முத்தியால்பேட்டை ப்ரஸன்ன வேங்கடேசர்.
வாலாஜாபாத் அருகில் உள்ள முத்தியால் பேட்டையில் ப்ரதான சாலையில் வீர ஆஞ்சனேயர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில். முதலில் நாம் சஞ்ஜீவி மலையை வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி ஸேவை தரும் வீர ஆஞ்சனேயரை வணங்கி விட்டுச் செல்வோம். இந்த ஆலயத்துடன் தொடர்புடையவை மஹாகணபதி ஆலயம், ராமர் பஜனை கோவில் இறண்டுமாகும். இந்தக் கோவில் காலை 8மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்ததிருக்கும் என அறிகிறோம்.
ஸந்நிதி கருடனை வணங்கி நுழைந்ததும் நாம் முதலில் பத்மாவதித் தாயாரின் மூலவரையும், உற்சவரையும் தரிசிக்கிறோம். தாயாருக்கு மண்டலாபிஷேகம்
அவ்வப்போது நடப்பதாகத் தெரிய வருகிறது. ப்ரதான ஸந்நிதியில் ஸ்ரீப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக நின்ற திருக்கோலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் காட்சி அளிக்கிறார். நம்மாழ்வார், ராமானுஜர், காளிங்க நர்தன க்ருஷ்ணர், விஷ்வக்சேனர் ஆகியோரும் ஸந்நிதியிலுள்ளனர். ஆண்டாள் ஸந்நிதி இல்லை. கூடிய விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தெரிய வருகிறது. கோவில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருவது பாராட்டத் தக்கதாகும். வேங்கடரமணா கோவிந்தா. சங்கடஹரணா கோவிந்தா என்று பக்தர் ஒருவர் பாட நம் மனமும் அதிலேயே லயித்துப் போகிறது.