வேதத்தின் பாதம், மந்திரத்தின் மூக்கு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையைக் குறித்தது. ஆகையால் மந்திரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை உண்டு; அதன் மீட்டரான சந்தஸ் உண்டு; அதை லோகத்துக்குத் தந்த ரிஷியும் உண்டு. எந்த ரிஷியின் மூலமாக ஒரு மந்திரம் லோகத்திற்கு வந்ததோ அந்த ரிஷி அந்த மந்திரத்தின் ரிஷியாவார். அவர் பெயரைச் சொல்லித் தலையில் கையை வைத்துக்கொள்வது அவருடைய பாதங்களை சிரஸில் வைத்துக் கொள்வதற்கு அறிகுறி. ரிஷிகளால்தான் அந்த மந்திரங்கள் நமக்குக் கிடைத்தன; ஆகையால் அவர்களுக்கு முதலில் வணக்கம் செலுத்த வேண்டும்.

சந்தஸைச் சொல்லி மூக்கில் கை வைக்கிறோம். மந்திரத்தின் ரூபத்தை ரக்ஷிப்பது சந்தஸ். அது அதற்கு பிராணன் போன்றது. அதனால் பிராண ஸ்தானமாகிய மூக்கில் கையை வைக்கிறோம். மூச்சு இல்லாவிட்டால் பிராணன் இல்லையல்லவா? அதைப் போல, மந்திரங்களுக்கு மூச்சாக இருப்பது சந்தஸ். வேதம் என்ற மொத்த ரூபத்துக்கு சிக்ஷை மூக்கு, சந்தஸ் பாதம் என்றால், வேதத்திலுள்ள மந்திரங்கள் என்பதன் ரூபத்துக்குச் சந்தஸே மூக்கு, அதாவது ஜீவாதாரமான ச்வாஸ அவயவம்.

அந்த மந்திரத்தின் அதி தேவதையைத் தியானம் செய்ய வேண்டும். தேவதையின் ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில் தியானம் செய்து மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும். அதற்காகத் தான் தேவதையைச் சொல்லி ஹ்ருதயத்தைத் தொடுகிறோம்.

சந்தஸ் மந்திரங்களுக்கு ஆதாரம். கால் என்ற ஆதாரத்தின் மேல் நாம் நிற்பதுபோல், வேத புருஷன் சந்தஸாலேயே நிற்கிறார்.

சந்த:பாதோ வேதஸ்ய

என்று சொல்லியிருக்கிறது. காலில்லாமல் நிற்க முடியாது. வேதமந்திரங்களை சந்தஸின் அமைப்பே நிற்க வைக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சந்தஸ் சாஸ்திரத்தின் உபயோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  நிருக்தம் : வேதத்தின் காது
Next