உச்சாரணம், ஸ்வரம், மாத்திரை, பலம், ஸமம், ஸந்தானம் என்ற பல விஷயங்களை சிக்ஷா சாஸ்திரம் சொல்லி, ஒவ்வொரு மந்திரத்தையும் ஒரு மயிரிழைகூட அதன் சப்த ரூபம் தப்பாத வகையில் வகுத்துக் கொடுக்கிறது. அதிலும், இன்னின்ன எழுத்துக்கள் மநுஷ்ய சரீரத்தில் இன்னின்ன இடத்தில் பிறப்பவை, இவை இப்படியிப்படியான முயற்சியால் உண்டானவை என்று அது நிர்ணயித்திருக்கிறது ரொம்பவும் ப்ராக்டிலாகவும், ஸயண்டிஃபிக்காகவும் இருக்கிறது. உதடுகளை இப்படிச் சேர். இன்ன சப்தம் வரும் என்று அது சொன்னால் வாஸ்தவத்தில் அப்படியே இருக்கிறது.
இதைச் சொல்லும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. ப,ம,வ போன்ற சப்தங்களில்தானே உதட்டுக்கு வேலை இருக்கிறது? க,ங,ச,ஞ,ட,ண,த,ந முதலியவற்றில் உதடு படுவதில்லை இல்லையா? இப்படி உதடு படாத சப்தங்களைக் கொண்ட வார்த்தைகளாலேயே ஆன ராமாயணம் ஒன்றை ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதற்கு ‘நிரோஷ்ட ராமாயணம்’ என்றே பேர். ‘ஓஷ்டம்’ என்றால் உதடு: அதிலிருந்து ‘ஒளஷ்ட்ரகம்’, அதாவது தமிழில் ஒட்டகம் என்ற பேர் வந்தது. ஒட்டகத்திற்கு உதடு தானே பெரிசாக இருக்கிறது? ஸம்ஸ்கிருதத்தில் ‘ஒளஷ்ட்ரகம்’ என்பது தமிழில் ‘ஒட்டகம்’ ஆயிற்று. ‘நிர்- ஓஷ்டம்’ என்றால் உதடு இல்லாதது என்று அர்த்தம். தன்னுடைய பாஷா ஸாமர்த்தியத்தைக் காட்டுவதற்காக அவர் இப்படி நிரோஷ்டமாக ராமாயணம் பண்ணினதாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. அவர் ரொம்பவும் மடிக்காரராக (ஆசார சீலராக) இருந்திருக்கக்கூடும்!அதனால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கதையைப் பாராயணம் செய்கிற போது, எச்சில் படாமலே இருக்க வேண்டும் என்று இப்படி உதடு சேராத விதத்தில் பண்ணினார் போலிருக்கிறது!
வேதாக்ஷரங்களை எத்தனை கவனத்தோடு, ஜாக்ரதையோடு சொல்ல வேண்டும் என்பதற்குப் பாணினி மஹரிஷி செய்த ‘பாணினீய சிக்ஷா’வில் ஒரு அழகிய ச்லோகம் இருக்கிறது.
வ்யாக்ரீ யதா ஹரேத் புத்ரான்
தம்ஷ்ட்ராப்யாம் ந ச பீடயேத்|
பீதாபதனபேதாப்யாம்
தத்வத் வர்ணான் ப்ரயோஜயேத்||
வேதாக்ஷரங்களை ஸ்பஷ்டமாகச் சொல்ல வேண்டும். சப்த ரூபம் கொஞ்சங்கூட குழறுபடியாகக் கூடாது. ஒலி நழுவி விடவே கூடாது. அதற்காக ரொம்பவும் நறுக்கு நறுக்கு என்றும் சொல்லக் கூடாது. வேத எழுத்துக்களை கீழே நழுவாதபடியும் அழுத்தி ஹிம்ஸிக்காமலும் உச்சரிக்க வேண்டும். எப்படியென்றால் ஒரு பெண்புலி, தன் குட்டிகளைக் கவ்விக் கொண்டு போவது போல! பூனை, எலி முதலானதுகள் குட்டியைப் பல்லால் கவ்வுகின்றன. கீழே விழாதபடி கெட்டியாகக் கவ்வுகின்றன. ஆனாலும் குட்டிக்கு வலிக்கிற மாதிரியாக கடித்துவிடுகிறதா? இல்லை. அந்த மாதிரி நாசூக்காக அக்ஷரங்களை உச்சரிக்க வேண்டும் என்பது ச்லோகத்தின் பொருள்.
இதே பாணினிதான், வேதாந்தங்களில் அடுத்ததான வியாகரணத்திலும் முக்கியமான நூலை உபகரித்திருக்கிறார்.
பாணினியைத் தவிர இன்னம் அநேக மஹரிஷிகளும் சிக்ஷா சாஸ்திரங்கள் எழுதியிருக்கிறார்கள்.* இப்படிக் கிட்ட தட்ட முப்பது இருப்பதாகத் தெரிகிறது. பாணினியுடையதும், யாக்ஞவல்கிய சிக்ஷையும் விசேஷமானவை.
“ப்ராதிசாக்யம்” என்பதாக ஒவ்வொரு வேத சாகைக்கும் விசேஷமாகவும் வித்யாஸமாகவும் உள்ள வேத சப்தஸ்வரங்களை விரிவாக ஆராய்கிற நூல்களும் ஒவ்வொரு வேதத்துக்கும் உண்டு. இவற்றில் சிலவும் இவற்றுக்குரிய பிராசீனமான வியாக்யானங்களும் கிடைத்திருக்கின்றன. இவையும் “சீக்ஷா” என்பதில் அடங்கியவையே.
* ஆபிசலி, சந்திரகோமி, யாக்ஞவல்கியர், வசிஷ்டர், காத்யாயனர், பராசரர், மாண்டவ்யர், நாரதர், லோமசர் ஆகியோர் இயற்றிய சிக்ஷாஸூத்ர கிரந்தங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.