வேத உச்சரிப்பால் பிரதேச மொழி விசேஷமா ? பிரதேச மொழியை வைத்து வேத உச்சரிப்பா ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தில் எந்த எழுத்து எந்தப் பிரதேசத்தில் சிறப்பாக இருந்திருக்கிறதோ, அதே எழுத்துத்தான் அந்தந்தப் பிரதேசத்துப் பாஷையிலும், அவர்களுடைய பேச்சிலும் சிறப்பாக இருந்திருக்கிறது என்று தெரிவிப்பதற்காக இவ்வளவும் சொன்னேன். இதிலிருந்தே எல்லாத் தேசங்களிலும் வேதம் இருந்ததும் தெரிகிறது. நமக்கு நன்றாகத் தெரிகிற தமிழ் தேசத்தில் வேதம் இல்லாமல் இருந்த காலமே இல்லை என்றும் தெரிகிறது.

தமிழ் என்பதிலேயே ழ் என்று உட்கார்ந்து கொண்டு, நம் பாஷைக்கு பெருமையைத் தருகிற ழ காரம் வேதத்தின் தலவகார சப்தப் பிரகாரம் உண்டானதுதான்.

இப்படிச் சொல்வது சரியா? அல்லது தமிழிலே ழ இருக்கிறதாலும், வடக்கே பாஷைகளில் ஜ இருக்கிறதாலுந்தான், அந்தந்த பிரதேசங்களிலுள்ளவர்கள் வேதத்திலும் இப்படிப்பட்ட சப்தங்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று பண்ணிக் கொண்டார்கள் என்றால் சரியாயிருக்குமா? ஏற்கெனவே பிரதேச மொழிகளில் இருந்ததைத்தான் பிற்பாடு வேதத்திலும் எடுத்துக்கொள்ள இடம் தந்திருப்பார்களோ? அதையே தான் தலைகீழாக மாற்றி, வேதத்திலிருந்த ழ சப்தம்தான் தமிழுக்கு முக்யமாக ஆயிற்று, அதன் ஜ வடக்கத்திக்காரர்களுக்கு முக்யமாக ஆயிற்று, ப வங்காளிக்கு விசேஷமாக ஆயிற்று என்று சொல்கிறேனா? இதிலே எது சரி?

வேத சிக்ஷை விதிதான் பிரதேச பாஷைகளிலும் முக்கியமான ஒலியாக வந்தது என்பதுதான் சரி. ஏனென்றால் பிராதிசாக்ய விதி ஒரு பிரதேசத்துக்கு மட்டும் ஏற்பட்டதல்ல;அந்த சாகை அநுஷ்டானத்திலுள்ள ஸகலப் பிரதேசத்துக்கும் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல், எங்கேயாவது காஷ்மீரிலோ, காமரூபத்திலோ (அஸ்ஸாம்) ஒரு தலவகார சாகா அத்யாயி (அத்யயனம் செய்பவன்) இருந்தாலும், அவன் மற்றவர்கள் ட வும் ள வும் சொல்கிற மந்திரங்களில் ழ வைத்தான் சொல்லுவான். ஒரு பிரதேசத்துக்கு என்றில்லாமல், அதாவது தெலுங்கன் மட்டுமில்லாமல் கிருஷ்ண யஜுஸில் அத்யயனம் பண்ணுகிறவன் எந்த பாஷைக்காரனாக இருந்தாலும், அவன் குஜராத்தில் இருந்தாலும், மஹாராஷ்டிரத்தில் இருந்தாலும், வேறே எங்கே இருந்தாலும் ட தான் சொல்ல வேண்டும். இப்படியே கன்னடஸ்தன் மட்டுமின்றி ரிக்வேதியாக இருக்கப்பட்ட எவனுமே ‘ ள ‘ காரம் தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட பிரதேசத்துக்கு என்றில்லாமல் பொதுவாக எழுதி வைக்கப்பட்ட பிராதிசாக்யத்தில் இப்படித்தான் சப்த ரூபத்தை நிர்ணயம் பண்ணிக்கொடுத்திருக்கிறது. ஆகவே, ஒரு சாகை எங்கே அதிகமாக அநுஷ்டிக்கப்படுகிறதோ அங்குள்ள பிரதேச பாஷையிலும் இந்த அக்ஷர விசேஷம் நாளடைவில் உண்டாகி விடுகிறதென்றே ஆகிறது.

பெரும்பாலும், ம்ருக சீர்ஷ நக்ஷத்திரம் பௌர்ணமியன்று வருகிற ஒரு மாஸத்துக்கு ‘ மார்கசீர்ஷி ‘ என்று பேர் வைக்கப்பட்டது. அதைத்தான் நாம் ‘மார்கழி’ என்கிறோம். ‘ஷி’ என்பது ‘ டி’ யாகி, ‘டி’ என்பது ‘ழி’ ஆகிவிட்டது. முதலில் ஷ என்பது ட ஆனது, தமிழ் மொழிப் பண்பின்படியாகும். ‘புருஷன்’ என்பதை தமிழில் ‘புருடன்’ என்போம். ‘நஹுஷன்’ என்பதை ‘நகுடன்’ என்றே கவிதையில் எழுதியிருக்கும். கம்பர் விபீஷணனை ‘வீடணன்’ என்றுதான் சொல்கிறார். சரி, அதனால் ‘ மார்கசீர்ஷி ‘ என்பது ‘ மார்கசீர்டி ‘யாகி நடுவிலே உள்ள சீர் உதிர்ந்து போனாலும், மார்கடி என்றுதானே நிற்க வேண்டும்? ஏன் ‘ழ’ காரம் வந்து, ‘மார்கழி’ ஆயிற்று என்றால், இதுதான் தமிழ் நாட்டில் பிராசீனமாயிருந்த தலவகார சாகையின் சிறப்பினால் ஏற்பட்ட விளைவு.

இந்த சாகைக்காரன் ‘ழ’ சொல்கிற இடத்திலே, க்ருஷ்ண யஜுர்வேதிகள் ‘ட’ சொல்வார்கள் அல்லவா?இந்தப் பழக்கம் அவர்களை அறியாமலே அவர்களுக்கு இன்னமும் விட்டுப்போகவில்லை. எப்படிச் சொல்கிறேன் என்றால், தெலுங்கு தேச வைஷ்ணவர்கள் நம்முடைய தமிழ் திவ்யபிரபந்தங்களைச் சொல்லி கோவிலில் பகவானுக்கு அர்ப்பணம் பண்ணுகிறார்கள். திருப்பதியில் வேங்கடரமண ஸ்வாமிக்கு இப்படித் ‘திருப்பாவை’ அர்ப்பணம் பண்ணப்படுகிறது. அதன் எடுத்த எடுப்பில் “மார்கழித் திங்கள்” என்று வருகிறதல்லவா? ‘ழி’ என்பது தெலுங்கர்களின் வாயில் வராது. அதனால் ‘ மார்களி ‘ என்றோ ‘ மார்கலி’ என்றோ சொல்லலாமல்லவா? ஆனால் இப்படியும் சொல்வதில்லை. ‘ மார்கடி திங்கள் ‘என்று ட காரம் போட்டே சொல்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள ஸாமத்தைத் தாங்கள் யஜுஸில் சொல்லும்போது ழ என்பது ட ஆவது அவர்களுக்கே தெரியாமல் ரத்தத்தில் ஊறி வந்திருக்கிறது. அதனால் தான் ‘ மார்கழி ‘யை ‘ மார்கடி ‘ என்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேத சப்தமும் பிரதேச மொழிச் சிறப்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மாதப் பெயர்கள்
Next