தப்பித்த சிஷ்யர் கௌடர். இத்தனை நாளாகப் பல்லைக் கடித்துக்கொண்டு க்ளாஸில் இருந்துவந்த அவருக்கு இன்றைக்கு ஜலமோசனம் பண்ணனும்போல இருந்தது. அதை சாக்காக வைத்துக்கொண்டு எழுந்திருந்து போய்விட்டார்.
அப்புறம் அவர் கொஞ்சம் சுற்றிவிட்டுத் திரும்பியபோது பார்த்தால் 999 ஸஹ மாணவர்களும் இருந்த இடம் தெரியவில்லை. குருவானால், ‘இத்தனை காலம் இத்தனை ச்ரமப்பட்டுப் பாடம் நடத்தியதெல்லாம் நிஷ்ப்ரயோஜனமாச்சே! சீக்ரம் முடித்துவிட்டு நடராஜவிடமே இருந்து கொண்டிருக்கணும் என்று நினைத்துப் பண்ணினது ஒரே விபரீதமாக ஆச்சே! பாவம், எங்கேயெங்கேயிருந்தோ வந்த குழந்தைகளின் கதி இப்படி ஆனதே! என்று துக்காக்ராந்தராக உட்கார்ந்திருந்தார்.
‘சொல்லாமல் வெளியே போனோமே!’ என்று பயந்து நடுங்கிக்கொண்டு கௌட தேச சிஷ்யர் பதஞ்சலியிடம் போனார்.
பதஞ்ஜலிக்கானால் ‘அப்பா! ஒருத்தனவாது தப்பினானா?’ என்று இவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலே ஆயிற்று. துக்கம் போய்க் கொஞ்சம் ஸந்தோஷம் ஏற்பட்டது. அதனால் இன்முகத்துடனேயே கௌடரை வரவேற்றார்.
ஆயிரம் சிஷ்யாளைக் கொண்டு வ்யாகரண சாஸ்த்ரத்தை ப்ரமாதமாக ப்ரசாரமாக செய்யவேண்டுமென்று போட்ட பெரிய ப்ளான் ஃபெயிலாகிவிட்டதல்லவா? அதனால் அப்படியெல்லாம் ஆகாசக் கோட்டை கட்ட வேண்டாம், மிஞ்சின இந்த ஒருத்தருக்குச் சொல்லிகொடுத்து, இவர் மூலமே ப்ரசாரமாகிறவரை ஆகிவிட்டுப் போகட்டும் என்று முடித்து விடலாமென்று பதஞ்ஜலி நினைத்தார்.
‘மிஞ்சினவன் நல்ல புத்திசாலியில்லாம்மல் மந்தனாக இருக்கிறானே! இவனுக்கு எத்தனைக் காலம் சொளிக்கொடுப்பது? ஏற்கனவே இத்தனை காலம் வீணான பிறகு இன்னமும் எத்தனை நாள் எடுத்துக்கொள்வது?’ என்று யோசித்தார். ஒரு வழி தோண்றிற்று. ‘புத்தி சக்தியால் பண்ணி லேசில் பாடம் முடிக்க முடியாது. அநுக்ரஹ சக்தியால்தான் ஸுலபமாக ஸாதிக்க வேண்டும். ஒரு தகப்பனார்காரர் ஆயுஸ் முழுக்கச் சேர்த்த பொன்னை, பொருளை அப்படியே மூட்டையாகக் கட்டி க்ஷணத்தில் பிள்ளையிடம் கொடுப்பதுபோல நம்முடைய வ்யாகரணஞானம் முழுதும் க்ஷணத்தில் இந்தப் பையனின் புத்தியில் ப்ரகாசிக்கும்படியாக அநுக்ரஹித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார்.
தெய்வ புருஷர்கள் அநுக்ரஹ சக்தியால் எதுவும் செய்வார்கள். எந்த ஊரிலோ பாடுவதை மின்ஸார அலையாக்கி அந்த அலையை மறுபடி பாட்டாக்கி, க்ஷணகாலத்தில் இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமல்லவா? இதைவிட இன்னும் அதிசயமான transmission எல்லாம் மஹான்கள் பண்ணுவார்கள். தங்களுடைய ஞானத்தை, தபோபலத்தை எல்லாங்கூட அப்படியே சிஷ்யருக்கு transmit பண்ணிவிட அவர்களால் முடியும். ஸமீப காலத்தில் ராமக்ருஷ்ண பரமஹம்சர் அப்படித்தான் விவேகாநந்தருக்குப் பண்ணினார் என்கிறார்கள்.
மநுஷ்யர்களுக்குத் தங்களுடைய மநுஷ்ய சக்தியைக் கொண்டே தர்மமாக வாழமுடியும், திவ்யாநுபவங்களும் ப்ரஹ்மஞானமுங்கூடப் பெறமுடியும் என்று உத்ஸாஹப்படுத்துவது அவதாரங்களின் கடமைகளில் ஒன்றாகிறது. அதனால் திவ்ய சக்தியை முடிந்தமட்டும் குறைத்துக்கொண்டு மநுஷ்ய சக்தியாலேயேதான் அவர்களும் கார்யங்களைச் செய்வார்கள். அவச்யம் நேரும்போது மாத்ரமே திவ்ய சக்தியையும் காட்டிச் செய்வார்கள். அப்படித்தான், முடிந்த மட்டும் மநுஷ்யர்மாதிரியே செய்துகொண்டிருந்த பதஞ்ஜலி ஆயிரம் பேரில் ஒவ்வொருத்தருக்கும் கவனம் கொடுத்துப் பாடம் சொல்ல நினைத்தபோது ஆதிசேஷரூபம் எடுத்துக்கொண்டார். ‘இவர்களுக்கு பூர்ண வித்வத் ஸித்திக்கக் கடவது’ என்று க்ஷண மாதரத்தில் பாடத்தை முடித்துவிடாமல் அப்போதும் மநுஷ்ய ரீதியில்தான் கேள்வி கேட்டு பதில் சொல்லி நடத்தினார். இப்போதுதான் அதற்கும் மேல் படிக்குப் போய் மேலும் திவ்ய சக்தியைக் காட்ட அவசியம் நேர்ந்ததால் அப்படிச் செய்யலாமென்று நினைத்தார்.
பதஞ்ஜலி கௌடரைப் பார்த்து, “எனக்குத் தெரிந்ததெல்லாம் உனக்குத் தெரியட்டும்” என்று பூர்ணாநுக்ரஹ செய்தார்.
உடனேயே மந்த புத்திக்காரருக்கு வ்யாகரணத்தில் பரிபூர்ண ஞானமுண்டாகிவிட்டது! மஹாபாஷ்யம் மனப்பாடமாகிவிட்டது!
ஆனால் ஒரே ஸந்தோஷமாகப் பட்டுவிட முடியாமல் ஒரு கஷ்டமும் கூடவே ஏற்பட்டது.
உத்தரவில்லாமல் வெளியே போகிறவர் ப்ரம்மரக்ஷஸாகி விடுவார் என்று சாப ரூபத்தில் பதஞ்ஜலி ஆஜ்ஞை செய்திருந்தாரல்லவா? தெய்விக புருஷர்களின் சொல் பலிக்காமல் போகவே போகாது. அவர்களுமேகூட இப்படியொன்று சொன்னபிறகு அதை வாபஸ் வாங்கிக்கொள்ள முடியாது. அதற்குப் பரிகாரமாக, அதை நிவ்ருத்தி செய்வதாக சாப விமோசனம் என்று ஒரு நிபந்தனை விதித்துத்தான் அந்தக் கண்டிஷனுக்கு உட்பட்டே தாங்கள் சொன்னதை மாற்ற முடியும்.
அந்த ரீதியில்தான் இப்போது நடந்தாக வேண்டுமென்று பதஞ்ஜலிக்குத் தெரிந்தது. கௌடர்ப்ரம்ம ரக்ஷஸாகத்தான் வேண்டும், ஆனால் அது தீர்வதற்கு விமோசனம் சொல்வோம் என்று நினைத்தார்.
என்ன விமோசனமென்றால், ப்ரம்மரக்ஷஸ் வேத அத்யயனம் செய்தவர்களைத்தானே கேள்வி கேட்டு, பதில் சொல்லாவிட்டால் அடித்துத் தின்னும்? அப்படி இந்த கௌடர் ப்ரம்மரக்ஷஸான பிறகு கேள்வி கேட்கும்போது வ்யாகரண ஸம்பந்தமாக ஒன்று கேட்க வேண்டும். அதற்கு ஒருத்தர் பதில் சொல்லிவிட்டால் அவரே மஹாபாஷ்ய உபதேசம் பூர்த்தியாகப் பெறுவதற்கு யோக்யதை வாய்ந்தவர். அவருக்கு அப்போது இவர் அநுக்ரஹ சக்தியால் கற்றுக்கொண்ட மஹாபாஷ்யம் முழுவதையும் மநுஷ்ய ரீதியில் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி மஹா பாஷ்யம் வருங்காலத்தில் ப்ரசாரமாகும்படியாகத் தகுந்த வார்ஸிடம் (வாரிசிடம்) இவர் அதை ஒப்படைத்தாரோ இல்லையோ, இவருக்கு ப்ரம்மரக்ஷஸ் ரூபம் போய்ப் பழையபடி ஆகிவிடுவார்.
இப்படி பதஞ்ஜலி தீர்மானம் பண்ணி, இவர் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றும் சொல்லிக் கொடுத்தார்.
இலக்கண ஸம்பந்தமான அதைக் கொஞ்சம் புரிய வைக்கப் பார்க்கிறேன்: ஸம்ஸ்க்ருதத்தில் ‘ப்ரத்யயம்’ என்று ஒன்று உண்டு. ஒரு சொல்லோடு அதன் முடிவில் ‘விகுதி’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, அந்த விகுதி என்னும் suffix – குத்தான் ‘ப்ரத்யயம்’ என்று பேர். (‘விகுதி’ என்பதும் ஸம்ஸ்க்ருத ‘விக்ருதி’ என்பதிலிருந்து வந்ததுதான்.) இந்த ப்ரத்யயத்திலேயே பல தினுஸு உண்டு – ‘தத்திதம்’, ‘க்ருத்’, ‘ஸுப்’, ‘திங்’ என்றெல்லாம். நம் கதையில் விஷயமாவது ‘நிஷ்டா’ என்ற ப்ரத்யயம். மூலச் சொல்லான பகுதி (‘ப்ரகிருதி’) என்பது ஒரு வினைச் சொல்லின் தாதுவாக இருக்க வேண்டும். அதோடு நிஷ்டா ப்ரத்யயத்தைச் சேர்த்தால் அந்த வினைச்சொல் செயப்படு பொருளாகிவிடும். உதாரணமாக ‘புஜ்’ என்பது க்ரியா பத (வினைச்சொல்லின்) தாது. சாப்பிடுவதை அது குறிக்கும். ‘புஜித்தான்’, ‘போஜனம்’ என்பதெல்லாம் ‘புஜ்’ஜின் அடியாக வந்தவை தான். இந்த ‘புஜ்’ தாதுவோட நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் ‘புக்தம்’ என்றாகும். ‘புக்தம்’ என்றால் ‘சாப்பிடப்பட்டது’. இதேமாதிரிதான் ‘ரக்தம்’ (சிவப்பாக்கப்ப்பட்டது), ‘ஸிக்தம்’ (நனைக்கப்பட்டது) ஆகிய வார்த்தைகளும் உண்டாவது. இதிலிருந்து நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் மூலச்சொல்லின் முடிவு ‘க்த’ என்று மாறும் ன்று தெரிகிறதல்லவா? ஆனால் இதற்கு ஒரு விலக்கு உண்டு. அங்கே ‘க்த’ என்று ஆகாமல் ‘க்வ’ என்றாகும். ‘பச்’ (சமையல் பண்ணு) என்பதுதான் விதிவிலக்கான அந்த தாது. அது மட்டும் நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்தால் ‘பக்தம்’ என்று ஆகாமல் ‘பக்வம்’ என்றாகும். ‘சமைக்கப்பட்டது என்று அர்த்தம். ‘பக்குவம்’ என்று தமிழில் நாம் சொல்வது அதுதான். கெட்டியாக, ஜீரணிக்க முடியாமலிருக்கிற அரிசி, கறிகாய் முதலியவை ‘பக்வ’மாகும் போது ம்ருதுவாவதுபோல ஒருவர் மனஸின் வறட்டுத்தனம் போய் நல்ல கனிவாக ஆகும்போதுதான் ‘பக்குவமானவர்’ என்பது.
‘பச்’ தாதுவோடு சேரும்போது மட்டும் நிஷ்டா ப்ரத்யயம் ‘க்த’ என்றாகாமல் ‘க்வ’ என்றாவதைத் தெரிவிப்பதாகப் பாணினியின் வ்யாகரண ஸூத்ரங்களில் ஒரு தனி ஸூத்ரமே இருக்கிறது. “பசோ வ:” என்பதாக, ‘க்த’வில் வரும் ‘த’வுக்குப் பதில் இங்கே மட்டும் ‘வ’.
இந்த விதிவிலக்கு விஷயம் ரொம்பப் பேருக்குத் தெரியாது.
அதனால் பதஞ்ஜலி, கௌடர் ப்ரம்மரக்ஷஸான பின் இதைப்பற்றியே கேள்வி கேட்கவேண்டும் என்று நினைத்து, அதன் வழியாகவே சாப விமோசனத்தை அமைத்தார்.
கௌடரிடம், “நீ சொல்லிக் கொள்ளாமல் வெளியேறியதால் ப்ரம்மரக்ஷஸாகப் போகத்தான் வேண்டும். ஆனாலும் அதற்கு நிவ்ருத்தி சொல்கிறேன். உன்னிடம் அகப்படுபவரிடம், “பச்’ தாதுவுக்கு நிஷ்டாவில் ரூபம் என்ன?” என்று கேள். அது தெரிந்து, மற்ற வார்த்தைகளைப் போலப் ‘பக்தம்’ என்று சொல்லாமல் ‘பக்வம்’ என்று ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு மஹாபாஷ்யம் முழுதையும் கற்றுக்கொடு. பாத்ரமறிந்து வித்யையைக் கொடுத்த புண்ய விசேஷத்தால் சாபத்திற்கு விமோசனம் ஏற்பட்டுவிடும். ரக்ஷஸ் ரூபம் போய் நிஜ ரூபம் பெற்றுவிடுவாய். ஸரியாகப் பதில் சொல்பவர் வருகிறவரையில் உன்னிடம் மாட்டிக்கொண்டு தப்பாகப் பதில் சொல்கிறவர்களேயே ப்ரம்ம ராக்ஷஸ ரூபத்தில் உனக்கு ஆஹாரமாக்கிக் கொள்” என்று சொன்னார்.