நாம் ஏன் ஜெயிப்பதில்லை? ஒலிம்பிக் போட்டிகள் ஏதேன்ஸ் நகரில் தற்சமயம் நடைபெற்று வருகின்றன மற்ற நாடுகள் பதக்கங்களை அள்ள இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டும் ஜெ

நாம் ஏன் ஜெயிப்பதில்லை?

ஒலிம்பிக் போட்டிகள் ஏதேன்ஸ் நகரில் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. மற்ற நாடுகள் பதக்கங்களை அள்ள இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டும் ஜெயித்துள்ள விஷயம் சிந்தனைக்கரியது. மற்றவர்கள் ரப்பர் போல உடலை வளைத்து சாகஸம் புரியும்போது அதுபோல் ஏன் நம்மால் முடியவில்லை? நீச்சலில் அமெரிக்க வீரல் பெல்ப்ஸ் தங்கத்தை அள்ள நாம் அதைப் பார்த்து வாய் பிளந்து நிற்கிறோம்!இது எதனால்? ஏன் எல்லாவற்றிலும் தோல்வி? என்ற கேள்விகள் எழுகின்றன. பதில்தான் என்ன? என்று மனம் குமைகிறது. நமது உடலை கட்டுக் குலையாமல் வைத்திருக்கவும், போட்டிகளில் பரிசை வெல்வதையும் எத்தனையோ உபதேசங்களை இக்காலத்திய மருத்துவர்கள் எடுத்துரைத்தாலும் ஆயுர்வேத உபதேசங்கள் போல் அமையுமா? என்பது சந்தேகமே!அவற்றின் சில ஆலோசனைகளை பற்றி சிந்திப்போம்.

தமது சந்ததியினர் நல் ஆரோக்யத்துடன் திகழ தாயும் தந்தையும் பழக்க வழக்கங்களை தூய வழியில் அமைத்துக் கொள்ள வேண்டும். மனிதனின் ஆரோக்யமும் பலமும் மூன்று வழிகளில் மட்டும்தான் மேம்பட முடியும். அவை 1. ஸஹஜ பலம் 2. கால பலம். 3. யுக்தி கிருதபலம் என்று.

ஸஹஜ பலம் என்பது கருக்குழியில் சேரும் பெண்ணின் முட்டையும் ஆணின் விந்துவும் குழந்தையின் ஆரோக்யத்தை தீர்மானம் செய்யும் திரவியங்கள். ஆனும், பெண்ணும் நோயற்றவர்களாக நல்ல ஆரோக்யத்துடன் திடகாத்திரத்துடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தைக்கு தரும் பலம் மிகப் பெரிய வரப் பிரசாதம் என்று கூற வேண்டும்.

பெண் கருவுற்றிருக்கும் போது ஒவ்வொரு மாதமும் உண்ண வேண்டிய உணவு முறை, அவளுடைய செயல்பாடுகள் ஆகியவை குழந்தையின் அங்க வளர்ச்சியை எவ்வாறு நிர்ணயிக்கின்றன என்ற விபரங்களை நுண்ணிய நோக்குடன் ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது.

காலபலம் என்பது பருவகாலங்களின் மூலம் நாம் எவ்வாறு ஆரோக்யத்தைப் பெறலாம் என்பதே. முன் பனி மற்றும் பின்பனிக் காலங்களால் நமது உடலில் சேரும் உறைந்த கபமானது வஸந்த காலத்தின் வெயிலால் உருகி வயிற்றில் பசி எனும் தீயை மந்தமாக்கிவிடுகிறது. கெட்டு நீர்த்துப் போன கபத்தை வெளியேற்ற வாந்தி சிகித்ஸையும், மூக்கிலும் விடப்படும் நஸ்யமுறையும் கபத்தைப உடலிலிருந்து வெளியேற்றுவதால் பசித்தீ கெடாமல் ஆரோக்யத்தைப் பாதுகாக்கிறது.

வஸந்த காலத்தின் உடல் சுத்தியாலும் கோடைக் காலத்தின் வறட்சியாலும் மழைக்காலத்தின் ஆரம்பத்தில் வாயுவின் சீற்றம் உடலை பாதிக்கிறது. மழைக்காலத்தில் வாயுவை சீராக்க மேற் கொள்ளும் வஸ்தி எனும் எனிமா மேலும் பஞ்சகர்மா முறைகளால் வாயு கீழடக்கப்பட்டு உடல் வளம் பெறுகிறது.

மழையின் திடீர் வரவால் சூடான பூமியில் நீர்த்துளி விழுந்ததும் வேக்காட்டை அடைந்த புளிப்புச் சுவையின் பாதிப்பு உணவுகளில்

காணப்படுவதால் சரத்ருது எனும் பருவத்தில் பித்தம் சீற்றம் பெறுகிறது. பித்தத்தை நீக்கும் பேதி மருந்து, கசப்பு, துவர்ப்பு, இனிப்புச் சுவை போன்ற உணவு முறைகளால் உடலின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும்.

யுக்தி கிருத பலம் என்பது சிந்தனைத்திறனால் ஆரோக்யத்தை சம்பாதித்துக் கொள்வது. உதாரணத்திற்கு கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் '' என்று தொலைக்காட்சி விளம்பரத்தில் கூற நாமும் நமது மளிகை லிஸ்ட்டில் கிலோ என்று எழுதுகிறோம். அதற்குக் காரணம் நமது சிந்தனையில் ஆழப் பதித்துள்ள ஆரோக்ய பாதுகாப்பின் வெளிப்பாடே.

இதில் நம் சந்தேகம் என்னவென்றால் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் ஆயுர்வேதத்தின் ஆரோக்ய குறிப்பறிந்தவர் அல்லவே? அப்படியிருக்க அவர்கள் எவ்வாறு இவ்வளவு திடகாத்ர உடலுடன் உள்ளனர்? என்பதே. சீரான உடற்பயிற்சியும், ஊக்குவிக்கும் பயிற்சியாளர்களும், திட்டமிட்ட உணவாலும், பொருளாதாரத்தின் மேம்பாட்டால் உடற்பயிற்சி சாதனங்களையும் அவர்கள் ஒரு சேர பெற்றிருப்பதால் மன மகிழ்ச்சியுடன் வேறு சிந்தனையின்றி வெற்றி இலக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் அவர்களால் வெற்றிக் கனியை சுலபமாக பறிக்க முடிகிறது.

நாமும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல. நமது தேசத்தின் அமைப்பை மனதிற்கொண்டு ஆரோக்யம் மட்டும் பலமும் மேம்பட நமது முனிவர்கள் நமக்கு ஆயுர்வதேம் எனும் அமுதத்தின் வாயிலாக எடுத்துரைத்துள்ள குறிப்புகளை வாழ்வில் கடைபிடிப்பதன் மூலம் உலக அரங்கில் நம்மால் பல பதக்கங்களை வெல்ல முடியும். உடலால் மட்டுமல்ல, மனதாலும் நம்மால் ஆன்மீகத்தின் வழியாக மற்றவர் மனதை கொள்ளை கொள்ள முடியும். வரும்காலங்களில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் முதல் இடத்தில் வர ஆயுர்வேத உபதேசங்கள் பலவற்றை மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்குப் போதிக்க வேண்டும்.