விபரீதம் விளைந்தது! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தாம் திரை போட்டுக்கொண்டு க்ளாஸ் எடுக்கும்போது உத்தரவில்லாமல் வெளியே போகிறவர்கள் அப்படி (ப்ரம்மரக்ஷஸாக) ஆகிவிடுவார்கள் என்று ஆஜ்ஞை பண்ணிவிட்டுப் பதஞ்ஜலி அநேக காலம் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

திரையை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் தூக்கிப் பார்க்கக்கூடாதென்றும் உத்தரவு போட்டிருந்தார். அக்னி ஜ்வாலையைத் தாங்கமுடியாது என்பதால்.

இப்படி, ரொம்ப நாள் பாடம் நடந்தது. அப்புறம், கதை வளர வேண்டாமா? அதனால் ஒரு சிஷ்யனுக்கு, ‘எப்படி இவர் ஒரு ஆஸாமியாக இருந்துகொண்டே ஆயிரம் பேருக்கும் சொல்லிக் கொடுக்கிறார்? திரை போட்டுக்கொண்டு என்னவோ ஸித்து, கித்து பண்ணிச் செய்கிறார்போல இருக்கிறது. அது என்ன என்றுதான் பார்த்து விடுவோமே!’ என்று கட்டுப்படுத்த முடியாத ஆவல் உண்டாயிற்று.

எச்சரிக்கையை மீறித் திரையைத் தூக்கிப் பார்த்தான்.

ஆதிசேஷ ஸ்வரூபத்துடன் ஆயிரம் சிரஸோடு இருந்தவரின் ஜ்வாலாமயமான திருஷ்டியும் விஷ ச்வாஸமும் பட்டு, அத்தனை சிஷ்யர்களும் பஸ்மமாகிவிட்டர்கள்!

குரு வசனத்தைக் கேட்காமல் மீறினால் மஹத்தான அனர்த்தம்தான் உண்டாகும் என்பதற்கு நிரூபணமாக இப்படி ஆயிற்று : “குருவசந – வ்யதிலங்கநம் ஹ்யநர்த்த:” என்று ‘பதஞ்ஜலி சரித’த்தில் இந்த இடத்தில் சொல்லியிருக்கிறது.

இப்படி வ்யாகரண பாடம் ஒரே விபரீதத்தில் முடிந்தது.

முழு விபரீதமாகப் போகாமல் அதில் ஒரு சின்ன விலக்கு ஏற்பட்டது. என்னவென்றால் ஆயிரம் சிஷ்யர்களும் பஸ்மமாகாமல் ஒருத்தர் மாத்ரம் தப்பினார். பாக்கி 999 பேர்தான் எரிந்து போனது. ‘ஆயிரத்தில் ஒண்ணு’ என்று சொல்லும் வழக்கம் அதிலிருந்துதான் வந்ததோ என்னவோ?

அந்த ஒருத்தர் எப்படித் தப்பினாரென்றால், அவர் கொஞ்சம் மந்த புத்திக்காரர். பாடம் அவருக்கு அவ்வளவாகப் புரிவதில்லை. இத்தனை நாள் எப்படியோ கட்டுப்பாடாக உட்கார்ந்துகொண்டிருந்து விட்டார். புத்தி ஸூக்ஷ்மம் இல்லாதவர் தானென்றாலும் அவர் ஆயிரம் மைலுக்கு அந்தண்டை இருக்கும் வங்காளத்திலிருந்தாக்கும் படிக்க வந்தவர். கௌடதேசம் என்று அதைச் சொல்வார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பிரம்மரக்ஷஸ்;ராக்ஷஸ ஜாதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கெனடர்;திராவிடர்
Next