எல்லா சப்தங்களும் உள்ள மொழி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மேலே சொன்னதிலிருந்து ஸம்ஸ்கிருதத்தில் f (எஃப்) சப்தம் உண்டு என்றாயிற்று. அந்த பாஷையில் இல்லாத சப்தம் எதுவும் கிடையாது. ‘ழ’ தமிழில்தான் இருக்கிறது என்றுதானே பொதுவில் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? ஸம்ஸ்கிருதத்துக்கு மூலமான வேத பாஷையிலும் ‘ழ’ இருக்கிறது! யஜுர்வேதத்தில் ‘ட’ வருகிற பல இடங்களில், தலவகார ஸாம வேதத்தில் ‘ழ’ மாதிரியே சொல்ல வேண்டும். சில இடங்களில் ரிக் வேதத்திலும் ‘ழ’ காரமாகத்தான் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டும். ரிக்வேதத்தின் முதல் ஸூக்தத்தின் முதல் வார்த்தையான “அக்னிமீளே” என்பதில் வருகிற ‘ளே’ என்பதையே இப்படி ‘ழ’ காரம் மாதிரி, ‘அக்னிமீழே’ என்றுதான் சொல்லவேண்டும். பூர்ண ‘ழ’ இல்லை; கிட்டத்தட்ட அம்மாதிரி இருக்கும் சப்தமாகச் சொல்ல வேண்டும்.

பிரெஞ்சு பாஷையிலும் ‘ழ’ வுக்கு ரொம்ப நெருக்கமான சப்தம் இருக்கிறது. ஆனால் பிரெஞ்சு, ஸம்ஸ்கிருதம் இரண்டு லிபியிலும் ‘ழ’ வுக்குத் தனி எழுத்து இல்லை. J,G என்ற எழுத்துக்களே பிரெஞ்சில் ‘ழ’வையும் குறிக்கிறது. ஸம்ஸ்கிருதத்தில் ‘ள’ என்ற எழுத்தே ‘ழ’ வையும் குறிக்கிறது.

சீன பாஷையிலும் ‘ழ’ மாதிரியான சப்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

[ஃ என்று] மூன்று புள்ளி வைத்துத் தமிழில் ஆய்தம் என்கிறோமே, அதுவும்கூட ஸம்ஸ்கிருதத்தில் உண்டு. பாணினியின் வியாகரண ஸூத்ரத்தில் “ஹ் கப் பௌச” என்று ஒரு ஸூத்ரம் இருக்கிறது. இதன்படி “ராம:” plus “கருணாகர:” என்கிற மாதிரி, ஒரு விஸர்க்கத்துக்கு அப்புறம் ‘க’- காரம் வந்தால், அந்த விஸர்க்கமானது முன்னே சொன்ன மாதிரி ‘ஹ’ சப்தத்தைக் கொடுக்காமல், “அஃது” என்பதில் வரும் ‘ஹ்’ மாதிரியான ஆய்த சப்தத்தையே கொடுக்கும்.

இதே ஆய்தமாகிற விஸர்க்கந்தான் ‘ப’ காரத்துக்கு முன்னால் f ஆகிறது.

ராம: plus கருணாகர: என்பது “ராமஃ கருணாகர:”. ராம plus பண்டித: என்பது “ராம f பண்டித:”. இந்த ‘f’ சப்தத்துக்கு “உபத்மானீயம்” என்று பெயர். “த்மா” என்றால் ஊது குழலினால் அடுப்பை ஊதுகிற மாதிரிப் பண்ணுவது. அப்போது f சப்தம் தான் வரும்! இங்கிலீஷில் புல்லாங்குழலின் பெயரே “f” ல் தான் ஆரம்பிக்கிறது! Flute!

Fa-வைப்பற்றி இன்னொன்று சொல்ல வேண்டும். நாம் fa-வைப் பொதுவில் pa- ஆக்கி விடுகிறோம். இப்படித்தான் coffee- ஐ காப்பியாக்கிவிட்டோம் என்று நினைத்தால் அது தப்பு. ‘கபிசம்’ என்றால் ஸம்ஸ்கிருதத்தில் டார்க் ப்ரௌன் நிறம் என்று அர்த்தம். அதுதான் காப்பிப்பொடி நிறம். அதனால் நம் கபிசத்தைத்தான் வெள்ளைக்காரன் coffee ஆக்கிவிட்டான் என்று தோன்றுகிறது.

தமிழில் சொல்கிற குற்றியலுகரம் போன்ற சப்தம் ஸம்ஸ்கிருதத்திலும் ரு,லு இரண்டுக்கும் உண்டு. ரிக்வேதம், ருக்வேதம் என்ற இரண்டு தினுஸாக எழுதுவது வாஸ்தவத்தில் ‘ரி’ யும் இல்லை, ‘ரு’ வும் இல்லை. அது குற்றியலுகர சப்தம் மாதிரியானதுதான். ‘க்ருஷ்ணன்’ என்பதில் வருகிற ‘ரு’, ‘ரிஷி’ யில் வரும் ‘ரி’ இவையும், இ-க்கும் உ-க்கும் இடைப்பட்ட அதே சப்தம்தான். க்ருஷ்ணன் என்று தமிழில் ‘ரு’ போட்டு எழுதினாலும், இங்கிலீஷில் Krishna என்று ‘ரி’ போடுகிறோம். வடக்கத்திக்காரர்கள் சில பேர் Krushna என்று எழுதுகிறார்கள். தெலுங்கர்கள் “ஹ்ருதயம்” முதலான வார்த்தைகளில் வருகிற இந்த குற்றியலுகர ‘ரு’ வைப் பூரண ‘ரு’ வாகவே சொல்வதைக் கேட்க வேடிக்கையாக இருக்கும்!

ர-காரம், ல-காரம் இரண்டுக்கு மட்டும் ஸம்ஸ்கிருதத்தில் குற்றியலுகர ‘உ’ சேர்கிறது. ர-காரத்தில் உள்ள ரிக், ரிஷி மாதிரி , ல- காரத்தில் வார்த்தையின் முதல் எழுத்தாகக் குற்றியலுகர ‘லு’ தனியே வராது. லுப்தம், லுலிதம் முதலான வார்த்தைகளில் வருவது பூரண ‘லு’ தான். கூட்டெழுத்தில் மட்டுமே குற்றியலுகர ‘லு’ வரும். “க்லுப்தம்” மாதிரியான கூட்டெழுத்திலேயே அது வருகிறது.

இந்தக் குற்றியலுகர ரு, லு இரண்டையும் ஸம்ஸ்கிருதத்தில் ர-கர, ல-கர வரிசையில் சேர்க்காமல், உயிரெழுத்து வரிசையிலேயே, அ-ஆ-இ-ஈ-உ-ஊ-வுக்கு அப்புறம் ரு, லு என்று சேர்த்திருக்கிறது. இதற்கப்புறம் ஏ, ஐ, ஓ, ஒள, அம், அ: – என்று வரும்.

அ-ஆ; இ-ஈ; உ-ஊ என்று இரண்டிரண்டாக ஒரு குறிலும் ஒரு நெடிலும் இருக்கிற மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் எ-ஏ, என்று இரண்டு இல்லை. நெடிலான ஏ மட்டும்தான் இருக்கிறது. இப்படியே ஒ-ஓ என்று இரண்டில்லை. ஓ மட்டுமே இருக்கிறது. இது எனக்கு ரொம்பக் குறையாக இருந்தது. பராசக்தி ஸகல சப்த ஸ்வரூபமாக இருக்கப்பட்டவள் என்றால், தேவ பாஷையில் அத்தனை சப்தங்களும் இருக்க வேண்டாமா? மற்ற எல்லா சப்தங்களும் உள்ள ஸம்ஸ்கிருதத்தில் இந்தக் குறை மட்டும் இருக்கலாமா என்று வருத்தமாக இருந்தது. பாணினியின் வியாகரண ஸூத்ரத்துக்குப் பதஞ்சலி செய்துள்ள மஹாபாஷ்யத்தைப் பார்த்த பின் இந்தக் குறில் எ, ஒ சப்தங்களும் ஸம்ஸ்கிருதத்தில் உண்டு என்று தெரிந்து ரொம்ப ஆறுதலாக இருந்தது. ஸாமவேதத்தில் ஸாத்யமுக்ரி, ராணாயன என்ற இரண்டு சாகைகளைச் சேரந்தவர்கள் குறிலான எ, ஒ சப்தங்களை வேத அத்யயனத்தில் உபயோகிக்கிறார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். *

இப்படியாக ஸம்ஸ்கிருதத்தில் ஸகல சப்தங்களும் இருக்கின்றன. இன்ன எழுத்துக்கு இன்ன சப்தம் என்றும் ரொம்பவும் திருத்தமாகப் பண்ணிக் கொடுத்திருக்கிற லிபியும் அதற்கு இருக்கிறது.


* சண்தோகானாம் ஸாத்யமுக்ரி ராணாயனீயா: அர்தம் ஏகாரம் அர்தம் ஓகாரம் ச அதீயதே