பௌத்தமும் பாரத ஸமுதாயமும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

என் அபிப்ராயப்படி ஒரு காலத்திலும் பௌத்த மதத்தை பூர்ணமாக அநுஷ்டித்தவர்கள் நம் தேசத்தில் ஏராளமாக இருந்துவிடவில்லை. இப்போது சில பேர் தியாஸாஃபிகல் ஸொஸைட்டியில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துக்கள் மாதிரியேதான் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்; கல்யாணம் முதலானவற்றைப் பண்ணுகிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்ஸாவின் பக்தர்களாகச் சிலர் இருக்கிறார்கள். இவர்களும் பெரும்பாலும் ஸம்பிரதாயமான ஆசாரங்களைத்தான் பின்பற்றி வருகிறார்கள். ஸ்ரீ ஸி. ராமாநுஜாசாரியார், இப்போது “அண்ணா” (ஸ்ரீ என். ஸுப்ரமண்ய அய்யர்) முதலானவர்கள் ராமகிருஷ்ணா மிஷனில் நெருங்கின ஸம்பந்தமுள்ளவர்களாயிருந்தாலும், ஸம்பிரதாயமான ஆசார அநுஷ்டானங்களை விடாதவர்கள்தான். இப்படியே பல பெரியவர்கள் தோன்றுகிறபோது அவர்களுடைய கருணை, ஞானம் முதலான குணங்களால் அநேகர் ஆகர்ஷிக்கப்படுகிறார்கள். இருந்தாலும் அவர்கள் பேரிலேயே ஏற்பட்டிருக்கிற ஸ்தாபனங்களில் ஸநாதன வைதிக ஆசாரங்களை கொஞ்சமோ நிறையவோ மாற்றியிருப்பதுபோல், இந்த பக்தர்கள் தங்கள் அகங்களில் செய்வதில்லை. பழைய ஆசாரங்களைத்தான் அநுஸரித்து வருகிறார்கள். காந்தி, காந்தீயம் என்று எல்லாரும் இவரையும் ஒரு மதஸ்தாபகர் மாதிரி ஆக்கி, ராம-கிருஷ்ணாதி அவதாரங்களைவிடக் கூட காந்தி தான் பெரியவர் என்றெல்லாம் சொன்னாலும், இவர்களிலும் பெரும்பாலோர் சொந்த வாழ்க்கையில் காந்தி சொன்ன மாதிரி விதவா விவாஹம், பஞ்சமர்களோடு [ஹரிஜனங்களோடு] தொட்டுக்கொண்டு இருப்பது என்ற விஷயங்களில் காந்தீயத்தைக் கடைப்பிடிக்காமல்தானே இருக்கிறார்கள்? சொந்த வாழ்க்கையில் தியாகம், ஸத்யம், பக்தி, தொண்டு முதலான நல்ல அம்சங்கள் காந்தியிடம் இருந்ததால் அவரிடம் எல்லாருக்கும் மதிப்புணர்ச்சி ஏற்பட்டதால் அவர் சொன்ன கொள்கைகள் எல்லாவற்றிலும் இவர்களுக்குப் பிடிப்பு ஏற்பட்டதாக ஆகவில்லை. இப்படித்தான் புத்தரைப் பற்றியும் அவருடைய தனி வாழ்க்கையின் ( personal life -ன்) உயர்வைப் பார்த்து, ‘ஒரு ராஜகுமாரர் நல்ல யௌவனத்தில், லோகத்தில் கஷ்டமில்லாமல் பண்ண வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காகப் பத்தினியையும், புத்ரனையும் விட்டுவிட்டு ஒடினாரே! என்ன வைராக்யம்? என்ன தியாகம்? எவ்வளவு கருணை?’ என்று அவரிடம் மதிப்பு வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். இதனால் அவர் சொன்ன பௌத்தக் கொள்கைகளை எல்லாம் அவர்கள் ஒத்துக்கொண்டு அநுசரிக்க ஆரம்பித்ததாக அர்த்தமில்லை. வைதிக அநுஷ்டானங்களை புத்தர் கண்டித்தார் என்பதற்காக பெரும்பாலோர் இவற்றை விட்டு விடவில்லை. வர்ண விபாகம் [ஜாதிப் பகுப்பு], மற்ற யக்ஞாதி கர்மாக்கள் இவற்றைப் பண்ணிக் கொண்டே புத்தரையும் அவருடைய personal qualities- காக [தனி மனித குணநலன்களுக்காக]க் கொண்டாடி வந்திருக்கிறார்கள். புத்தர் ஆசைப்பட்ட மாதிரி கூட்டம் கூட்டமாக எல்லாருமே புத்த பிக்ஷூக்களாகிவிடவில்லை. வைதிக ஸமயாசரங்களுடன் கிருஹஸ்தர்களாகவே இருந்து வந்தார்கள்.

அசோக சக்ரவர்த்தி தாம் பௌத்தராக இருந்து பௌத்தத்துக்காக எவ்வளவோ பண்ணியிருந்துங்கூட, ஸமூகத்தில் வைதிக தர்மங்களை மாற்றவில்லை. வர்ணாச்ரம தர்மத்தை அவரும் ரக்ஷித்தே வந்திருக்கிறார் என்று அவருடைய புகழ் பெற்ற ஸ்தம்பங்கள், Edicts -லிருந்து தெரிகிறது. புத்த பிக்ஷூக்களைத் தவிர கிருஹஸ்தர்கள் பெரும்பாலும் வேத வழியைத் தான் அநுசரித்திருக்கிறார்கள். ஈச்வரனைப் பற்றியும் தெய்வங்களைப் பற்றியும் புத்தர் சொல்லாவிட்டாலும், பெரிய புத்த பிக்ஷூக்கள் எழுதிய புஸ்தகங்களில்கூட ஆரம்பத்தில் ஸரஸ்வதி ஸ்துதி இருக்கிறது. தாரா, நீலதாரா மாதிரி அநேக தெய்வங்களை அவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். திபெத் பக்கங்களிலிருந்துதான் தேவதாராதனத்துக்கான ஏராளமான தந்த்ர நூல்கள் கிடைத்திருக்கின்றன. ஹர்ஷன், பில்ஹணன் முதலியவர்களுடைய ஸம்ஸ்கிருத கிரந்தங்களையும், இங்கே இளங்கோ முதலியவர்களின் காப்பியங்களையும் பார்த்தால் ஸமுதாயத்தில் பௌத்தர் செல்வாக்கோடு இருந்த காலங்களிலும் வைதிக ஆசாரங்களும், வர்ணாசிரம விதிகளும் வழுவாமலே அநுசரிக்கப்பட்டுத்தான் வந்தன என்று தெரிகிறது.

இப்போது இதற்கு மாறாகச் சீர்திருத்தக்காரர்களும் வியாஸர், ஆசார்யாள், ராமாநுஜர் ஆகியோரைப் புகழ்கிறார்கள். இப்போது நான் சொல்கிற அநேக ஆசாரங்களை ஏற்றுக்கொள்ளாத சீர்த்திருத்தக்காரர்கள்கூட என்னிடம் வருகிறார்கள் அல்லவா? என்னிடம் ஏதோ நல்லது இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தானே, நான் சொல்கிற கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால்கூட ஒரு personal regard [மனிதர் என்ற தனிப்பட்ட முறையில் மரியாதை] காட்டுகிறார்கள்? இந்த மாதிரிதான் இந்த தேசத்தில் வைதிக சமயாசாரத்துக்கே கொஞ்சம் வித்யாஸமுள்ள கொள்கைகளை சொன்ன பெரியோர்களிடமும், ரொம்பவும் வித்யாஸப்பட்டு ஆக்ஷேபித்தே சண்டை போட்ட பெரியவர்களிடமுங்கூட, அவர்களுடைய சொந்த குணத்துக்காகவும் தூய்மையான வாழ்க்கைக்காகவும் எல்லோரும் மரியாதைச் செலுத்தி வந்திருக்கிறார்கள். ஆனாலும் மரத்திலே வஜ்ரம் பாய்ந்த மாதிரி நீண்ட நெடுங்காலமாக ஊறி உறைந்து உறுதிப்பட்டு விட்ட வைதிக ஸமய அநுஷ்டானங்களை விட்டு விடுகிற துணிச்சல் இந்தக் கடைசி ஒரு நூற்றாண்டு வரையில் நம் ஜனங்களுக்கு ஏற்படவில்லை. ஆகவே ஸகல ஜாதியினரும் அப்பன், பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வந்திருக்கிற ஆசாரங்களைத்தான் விடாமல் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். புத்தர் ஸமாசாரமும் இப்படித்தான் என்பது என் அபிப்ராயம். இதனால் அவர் கொள்கைகளை உதயனர், குமாரிலர் முதலானவர்கள் கண்டனம் பண்ணினவுடன், புத்தருடைய கொள்கைகளை முழுக்க ஒப்புக் கொண்டிருந்த கொஞ்சம் பேரும்கூடச் சட்டென்று அதை விட்டுவிட்டு பழைய வைதிகமான வழிக்கே திரும்பி வந்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பௌத்தத்தை வென்ற நியாமும் மீமாம்ஸையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சங்கரரும் இதர ஸித்தாந்தங்களும்
Next