சிவன் கோயில்களில் “வ்யாகரண தான மண்டபம்” என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருப்பதுண்டு. “வக்காணிக்கும் மண்டபம்” என்று திரித்துச் சொல்வார்கள். அத்தகைய மண்டபம் திருவொற்றியூரிலும் இருக்கிறது. சோழ நாட்டில் பல கோயில்களிலும் இருக்கிறது.
எதற்காகச் சிவன் கோயில்களில் வியாகரண தான மண்டபம் இருக்கிறது? ஏன் விஷ்ணு கோயிலில் இல்லை. சிவனுக்கும் பாஷைக்கும் என்ன சம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியாக இருக்கிறவரல்லவா சிவன்?
ந்ருத்தாவஸானே நடராஜ ராஜோ நநாத டக்காம் நவபஞ்ச வாரம்|
உத்தர்துகாம: ஸனகாதி ஸித்தான் ஏதத் விமர்சே சிவ ஸூத்ர ஜாலம்|| *
என்று ஒரு ச்லோகம் இருக்கிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன்.
பேசாத சிவன் ஆடாமல் அசங்காமலிருப்பார். அவரே ஒரே ஆட்டமாக ஆடுகிறபோதுதான் பாஷா சாஸ்திரமே பிறந்தது. இதை மேற்படி ச்லோகம் தெரிவிக்கிறது.
நடராஜர் என்பது ஆடும் பரமேசுவரனுடைய பெயர். நடன், விடன், காயகன் என்ற உல்லாச கலைக்காரர்களில் நடன் நாட்டியம் செய்பவன். அந்த நடர்களுக்கெல்லாம் ராஜா நடராஜா. யாரைக் காட்டிலும் உயர்ந்த நடனம் செய்யமுடியாதோ அவன்தான் நடராஜா. மஹா நடன் என்று அவன் சொல்லப்படுகிறான். “மஹாகாலோ மஹாநட:” என்று ஸம்ஸ்கிருத அகராதியான “அமரகோசம்” சொல்கிறது. ‘அம்பலக் கூத்தாடுவான்‘ என்று தமிழில் சொல்லுவார்கள். ‘அம்பலக் கூத்தாடுவான் பட்டன்‘ என்பது பிராமணர்களுக்கு உரிய பெயராக இருந்ததென்று சாஸனங்களால் தெரிய வருகிறது. ஆதியில் பிராம்மணர்களும் இப்படி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
‘நிர்ணயஸாகரா பிரெஸ்’ என்று பம்பாயில் ஒரு அச்சுக்கூடம் இருக்கிறது. அதில் பழைய காலத்தில் இயற்றப்பட்ட சிறு காவியங்கள் ‘Kavyamala Series’ என்னும் பெயரில் வரிசையாக வெளியிடப்பட்டன. அந்த மாலையில் ‘பிராசீன லேகமாலை’ என்னும் பெயருடைய சில புஸ்தகங்கள் இருக்கின்றன. பழைய காலத்து ஸம்ஸ்கிருத சாஸனங்கள் அதில் இருக்கின்றன. அந்த சாஸனங்களுக்குள் வேங்கி நாட்டுச் சாஸனம் ஒன்று இருக்கிறது. வேங்கிநாடு என்பது, கிருஷ்ணா நதிக்கும் கோதாவரி நதிக்கும் நடுவில் இருப்பது. அந்த நாட்டில் அகப்பட்ட தாம்ர சாஸனம் ஒன்றை அந்தப் புஸ்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தத் தெலுங்குச் சீமையில் அரசாட்சி செய்து வந்த கீழைச் சாளுக்கிய ராஜாக்களுக்கும் நம்முடைய தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்தது. பிருஹதீச்வர ஸ்வாமி கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுடைய புத்ர வம்சம் பௌத்தர்களோடேயே முடிந்து போய்விட்டது. அவனுடைய தௌஹித்ரி (பெண் வழிப் பேத்தி) அம்மங்கா தேவி வாழ்க்கைப் பட்டிருந்தது ராஜராஜ நரேந்திரன் என்ற கீழைச்சாளுக்கிய ராஜாவுக்குத்தான். அவர்களுடைய பிள்ளையான குலோத்துங்கன்தான் அப்புறம் சோழ நாட்டுக்கும் ராஜா ஆனது. அவன் ஆந்திர தேசத்தில் வேதாத்தியயனம் விருத்தியடைய வேண்டுமென்று எண்ணித் தமிழ்நாட்டிலிருந்து 500 பிராம்மணர்களைக் கொண்டுபோய் வேங்கிநாட்டில் குடியேற வைத்தான். ஆந்திரதேசத்தில் உள்ள திராவிடலு என்ற பிரிவினர் இந்த 500 பிராம்மணர்களுடைய வம்சஸ்தர்களே.
அந்த 500 பிராம்மணர்களுடைய பெயர்களும், கோத்திரங்களும், அந்த சாஸனத்தில் சொல்லப்படுகின்றன. இன்ன இன்ன சாஸ்திரத்தில் வல்லவர், இன்ன இன்ன காரியங்கள் செய்ய வேண்டியவர் என்பவைகளைப் போன்ற பல விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஊரில் மொத்தமுள்ள நிலத்தில் அவர்களில் இன்னார் இன்னாருக்கு இந்த இந்தப் பூமி தானம் தரப்படுகிறது என்பதும், அந்தப் பூமியின் எல்லை முதலியவைகளும் அதில் காட்டப்படுகின்றன. சிஷ்யராக வருகிறவர்களுக்கு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேதங்களையும் சாஸ்திரங்களையும் சொல்லி வைக்கவேண்டும்; அதற்காகவே அவர்களுக்கு நிலங்கள் மானியமாக விடப்பட்டிருக்கின்றன.
ரூபாவதார வக்து : ஏகோ பாக :
என்று அதில் ஒரு வாக்கியம் இருக்கிறது. அதாவது ‘ரூபாவதாரம்’ சொல்லுபவருக்கு ஒரு பாகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ரூபாவதாரம்’ என்பது ஒரு வியாகரண சாஸ்திரம்தான்.
திண்டிவனத்தருகில் உள்ள ‘எண்ணாயிரம்’ என்ற ஊரில் இருந்த 340 மாணாக்கர்களைக் கொண்ட வித்யாசாலையில், 40 பேர் ரூபாவதாரம் படித்ததாக முதலாம் ராஜேந்திர சோழனின் சாஸனம் இருக்கிறது. பாண்டிச்சேரி ராஜ்யத் திரிபுவனத்தில் ராஜாதிராஜன் (கி.பி. 1018-1050) போஷித்த பாடசாலையிலும் ரூபாவதாரம் போதிக்கப்பட்டிருக்கிறது. வீரராஜேந்திர தேவனின் கி.பி. 1067-ம் வருஷத்திய சாஸனத்திலிருந்து, காஞ்சிக்கு அருகேயுள்ள திருமுக்கூடல் வித்யாசாலையில் இந்த நூல் கற்பிக்கப்பட்டதை அறிகிறோம்.
ஸித்தாந்த கௌமுதி என்று ஒரு வியாகரண இப்பொழுது அதிகமாக பிரசாரத்தில் இருந்து வருகிறது. அடையபலம் என்ற ஊரில் அவதாரம் செய்தவர்களும், 104 கிரந்தங்களை எழுதினவர்களும், சைவகிரந்தங்களை அதிகமாகச் செய்தவர்களும், ‘குவலயானந்தம்’ என்னும் அலங்கார சாஸ்திரத்தை எழுதினவர்களுமாகிய அப்பைய தீக்ஷிதரவர்களுடைய சிஷ்யராகிய பட்டோஜி தீஷிதர் என்பவர் அந்த ‘ஸித்தாந்த கௌமுதியை’ச் செய்தவர். அது பாணினியின் ஸூத்ரத்திற்கு வியாக்கியான ரூபமாக உள்ளது.
“அர்த்த மாத்ரா லாகவேன புத்ரோத்ஸவம் மன்யந்தே வையாகரணா:” என்று, வியாகரணமானது பண்டிதர்களுக்குத் தரும் பரமானந்தத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. “அரை மாத்திரை லாபம் கிடைத்தால், அது வியாகரண சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு, நிரம்ப நாள் பிள்ளையில்லாதவனுக்கு ஒரு புத்திரன் உண்டானதுபோல ஸந்தோஷத்தைக் கொடுக்கும்” என்பது இதன் அர்த்தம். ‘அ’ என்பதை ‘ஆ’ என்று நீட்டினால், அப்படி நீட்டினதற்குப் பலன் சொல்ல வேண்டும். அதுவே மாத்திரை லாபம். ரத்ன சுருக்கமாகவே ஸூத்ரம் இருப்பதால் அதிலே சிக்கல்கூட ஏற்பட்டு மாத்திரைகள் பற்றி அபிப்ராய பேதங்களும் உண்டாகும். அப்போது வியாக்யானந்தான் தெளிவு படுத்தித் தந்து, புத்ரோத்ஸவ ஆனந்தத்தைத் தருவது! அதற்காக வியாக்யானம் வளவள என்று இருக்க வேண்டியதில்லை; நறுக்குத் தெறித்த மாதிரி சுருக்கமாயிருந்தும் தெளிவு பண்ணமுடியும் என்பதற்கு “கௌமுதி” எடுத்துக் காட்டு. ஸூத்திரத்தில் எழுத்துக்களெல்லாம் மிகவும் கணக்காக இருந்தால் ஸித்தாந்த கௌமுதியில் வியாக்கியானமும் கணக்காக இருக்கும்; வளவளப்பே கிடையாது. ஸூத்திரத்தில் அதிகம் இருந்தாலும் இருக்குமோ என்னவோ? இதில் இராது. அந்தக் கௌமுதி இப்பொழுது பிரஸித்தி அடைந்திருக்கிறது. அது சற்றேறக் குறைய 400 வருஷங்களுக்கு முன் செய்யப்பட்டது. இப்பொழுது அதைத்தான் ஸம்ஸ்கிருத வியாகரணம் வாசிக்கிறவர்கள் முதலில் வாசிக்கிறார்கள். (இந்த வியாகரணத்தைச் செய்த பட்டோஜி தீக்ஷிதரென்பவரே ‘தத்வகௌஸ்துபம்’ என்ற ஒரு கிரந்தம் செய்து, அதைக் குருவுக்குக் காணிக்கையாக அர்ப்பணம் செய்தார். அந்தப் புஸ்தகத்தில் பிரம்மத்தை விட வேறுண்டென்று சொல்வது உபநிஷத்துக்களோடு ஒட்டாது என்றும், அத்வைதந்தான் உண்மையானது என்றும் தீர்மானம் செய்திருக்கிறார். மத்வமத கண்டனமாக ‘மத்வமத வித்வம்ஸனம்’ என்ற கிரந்தம் ஒன்றும் அப்பைய தீக்ஷிதரவர்களுடைய ஆக்ஞையின் மேல் செய்திருக்கிறார். அதெல்லாம் ஸித்தாந்திகளுக்குள் சண்டையை உண்டாக்குவது. எல்லா ஸித்தாந்திகளுக்கும் பொதுவானது வியாகரண வியாக்யானம்.)
அவர் செய்த ஸித்தாந்த கௌமுதிக்கு முன்பு, முன்சொன்ன ‘ரூபாவதாரம்’ என்னும் வியாகரண சாஸ்திரமே பிரஸித்தமாயிருந்தது. ‘ரூபம்’ என்பதற்கு இங்கே சப்தத்தின் ‘முழு ஸ்வரூபம்’ என்று அர்த்தம். அவதாரம் என்றால் இறங்குதல்; அதாவது, வரலாறு. இந்த ரூபாவதாரத்தை பிரஸிடென்ஸி காலேஜில் உபாத்தியாயராயிருந்த ரங்காசாரியார் என்பவர் பிரசுரம் செய்தார்.
அந்த ரூபாவதாரத்தைச் சொல்லி வைக்கிறவர்களுக்குத் தனியே ஒரு பாகம் ராஜமானியங்களிலிருந்து கொடுக்கப் பட்டதென்பது முன்னே சொன்ன சாஸனத்திலிருந்து தெரிய வருகிறதால், வியாகரணம் எவ்வளவு முக்கியமாக நினைக்கப்பட்டு வந்தது என்றும் புரிகிறது.
அந்த வேங்கி சாஸனம் ஏறக்குறைய 850 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டது. அதில் தானம் பெற்ற ஒவ்வொரு பிராம்மணனுடைய பேரும் இருக்கிறது. ஷடங்கவித் என்ற பட்டம் அந்தப் பிராம்மணர்களில் பல பேருக்கு இருக்கிறது. அவர்களுடைய பேர்களில் பல தமிழில் இருக்கிறது. அம்பலக் கூத்தாடுவான் பட்டன், திருவரங்கமுடையான் பட்டன் என்பவை போன்ற பல பெயர்கள் அதில் வருகின்றன. ஒன்று சிவக்ஷேத்திரங்களில் “கோயிலாக” இருக்கப்பட்ட சிதம்பர (அம்பல) சம்பந்தமுடைய பேர்; இன்னொன்று வைஷ்ணவ க்ஷேத்திரங்களின் “கோயிலான” ஸ்ரீரங்க சம்பந்தமுடைய பேர்!
இங்கே சைவம், வைஷ்ணவம் என்று நான் சொன்னாலும், அவர்கள் எல்லாரும் ஸ்மார்த்தர்களே. சிவபக்தியும் விஷ்ணுபக்தியும் எந்த காலத்திலும் இருந்தது. அதனால்தான் சிவன் பெயரும் விஷ்ணு பெயரும் அவர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். வடதேசத்திலும் மலையாளத்திலும் இப்பொழுதும் ஸ்மார்த்தர்களே பெருமாள் கோயில்களில் பூஜை செய்கிறார்கள். திருவரங்கமுடையான் பட்டன் என்றால், வைஷ்ணவரென்று நினைக்கவேண்டாம். ‘திருவரங்கமுடையான்’ என்பதை ஸம்ஸ்கிருதத்தில் ‘ரங்கஸ்வாமி’ என்போம். உடையான் என்றால் ஸ்வாமி. ‘ஸ்வம்’ என்றால் உடைமை.
திருவம்பலக் கூத்தாடுவானென்பது நடராஜாவுடைய தமிழ்ப்பெயர். அவருக்கும் வியாகரணத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைத்தான் சொல்ல வந்தேன். “ந்ருத்தாவஸாநே” ச்லோகத்தின் விஷயம் இதுதான். அவர் பெரிய கூத்து ஆடுகிறார். நாமெல்லாம் ஆடவேண்டிய கூத்தைச் சேர்த்து வைத்து அவர் ஆடுகிறார். அந்த நடராஜ விக்கிரஹத்தின் தலையில் படர்ந்தாற்போல் ஒன்று இருக்கும்; அது இரண்டு பக்கத்திலும் நீண்டு இருக்கும். அதில் சந்திரன் இருக்கும். கங்கையும் இருக்கும். அது என்ன? அதுதான் நடராஜாவுடைய ஜடாபாரம். இந்தக் காலத்தில் போட்டோ எடுக்கிறார்கள். அதில் “ஸ்நாப்-ஷாட்” என்பது ஒன்று. ஒரு வஸ்து சலனத்தில் இருக்கும்பொழுதே, திடீரென்று ஒர் அவஸரத்தில் போட்டோ எடுப்பது அது. நடராஜா வெகு வேகமாக நர்த்தனம் பண்ணுகிறார். பண்ணி நிறுத்தப் போகிற ஸமயத்தில் ஜடாபாரம் இரண்டு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த நிலையை அந்தக் காலத்துச் சிற்பி மனஸிலே எடுத்த ஸ்நாப்-ஷாட் தான் அந்த ஸ்வரூபம்.
நடராஜாவுடைய கையில் ஒரு உடுக்கு இருக்கிறது. அது குடுகுடுப்பாண்டி வைத்திருப்பதைவிடப் பெரியது, மாரியம்மன் கோயிற் பூஜாரி வைத்திருப்பதைவிடச் சிறியது. அதற்கு டக்கா என்றும் டமருகம் என்றும் பெயர்கள் உண்டு. பாதத்தின் தாளத்தை அநுஸரித்து, அந்த டமருக தாளமும் இருக்கும். இதன் ஒலியைத்தான் மேலே ச்லோகத்தில் ‘நநாத டக்காம்’ என்று சொன்னது.
வாத்தியங்களில் முக்கியமானவை மூன்று வகை. அவை சர்ம வாத்தியம் (டக்கா, மேளம், கஞ்சிரா, மிருதங்கம் போலத் தோல் சேர்ந்த வாத்தியம்) , தந்திரி வாத்தியம் (வீணை, ஃபிடில் போலத் தந்தி போட்டது) , வாயுரந்திர வாத்தியம் (நாயனம்,புல்லாங்குழல் முதலிய துளை போட்டுக் காற்றை ஊதும் கருவிகள்) என்பவை. இவைகளில் சர்ம வாத்தியம் தண்டத்தாலோ ஹஸ்தத்தாலோ அடிக்கப்படும். அந்த வாத்தியத்தை நிறுத்தும்பொழுது சாப்புக் கொடுப்பது, அதாவது, சேர்ந்தாற்போலச் சில அடிகள் அடிப்பது வழக்கம். அதுபோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் – ந்ருத்த அவஸானே- ஒரு சாப்புத் தொனி உண்டாயிற்று. அதைப்பற்றித்தான் முன்சொன்ன ச்லோகம் ஆரம்பிக்கிறது.
நடராஜா நிருத்தம் செய்கிறார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வியாக்கிரபாதர் முதலியவர்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மஹா தபஸ்விகள் ஆகையால் அந்த நிருத்தத்தைக் கண் கொண்டு பார்க்க முடிந்தது. நடராஜாவுடைய நடனத்தை ஞானநேத்திரம் உடையவர்கள்தாம் பார்க்க முடியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய விச்வ ரூபத்தைத் தரிசிக்கும் சக்தியை பகவானே அர்ஜுனனுக்குக் கொடுத்தார். இதே சக்தியை வியாஸர் ஸஞ்சயனுக்கும் கொடுத்து, அவனையும் விச்வரூபத்தைக் கண்டு திருதராஷ்டிர மஹாராஜாவுக்கு வர்ணிக்கும்படிப் பண்ணினார். அந்த ஸ்வரூபத்தை அவர்களால் மட்டும் பார்க்க முடிந்தது. குருக்ஷேத்ர யுத்த பூமியில் இருந்த மற்றவர்களால் பார்க்க முடியவில்லை. தேவதைகளும், ரிஷிகளும், யோகிகளும் ஸ்ரீ நடராஜமூர்த்தியின் தாண்டவத்தைப் பார்ப்பதற்காகப் பலப் பிரயத்தனம் செய்து, அதற்கு வேண்டிய பார்வையைப் பெற்றார்கள். அந்தப் பார்வை திவ்விய திருஷ்டி என்று சொல்லப்படும். ‘திவ்ய சக்ஷுஸ்’ என்று கீதையில் பகவான் சொல்கிறார்.
நிஜமான கண்களைக் கொண்டு ஸனகாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடராஜாவின் டான்ஸ் கச்சேரியில் விஷ்ணு மத்தளம் கொட்டிக் கொண்டிருக்கிறார். பிரம்மா தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். நிருத்தம் முடிகிற ஸமயத்தில், டமருகத்தில் சாப்பு கிடுகிடுவென்று 14 சப்தங்களாக உதிர்ந்தது. ச்லோகத்தில் சொன்ன ‘நவ பஞ்சவாரம்’ என்றால் ஒன்பதும் ஐந்தும் சேர்ந்த பதினாலு. நநாத டக்காம் நவபஞ்சவாரம்.
அந்தச் சப்தங்களின் கணக்குப் போலவே வித்தைகளின் கணக்கு 14 ஆகத்தான் இருக்கின்றது! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தச வித்யா என்கிற 14 என்றால், நடராஜாவின் சாப்பும் பதினாலு சப்தத்தையே கொடுத்தது!அந்தப் பதினான்கு சப்தம் ஸனகாதிகளை உத்தாரணம் செய்வதற்காக உண்டாயின என்கிறது ச்லோகம்.
தக்ஷிணாமூர்த்திக்குப் பக்கத்தில் வயதில் முதிர்ந்த நாலு பேர்கள் இருப்பதாகக் கோயிலில் பார்க்கிறோமே, அவர்தாம் ஸனகாதிகள். தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி, ஆழ்வார் பாட்டிலும், பல இடங்களில் “அன்றாலின் கீழிருந்து அறம் நால்வருக்கு உரைத்த” விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நால்வர்தம் ஸனகாதிகள்.
அப்படி எழுந்த சப்தங்கள் சிவஸ்வரூபத்தை ஏகபோகமாக அநுபவிப்பதற்கு மார்க்கமாக இருந்தன. அந்த சப்தங்களை “மாஹேச்வர ஸூத்திரம்” என்று வைத்து, அவைகளுக்கு நந்திகேச்வரர் ‘காரிகா’ (காரிகை) என்கிற பாஷ்யம் எழுதினார்.
அப்பொழுது அங்கே இருந்தவர்களுல் பாணினி மஹரிஷி என்பவர் ஒருவர். அந்தப் பாணினி என்பவருடைய கதை “பிருஹத் கதை” என்ற புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த பிருஹத் கதையானது, ஸம்ஸ்கிருதத்தின் பேச்சு மொழிக் கொச்சைகளான பிராகிருத பாஷைகள் ஆறில் ஒன்றாகிய பைசாச பாஷையில் குணாட்யர் என்பவரால் செய்யப்பட்டது.
பிருஹத் கதையின் ஸங்கிரஹத்தை (சுருக்கத்தை) க்ஷேமேந்திரர் என்பவர் ஸம்ஸ்கிருதத்தில் எழுதினார். அதை அநுசரித்து ஸோமதேவ பட்டர் “கதாஸரித்ஸாகரம்” என்று ஒன்று எழுதியிருக்கிறார். அரேபிய இரவுக் கதைகள் (Arabian Night Tales) ஈஸாப் கதைகள் (Aesop Fables) , பஞ்ச தந்திரக் கதைகள் முதலியவைகளுக்கெல்லாம் மூலம் அதில் இருக்கிறது. தமிழிலும் “பெருங்கதை” என்று ஒன்று இருக்கின்றது. ‘ப்ருஹத் கதை’என்ற வார்த்தையின் நேர் தமிழாக்கம் தான் ‘பெரும் கதை’.
‘கதாஸரித்ஸாகர’த்தில் பாணினியின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. மகத தேசத்தில், இப்பொழுது பாட்னாவென்று வழங்கும் பாடலிபுத்ரத்தில் வர்ஷோபாத்யாயர், உபவர்ஷோபாத்யாயர் என்ற இருவர் இருந்தார்கள். உபவர்ஷோபாத்தியாயர் இளையவர்.அவர் பெண் உபகோஸலை. வர்ஷோபாத்தியாயரிடம் வரருசி என்பவரும் பாணினியும் பாடம் கேட்டு வந்தார்கள். பாணினிக்குப் படிப்பு வரவில்லை. அதனால் அவரை வர்ஷோபாத்தியாயர், “ஹிமாசலத்திற்குப் போய் தவம் பண்ணு” என்று அனுப்பி விட்டார். அவர் அப்படியே போய்த் தபஸ் செய்து ஈச்வர கிருபையை அடைந்தார். நடராஜாவுடைய தாண்டவத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றார். நடராஜ தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார். வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி”எனப்படுகிறது.
அந்த பதினான்கு ஸூத்ரங்களையும் ஆவணியவிட்டம் பண்ணுகிறவர்கள் கேட்டிருப்பார்கள். மஹேச்வரனின் டமருவிலிருந்து உண்டானதால், அவை மாஹேச்வர ஸூத்ரம் எனப்படும்.
மநுஷ்யனின் கையால் அடிக்கப்படுகிற, அல்லது மீட்டப்படுகிற, அல்லது ஊதப்படுகிற வாத்யங்களிலிருந்து அக்ஷரங்கள் இல்லாத வெறும் சப்தந்தான் வருகிறது. நாதப்பிரம்மம் சப்தப் பிரம்மமுமாக இருக்கப்பட்ட பரமேச்வரனுடைய ஹஸ்த விசேஷத்தால், அந்த டமருகத்தின் சாப்புகளோ பதினாலு விதமான அட்சரக் கோவைகளாகவே ஒலித்தன! அவற்றைத்தான் ஆவணியவிட்டத்தில் கேட்கிறோம்:
1. அ இ உண்; 2. ருலுக்; 3. ஏ ஓங்; 4. ஐ ஒளச்; 5. ஹயவரட்; 6.லண்; 7. ஞம ஙண நம்; 8. ஜ2 ப4 ஞ்; 9. க4 ட4 த4 ஷ்; 10. ஜ ப3 க3 ட3 த3 ச்; 11. க2 ப2 ச2 ட2 த2 சடதவ்; 12. கபய்; 13. சஷஸர்; 14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸூத்ராணி.
ஆவணி அவிட்டத்தில் இதைச் சொல்கிற போது வேடிக்கையாகக் சிரித்துக்கொண்டே கேட்டிருப்பீர்கள். அது எந்த விஷயத்தைச் சொல்கிறது என்று தெரியாமலே ஒப்பித்திருப்பீர்கள். பரமேச்வரன் உடுக்கை அடித்துக்கொண்டு கிர்ர், கிர்ர் என்று சுற்றி ஆடி முடித்தபோது கொடுத்த சாப்புகள் தான் இவை.
சலங்கை ‘ஜல் ஜல்’ லென்று சப்திக்கிறது; டமாரம் ‘திமுதிமு’ என்று அதிர்கிறது; மேளத்தில் ‘டம் டம்’ என்று ஓசை வருகிறது என்கிறோம் அல்லவா? வாஸ்தவத்தில் இதே சப்தங்களா அவற்றிலிருந்து வருகின்றன? ஆனாலும் கிட்டத்தட்ட வருவதால்தான் இப்படிச் சொல்கிறோம். ‘பிப்பீ’ என்று நாயனம் ஊதினதாகச் சொல்லுவோமே யொழிய, ‘பிப்பீ’ என்று தவில் வாசித்தான் என்போமா? ‘டம்டம்’ என்று தவில் வாசித்ததாக சொல்லுவோமே யொழிய, ‘டம்டம்’ என்று நாயனம் ஊதியதாக சொல்வோமா? அடிக்கிற வாத்யங்களுக்குள்ளேயே மேளத்தை ‘டம் டம்’ என்றும் மிருதங்கத்தை ‘திம்திம்’ என்றும் சொல்லுகிறோம். ஊதுகிற வாத்யங்களுக்குள்ளேயே நாயனத்தைப் ‘பிப்பீ’ என்றால், சங்கை ‘பூம் பூம்’ என்று ஊதினான் என்றுதான் சொல்கிறோம். வீணை மாதிரி மீட்டுகளை ‘டொய்ங் டொய்ங்’ என்கிறோம். ஆகையால், எல்லா வாத்தியங்களிலுமே ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராவிட்டாலும் அக்ஷரம் மாதிரியான ஒலி வருகிறது என்றே ஆகிறது. மனிதர்கள் வாசிக்கிற வாத்தியங்களிலேயே இப்படியென்றால், ஸாக்ஷாத் நடராஜா, பஞ்ச கிருத்யம் செய்யும் பரமேச்வரன், அடிக்கிற உடுக்கிலே ஏன் ஸ்பஷ்டமாக அக்ஷரங்கள் வராது? இப்படிப் பதினாலு எழுத்துக் கூட்டங்கள் வந்தன.
இந்த எழுத்துக்களைப் பாணினி எப்படி உபயோகப் படுத்திக் கொண்டார் எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்ல ஒரு சுருக்கமான ஸம்ஜ்ஞையை [சமிக்ஞையை] இந்த ஸூத்ரங்களிலிருந்து பாணினி ஏற்படுத்திக் கொண்டார். 14 ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும் சேர்த்துச் சொன்னால், நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார். உதாரணமாக, ‘ஹயவரட்’ என்பதில் முதல் எழுத்தான ஹ-வையும், ‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது. அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். இப்படியே ‘அ இ உண்’ ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’ முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’ என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும். பதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து, ‘அல்’ என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும்.
அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம்.
‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது. எல்லா பாஷைகளுக்குமே அகாரம் ஆதியாயிருக்கிறது. உருது பாஷையில் ‘அலீப்’ என்பது முதலெழுத்து. கிரீக்கில் ‘ஆல்ஃபா’ என்பது முதலெழுத்து. இந்த இரண்டும் எழுத்துக்களையெல்லாம் குறிக்கும் ‘அல்’ என்பதிலிருந்து வந்ததுதான். லோகம் பூராவும் வைதிக மதம் இருந்ததற்கு இதுவும் ஒரு அடையாளம்.
இவ்வாறு வியாகரணத்திற்கு மூலகாரணமாயிருந்தது நடராஜாவினுடைய டமருகத்தில் இருந்து உண்டாகிய மாஹேச்வர ஸூத்திரங்களென்று தெரிகிறது.
லோகத்தில் சப்த சாஸ்திரங்களை ஏற்படுத்தியதற்குக் காரணமாக இருந்தவர் பரமேச்வரராகையினால்தான் சிவன் கோவிலில் வியாகரணதான மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது; பெருமாள் கோவிலில் இல்லை.
நடராஜாவுக்கருகில் பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இருவர் இருக்கிறார்கள். எந்தக் கோயிலிலும் அவர்களுடைய பிம்பங்களை நடராஜாவினுடைய பிம்பத்துக்குப் பக்கத்தில் பார்க்கலாம். சீர்க்காழிக்கருகில் ஒரு க்ஷேத்திரத்திற்குப் போயிருந்தேன். அங்கே கோயிலில் நடராஜாவுக்குப் பக்கத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர் இவர்களுடைய உருவங்களுக்குக் கீழே அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. எழுதுகிறவன் நன்றாக தெரிந்துக் கொள்ளாமையால் ‘பதஞ்சலி’ என்னும் பெயரைப் ‘பதஞ்சொல்லி’ என்று எழுதியிருந்தான். அந்தப் பெயரும் அவருக்குப் பொருந்தியதை நினைத்து அறியாமையிலும் ஒரு தத்துவம் இருக்கிறதென்று ஸந்தோஷம் அடைந்தேன்! “பதஞ்சொல்லி” என்பது எப்படிப் பொருந்தும்? ‘பதம்’ என்பது வியாகரணத்திற்கே ஒரு பெயர். பதவாக்ய ப்ரமாண என்கிறபோது ‘பதம்’ என்பதற்கு வியாகரணம் என்பதுதான் அர்த்தம். ஆகவே பதஞ்சொல்லி என்பதற்கு வியாகரணம் சொன்னவர் என்று அர்த்தமாகிறது. பதஞ்ஜலி வியாகரண பாஷ்யம் செய்தவர் என்பதை முன்பே சொன்னேன் அல்லவா?
‘பதஞ்சொல்லி’ என்று தப்பாக எழுதினதே பதஞ்ஜலிக்குப் பொருத்தமாயிருப்பதைப் பார்த்த போது, இன்னொன்று நினைவு வந்தது. ஸம்ஸ்கிருதத்தில் ‘குணாக்ஷர நியாயம்’ என்று ஒன்று சொல்லுவார்கள். ‘குணம்’ என்றால் செல்லு முதலான பூச்சிக்குப் பெயர். அது மரத்தையோ ஏட்டுச் சுவடியையோ அரித்துக் கொண்டே போயிருக்கும். சில சமயங்களில் இப்படி அரித்திருப்பதே எழுத்துக்களைப் பொரித்த மாதிரி இருக்கும். பூச்சி பாட்டுக்கு அரித்தது அக்ஷரங்களின் வடிவத்தில் அமைந்துவிடும். செல்லுப் பூச்சி உத்தேசிக்காமலே இப்படி ஏற்பட்டு விடுவதுண்டு. இம்மாதிரி உத்தேசிக்காமலே ஏதோ ஒன்றைப் பண்ணி அதிலும் ஒரு அர்த்தம் ஏற்பட்டு விடுவதை ‘குணாக்ஷர (குணஅக்ஷர) நியாயம்’ என்பார்கள். பதஞ்ஜலி பதஞ்சொல்லியானதும் குணாக்ஷர நியாயம்தான் என்று தோன்றியது. இது இருக்கட்டும்.
தஞ்சாவூர் ராஜ்யத்தில், நானூறு வருஷங்களுக்கு முன் நாயக வம்சத்தைச் சேர்ந்த ரகுநாத நாயக்கர் ஆண்டபோது ஏற்பட்ட ஸாஹித்ய ரத்னாகரம் என்ற காவியத்தை நான் பார்க்க நேர்ந்தது. அதை எழுதிய யக்ஞ நாராயண தீக்ஷிதர் பெரிய சிவபக்தர். அவர் அதிலே ஓரிடத்தில் சொல்லியுள்ள ஈச்வர ஸ்தோத்திரம் ஒன்றிலும் வியாகரணத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதௌ பாணிநிநாததோ (அ)க்ஷர ஸமாம்னா-யோபதேசேனஸ்ய:
சப்தானாம் அநுசாஸநான்யகலய: சாஸ்த்ரேண ஸூத்ராத்மனா|
பாஷ்யம் தஸ்ய ச பாதஹம்ஸகரவை: ப்ரௌடாசயம் தம் குரும்
சப்தார்த்த ப்ரதிபத்தி ஹேதும் அநிசம் சந்த்ராவதம்ஸம் பஜே
(ஸாஹித்ய ரத்னாகர காவியம், XI-124)
இந்த ச்லோகத்தில் வரும் ‘அக்ஷர ஸமாம்னாயம்’ என்பது வ்யாகரணத்திற்குப் பெயர். அக்ஷரங்களைக் கூட்டமாகச் சேர்த்து வைத்த இடம் என்று அர்த்தம். ஈச்வரனுடைய மூச்சுக்காற்று வேதம். அவருடைய கைக்காற்று அக்ஷர வேதம். அதாவது மாஹேச்வர ஸூத்திரம். “சப்தானுசாஸனம்” என்பதும் அதன் பெயர். ‘பாணிநி நாதத:’ என்பதற்குப் “பாணிகளால் (கைகளால்) சப்தம் பண்ணினாய்” என்றும், “பாணினிக்குச் சப்தம் ஏற்பட்டது” என்றும் சிலேடையாக இரண்டு அர்த்தங்கள் உண்டாகின்றன. அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது.
“நீ கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதஸரமாக இருக்கிறார்! இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது!” சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார்.
வியாகரணத்திற்கு இப்படி பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்.
*நந்திகேஸ்வர காரிகா-1