சித்திர ஆதிசங்கரர்
இவ்விருவரும் எப்பொழுதும் பூஜை செய்வதிலும், ஏழை எளியவருக்குத் தான தருமம் செய்வதிலும் ஈடுபட்டிருப்பார்கள். மிகவும் நல்லவர்களான இந்த தம்பதியினர்க்கு ஒரு பெரிய மனக்குறை இருந்தது. தங்களுக்கு குழந்தையே இல்லை என்பதுதான் அந்தக்குறை. விருஷாசலம் என்றும் சிவபுரம் என்றும் கூறப்படும் திருச்சூர் என்ற பெரிய சிவசேத்திரம் ஒன்று கேரளத்தில் உள்ளது. அங்குள்ள சிவபெருமானை மனமார ஒரு மண்டலம் (48 நாட்கள்) வழிபாடு செய்து வந்தால் மகப்பேறு கிடைக்கும் என்று சிவகுரு தம்பதிகள் கேள்விப்பட்டனர். உடனே திருச்சூருக்குப் புறப்பட்டனர். 'வடக்கு நாதன்' என்ற பெயரில் திருச்சூரில் கோயில் கொண்டுள்ள சிவ பெருமானை நாள்தோறும் ஆறுகாலமும் நெஞ்சுருகி வழிபட்டு வந்தனர். வடக்கு நாதனுக்கு நெய்யாலேயே அபிஷேகம் செய்வது வழக்கம் - எப்பொழுதும் வடக்குநாத சிவலிங்கம் நெய் விழுதுகளில்தான் புதைந்திருக்கும். அதைப் பார்த்தால் பனி மலையின் நடுவே பரமசிவன் விளங்குவது நினைவுக்கு வரும். இந்த நெய்யைப் பிரசாதமாகப் பெற்று உட்கொண்டால் தீராத வியாதிகளும் தீரும். சிவகுரு தம்பதியரின் உண்மையான பக்தியைக் கண்டு வடக்கு நாதனின் நெஞ்சம் நெய்போலவே உருகியது. அவர்களை கொஞ்சம் சோதனை செய்து விட்டு வரம் தர எண்ணினார். இருவரது கனவிலும் தோன்றினார் சுவாமி "உங்கள் பக்தியை மெச்சினேன். நீங்கள் விரும்பியபடி புத்திரவரம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. உங்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட, ஆனால் புத்தியில்லாத, பல குழந்தைகள் வேண்டுமா? அல்லது அற்ப ஆயுள் கொண்ட, ஆனால் புத்தியில் மிகச் சிறந்த ஓரே பிள்ளை வேண்டுமா? இரண்டில் ஓன்றைத் தான் தருவேன். நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் சிவபெருமான். பக்தியில் சிறந்த அத்தம்பதியரோ, "தேர்தெடுக்க நாங்கள் யார்? எங்களுக்கு எது நல்லதோ, நாட்டுக்கு எது நல்லதோ அதே இறைவனான நீயே அறிவாய். எனவே உன் விருப்பப்படியே செய்தருள்வாய்" என்றனர். |
|