ராணாம் உத்தமானாம் அபி யத் உபமயா கா (அ)பிலோகே ப்ரசஸ்தி: என்று ஆரம்பிக்கிறது. “உத்தம க்ஷேத்திரங்களுக்கும் எதை உபமானமாக சொன்னால் பிரசித்தி வருகிறதோ அந்தக் காசி” என்று அர்த்தம்.

இதேபோல் எந்தப் புண்ய தீர்த்தத்தை உயர்த்திச் சொல்வதானாலும், ‘இது கங்கைக்கு ஸமானம்” அல்லது கங்கையை விடவும் உசத்தி என்கிற வழக்கம் உள்ளது.

இதனால் க்ஷேத்ரங்களில் பரம உத்தமமானது காசி; தீர்த்தங்களில் பரம உத்தமமானது கங்கை என்று தானே ஏற்படுகிறது?

இதைப் போல வேதத்திற்கு கெளரவம் என்னவெனில் எந்த உயர்ந்த நூலானாலும் “இது வேதத்திற்கு ஸமானம்” என்று சொல்வதுதான்.

ராமாயணம் மிகவும் பிரசித்தமானது. அந்தக் கதையில் பல வகையானவை இருக்கின்றன. எந்த இந்திய பாஷையிலும் உயர்ந்ததாகவுள்ள நாடகம், கீர்த்தனம், காவியம் எல்லாம் ராம கதையே. யாரை எடுத்தாலும் ராமாயணத்தைப் பற்றிச் சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ராமாயணத்தின் கெளரவத்தைச் சொல்லவந்தபொழுது அது வேதம் என்றே சிறப்பித்துச் சொல்லப்படுகிறது:

வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா|

“ப்ரசேதஸின் புத்ரரான வால்மீகியின் மூலமாக வேதமே ஸாக்ஷாத் ராமாயணமாக உருவெடுத்தது” என்று பொருள்.

மஹாபாரதத்துக்கும் வேதம் என்னும் பெயர் சொல்லப்படுகிறது. நாலு வேதங்களுக்குப் பிறகு இதை ஐந்தாவது வேதமாக வைத்து பஞ்சமோ வேத: என்று கொண்டாடுகிறார்கள்.

ச‌டகோபர் என்றும் மாறன் என்றும் பெயர் பெற்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வைஷ்ணவர்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுவார்கள். “வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்” என்றே அதையும் சொல்லுகிறார்கள். அதனால் அதுவும் வேதம் என்றே எண்ணப்படுவது தெரிகிறது.

தமிழில் மிகவும் பிரசித்தமான நீதி சாஸ்திரமாகிய குறளும்கூடத் தமிழ்வேதம் என்றுதானே சொல்லப்படுகிறது?

திருவள்ளுவர் அந்தத் திருக்குறளை செய்தார். அந்தக் காலத்தில் மதுரையில் கடைச் சங்கம் இருந்தது. அங்கே ஸுந்தரேச்வரரால் கொடுக்கப்பட்ட பலகை ஒன்று இருந்தது. அதன்மேல் யோக்கியதை இருந்தவர் உட்காரலாம். யோக்கியதை இல்லாவிட்டால் தள்ளிவிடும். அது எப்படி? இதை நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் ஒரு மெஷினில் காசு போட்டால் அது டிக்கட்டை வெளியே தள்ளுகிறது என்பதை நம்புகிறோம்!

திருவள்ளுவர் தாம் செய்த குறளை எடுத்துக் கொண்டு அந்தச் சங்கத்திற்குப் போனார்.

பொதுவாக வித்வான்கள் மற்றவர்களை அலக்ஷ்யம் பண்ணுவார்கள். ஏகமாகப் பரிக்ஷைகள் வைப்பார்கள். அப்படிப் பண்ணுவதனால், அசடாயிருப்பவர்கள் ‘நானும் படித்தவன்’ என்று சொல்லிக் கொள்ள முடியாது. கெட்ட சரக்கை எழுதிப் பிரசாரம் பண்ண முடியாது. ஆகையால் அப்படிப் பண்ணுவது ஒரு வகையில் நல்லதையே உண்டாக்குகிறது. ஆனால் அந்த அலக்ஷ்ய புத்தி அதிகமாகப் போகக்கூடாது. அது தப்பு.

திருவள்ளுவர் கொண்டுபோன சுவடியை அந்தச் சங்கப்பலகையில் வைக்கச் சொன்னார்கள். “இந்தச் சுவடிக்கு சங்கப் பலகை இடம் கொடுத்தால்தான் இதை இலக்கியத் தரமுள்ளது என்று ஒப்புக் கொள்ள முடியும்” என்று மற்றப் புலவர்கள் சொல்லிவிட்டார்கள். திருவள்ளுவரும் “ஆஹா, அப்படியே!” என்று அந்தச் சின்னச் சுவடியை பலகையில் வைத்தார். அது அந்த சுவடிக்கு மட்டும் இடம் கொடுத்து, மற்றவர்களையெல்லாம் கீழே தள்ளிவிட்டது.

அப்போது ஏனைய புலவர்கள் எல்லோரும் குறளின் பெருமையை உணர்ந்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்யுளால் புகழ்ந்தார்கள். அவர்களுக்குள்ளே ஒருவர்,

ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது

சீரிய தென்றொன்றைச் செப்பரிதால்–ஆரியம்

வேத முடைத்து; தமிழ்த்திரு வள்ளுவனார்

ஓதுகுறட் பாவு டைத்து

(திருவள்ளுவ மாலை)

என்று சொல்லி இருக்கிறார். “ஸம்ஸ்கிருதம் பெரியதா, தமிழ் பெரியதா என்றுகேட்டால், ஸம்ஸ்கிருதம்தான் என்று நேற்று வரையிலும் சொல்லியிருக்கலாம். இன்றிலிருந்து அப்படிச் சொல்லக் கூடாது. ஸம்ஸ்கிருதத்திற்கு உயர்வு அதில் வேதம் இருக்கிறது என்பதே. அதற்கு சமானமாகத் தமிழில் இன்றைக்குக் குறள் வந்துவிட்டதே! அது எப்படி உயர்வு உடையதாகும்?” என்று அவர் சொல்கிறார். இதனால் குறளானது வேத சமானம் என்பது தாத்பரியம். வேதத்தால் தான் ஸம்ஸ்கிருதத்துக்கே பெருமை, வேதம் எந்த பாஷையில் இருக்கிறதோ அந்த பாஷைதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்ற கருத்துக்களும் இங்கே வெளிப்படுகின்றன.

தேவாரமும் திருவாசகமும் தமிழ் வேதம் என்பது சைவர்களுக்குப் பிரசித்தம்.

இவை நம் மதத்துக்குள் அகப்பட்டவை.

கிறிஸ்தவர்கள் பைபிள் புஸ்தகம் கொண்டு வந்தார்கள். அதற்கும் ‘சத்திய வேதம்’ என்று பெயரிட்டார்கள்.

இப்படி உலகத்திலிருக்கும் வியவஹாரத்தைப் பார்த்தால் வேதத்திற்கு ஒரு தனி கெளரவம் இருக்கிறது. ஒரு பிரகாசமான கிரந்தத்தால் மற்றவைகளை வியவஹரிப்பது பிரசித்தமான் உலக வழக்கம் என்றால், நம் புஸ்தகங்களிலெல்லாம் இப்படிப்பட்ட முதன்மை ஸ்தானம் வகிப்பது வேதமாகவே இருக்கிறது.

இப்படி காலம் சொல்ல முடியாமல் நம் தேசம் முழுவதிலும் உறைத்து உறைத்து நம்முடைய மஹத்தான கலாசாரத்துக்கு ஜீவ சத்தாக ஊறிபோயிருக்கிற வேத நிதியை, நம்முடைய அஜாக்ரதையால் “இனிமேல் இல்லை” என்று ஆகும்படியாகச் செய்துவிடக் கூடாது. ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் இதைவிடப் பெரிய பொறுப்பு எதுவும் இல்லை.

வேத சப்தம் பிரகாசிக்க வேண்டும்; வேத அர்த்தம் பிரசாரமாக வேண்டும்; வைதிக அநுஷ்டானங்கள் புது ஜீவனைப் பெற்றுத் திகழ வேண்டும். நம்முடைய ஒரு தேசத்திலே இப்படி ஏற்பட்டுவிட்டால் போதும். ஒருத்தனுடைய ஹ்ருதயம் பலமாக இருந்து விட்டால் மற்ற அவயவங்களுக்கு எத்தனை வியாதி வந்தாலும் அவன் பிழைத்துக் கொள்கிற மாதிரி, லோகத்திலுள்ள அத்தனை தேசங்களுமே நல்ல வழிக்கு வந்து, ஸமஸ்த ஜனங்களும் க்ஷேமமாக இருப்பார்கள். வேத தர்மம் பிரார்த்தனை பண்ணுவதும் இதைத்தான்.

லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து!

வையகமும் துயர் தீர்கவே!