அவர் ஸமாசாரம் வேறே. அவர் நம் மாதிரி இல்லை, அவர் ஒரே ஸமயத்தில் மாயையோடேயும் சேர்ந்திருப்பார். தனித்து ஆத்மாவாகவும் இருப்பார். அவருடைய ஆதிக்கத்திலுள்ள மாயை நமக்குத்தான் நம்முடைய ஆத்மா தெரியாத விதத்தில் மனஸ் என்ற தடுப்பைப் போட முடியுமேயொழிய அவருக்கே போட முடியாது. அதனால் அவர் எவ்வளவு மாயக்கூத்து அடித்துக்கொண்டு ஈச்வரனாக, அவருடைய நிஜ – நிலையில்லாத மாதிரி இருந்தாலும் அப்போதும் பூரண ஞானத்துடன் தான் ப்ரஹ்மமே என்ற அநுபவத்திலேயே உள்ளூற இருந்து கொண்டுதானிருப்பார். ஒரு யோகி ஸித்துகள் பண்ணி என்னென்னவோ மாயக் காட்சிகள் காட்டுகிறபோது, ஏன் ஒரு ஸாதாரண செப்பிடு வித்தைக்காரன்கூட ‘மாஜிக்’ செய்யும்போது, மற்றவர்கள் தான் அவற்றை நிஜமென்று நினைத்து மயங்குவார்களே தவிர, மாயைக்கு (மாயை என்றால் ‘மாஜிக்’ என்று அர்த்தம். அப்படிப்பட்ட மாயைக்குக்) காரணமான அந்த யோகியும் ‘மாஜிக்-ஷோ’க்காரனும் அப்படி மயங்குவார்களா? இப்படித்தான் ஈச்வரன் — தக்ஷிணாமூர்த்தியாக இருக்கப்பட்டவன் — லோக லீலை செய்வதும். ஆசார்யாளே சொல்லியிருக்கிறார்:
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ஸ்வேச்சயா |
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே ||
அதெப்படி மாயா ஸஹிதனாக இருந்துகொண்டே மாயா ரஹிதனான ஞானியாயும் ஈச்வரன் இருப்பாரென்றால், இதற்கு ஒரே பதில், ‘அவர் ஈச்வரனோல்லியோ? அதனால் அவர் எப்படியும் இருக்கமுடியும். அதிலே இப்படி இருக்கிறார்’ என்பதுதான்! நம்மாலெல்லாம் செய்ய முடியாததைச் செய்பவர்தானே ஈச்வரன்? நம்மால் ஏதோ ஒரு மாதிரி இருக்க முடியாவிட்டால், அது அவருக்கும் முடியாது என்று நாம் நினைப்பது எப்படி ஸரியாகும்? நம்மை அவர் இப்படியிப்படிப் பண்ணிப் போட்டிருக்கிறார். அதற்காக அவரும் இப்படியே இருக்கவேண்டும் என்று ஆகுமா? ஞானியையும் அவர்தான் பண்ணியிருக்கிறார்; அஞ்ஞானியையும் அவரே தான் பண்ணியிருக்கிறார். அப்போது அவர் ஏன் இரண்டு பேர் மாதிரியும் ஒரே ஸமயத்தில் இருக்கக் கூடாது?
நிர்குணமான அவரேதான் தனக்குள்ளே ஸகுணமான பராசக்தியை அடக்கிக் கொண்டிருக்கிறாரென்று பார்த்தோமல்லவா? அதிலேயே எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியாகிவிட்டது! முரண்பாடுகள் போலத் தெரியும் ஸகலமும் அங்கே ஸமன்வயப்பட்டுப் போய்விடுகின்றன.
அதனால், அவர் கருணையில் நினைக்கும்போதும் தன்னிலை பெயராமலேதான் இருந்தார். தன்னுடைய ‘மாஜிக் ஷோ’ இவ்வளவு கோணாமாணாவாக போய்க் கொண்டிருக்கிறதே என்று இரக்கம் கொண்டு அதை ஸரி செய்யணுமென்று நினைத்தார்.