ஸ்ரீசைலம்; “அர்ஜுன” க்ஷேத்ரங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவருக்கு மூலமான பரமசிவனுக்கும் மல்லிகை ஸம்பந்தம் அதிம் உண்டு. அவனே வெள்ளை வெளேரென்று மல்லிகைபோல இருப்பவன்தான். மல்லிகார்ஜுனன் என்றே பெயர் வைத்துக்கொண்டிருக்கிறான். அந்தப் பெயரில் அவன் இருக்கிற க்ஷேத்ரம் ஸ்ரீசைலம். அந்த ஸ்ரீசைலத்திடம் ஆசார்யாளுக்குத் தனியானதொரு அபிமானம். ‘சிவாநந்த லஹரி’ யில் அவர் ஸ்ரீசைலத்தை விசேஷமாகக் குறிப்பிட்டு ஸ்துதித்திருக்கிறார். நூறு ச்லோகங்கள் கொண்ட அந்த ஸ்துதியில் நடுமையாக உள்ள 50, 51-வது ச்லோகங்களில் ஸ்ரீசைல மல்லிகார்ஜுனரைச் சொல்லியிருக்கிறார். பக்தி ஸ்தோத்ரமாகச் செய்த ‘சிவாநந்த லஹரி’யில் மஹா சிவ க்ஷேத்ரமான ஸ்ரீசைலத்தைச் சொல்லியிருப்பது ஓரளவு எதிர்பார்க்கக்கூடியதே. இதைவிட விசேஷம் — ஒரே யோகமாக, ஞானமாக அவர் பண்ணியுள்ள ‘யோக தாராவளி’ என்ற ப்ரகரணத்தில்கூட, ஸ்ரீசைலத்தைக் குறிப்பிட்டிருப்பதுதான். “எப்போது என் உடம்பைச் சுற்றிக்கொண்டு கொடிகள் படர்ந்துகொண்டும், காதிலேயே பக்ஷிகள் கூடு கட்டிக்கொண்டும் இருக்கும்படி தன்னை மறந்து ஸமாதியில் முழுகி உட்கார்ந்துகொண்டிருப்பேன்?” என்று அதிலே கேட்கும்போது, “இந்த மாதிரி ஸ்ரீசைல மலையுச்சில் குஹையில் எப்போது உட்கார்ந்திருப்பேன்?” என்று கேட்கிறார்! ” ஸ்ரீசைல ச்ருங்க குஹரேஷு“என்கிறார்.1

மல்லிகையாக ஈச்வரனே இருக்கிறான் — ஸ்ரீசைலத்தில் அந்த மல்லிகைக் கொடி அர்ஜுன மரத்தைச் சுற்றிக் கொண்டு படர்ந்திருக்கிறது. அதுதான் மல்லிகார்ஜுனம். அர்ஜுனம் என்பது மருத மரம். அதை ஸ்தல வ்ருக்ஷமாகக் கொண்ட மூன்று க்ஷேத்ரங்கள் இருக்கின்றன. வடக்கில் ஆந்த்ர தேசத்தில் இருப்பதுதான் ஸ்ரீசைலம், அது மல்லிகாஜுர்னம், பாதாள கங்கை என்கிற க்ருஷ்ணா தீரத்தை ஒட்டியிருப்பது அது. மத்தியில் இருப்பது திருவிடைமருதூர். மத்யார்ஜுனம், இடை மருதூர் என்றே பெயர் பெற்றது. காவேரிக் கரையில் சோழ மண்டலத்திலிருப்பது. தெற்கே இருப்பது திருப்புடைமருதூர் என்னும் புடார்ஜுனம். தென்பாண்டி நாட்டில், தாம்ரபர்ணிக் கரையில் அது இருக்கிறது.

மரத்தில் கொடி படர்கிறது என்றால் என்ன தாத்பர்யம்? ‘ஸ்தாணு’ என்று பட்ட சட்டையாக அசையாமலிருக்கிற சிவத்தை ஆச்ரயித்தே சக்தியான அம்பிகை படர்ந்து ஸ்ருஷ்டியை உண்டாக்குகிறாள் என்று தாத்பர்யம். நம்மிலே புத்தி சக்தி என்ற மேதாவாக இருப்பவள் அவள் தான். அந்த புத்தி சக்தி சுத்த ஆத்ம தத்வமான சிவத்தைச் சுற்றிப் படரவேண்டும். அதுதான் மல்லிகைக் கொடி அர்ஜுன வ்ருக்ஷத்தைச் சுற்றிப் படர்வது. அர்ஜுனம் என்றால் வெளுப்பு. பரம நிர்மலமாயிருக்கும் சிவ தத்வம் அப்படியிருக்கிறது.

அர்ஜுனமரம் — சிவம், மல்லிகைக் கொடி — அம்பாள் என்பது ஒரு விதத்தில். மல்லிகைக் கொடியில் புஷ்பித்த மல்லிகைப் புஷ்பமே சிவம், அந்தப் புஷ்பத்தை மொய்த்து மொய்த்து, அதன் தேனைக் குடித்து அதிலேயே மயங்கி லயித்துக் கிடக்கிற வண்டு அம்பாள் என்று இன்னொரு விதத்தில் சொல்வது. வண்டுக்குப் பேர் ப்ரமரம். ஸ்ரீசைலத்தில் அம்பாளுக்கு ப்ரமராம்பா என்றே பேர். மல்லிகார்ஜுனரை, ஈச்வர மல்லிகையை மொய்த்துக்கொண்டிருக்கும் ப்ரமர அம்பா!

இதைப் பற்றி நீளமான ச்லேஷாலங்காரமாக (சிலேடை அணியாக) ஆசார்யாள் சிவாநந்த லஹரியில் சொல்லியிருக்கிறார் 2:

ஸந்த்யாரம்ப-விஜ்ரும்பிதம் ச்ருதி-சிரஸ்தாநாந்தராதிஷ்டிதம்

ஸப்ரேம-ப்ரமராபிராம-மஸக்ருத் ஸத்வாஸநா சோபிதம் |

போகீந்த்ராபரணம் ஸமஸ்த ஸுமந : பூஜ்யம் குணாவிஷ்க்ருதம்

ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுந மஹாலிங்கம் சிவாலிங்கிதம் ||

ஒவ்வொரு phrase -கும் (சொற்றொடருக்கும்) இரண்டு அர்த்தம் வைத்துப் பண்ணியிருக்கிறார். ஒன்று மல்லிகையைக் குறிக்கும், மற்றது ஈச்வரனைக் குறிக்கும்.

“ஸந்த்யாரம்ப விஜ்ரும்பிதம்”: மல்லிகையைக் குறிக்கும்போது, ஸந்தி வேளை ஆரம்பிக்கும்போது மலர்வது என்று அர்த்தம். ஈச்வரனைக் குறிக்கும்போது, ஸந்தி ஆரம்பத்தில் நாட்யம் பண்ணுவதால் தம்மை நன்றாக வெளிப்படுத்திக்கொள்பவர் என்று அர்த்தம்.

“ச்ருதி-சிரஸ்தாநாந்தராதிஷ்டிதம்” — மல்லிகையானால், ‘காதிலும் தலையிலும் சூட்டிக்கொள்ளப்படுவது’. ஈச்வரனானால், ‘ச்ருதியான வேதத்தின் சிரஸான உபநிஷத்தில் உறைபவர்’.

“ஸப்ரேம ப்ரமராபிராமம்” — மல்லிகையானால், ‘ஆசையோடு வரும் வண்டினால் அழகுறுவது’. ஈச்வரனானால், ‘ப்ரமை கொண்ட ப்ரமராம்பிகையினால் சோபிக்கிறவர்.

“அஸக்ருத் ஸத்வாஸநா சோபிதம்” — மல்லிகையானால், ‘எப்போதும் ஸுகந்தத்தோடு விளங்குவது’. ஈச்வரனானால், ‘எப்போதும் ஸாதுக்களின் புண்ய வாஸனையில் சோபை பெற்றவர்’. ஸாதுக்களின் பக்தி ‘ஸெண்ட்’ போடுவது போல் ஸ்வாமிக்கு வாஸனையாக இருக்கிறது!

“போகீந்த்ராபரணம்” — மல்லிகையானால், ‘நன்றாக போகங்களை அநுபவிப்பவர்கள் அலங்காரமாகச் சூட்டிக் கொள்வது’. (அல்லது) மல்லிகை வாஸனைக்காக பாம்புகள் வந்து அதைச் சூழ்ந்துகொள்வதாகவும் சொல்லலாம். ஈச்வரனாக வைத்து அர்த்தம் பண்ணும்போது, ‘சிறந்த பாம்புகளை ஆபரணமாக உடையவர்’. ‘போகி’ என்றால் பாம்பு என்றும் அர்த்தம்.

“ஸமஸ்த ஸுமந: பூஜ்யம்”-மல்லிகையானால், ‘எல்லாப் புஷ்பங்களுக்குள்ளும் உயர்வானதாகப் போற்றப்படுவது’. ஈச்வரனானால், ‘ஸகல தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர்’. ‘ஸுமன’ ஸுக்கு ஒரு அர்த்தம் ‘புஷ்பம்’, இன்னொரு அர்த்தம் ‘தேவர்’.

“குணாவிஷ்க்ருதம்” — மல்லிகையானால் ‘கயிற்றால், நாரினால், நன்றாக எடுத்துக் காட்டப்படுவது.’ ‘குணம்’ என்றால் கயிறு. உதிரி உதிரியாயிருக்கும் புஷ்பத்தை நாரால் தொடுத்தால்தானே அது ஒன்று சேர்ந்து அழகாக விளங்குகிறது? அதனால் “குணாவிஷ்க்ருதம்”. ஈச்வரனாக வைத்துச் சொல்லும்போது, உத்தம குணங்களால் சிறப்புற்று விளங்குபவர் என்று அர்த்தம்.

‘இப்படிப்பட்டவராக, சிவா என்னும் அம்பாளால் ஆலிங்கனம் செய்யப்பட்டு விளங்குகிற ஸ்ரீசைல மல்லிகார்ஜுனரை வண்ங்குகிறேன்’ என்று முடிக்கிறார் :

ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹாலிங்கம் சிவாலிங்கிதம்

மல்லிகைப் புஷ்பம், மாம்பழம் இரண்டும் வஸந்த வைசாகத்தில் விசேஷமாக உண்டாவது. ஆசார்யாள் சுத்த ஸத்வ மல்லிகையாகவும், அத்வைத ரஸ பரிதமான ஞான மாம்பழமாகவும் இருந்தவர். ‘ஞானப் பழம்’ என்கிறார்களே அதுவாக!


1 ச்லோகத்தின் முழு வடிவம் :

ஸித்திம் ததாவித மநோவிலயாம் ஸமாதௌ
ஶ்ரீசைல ச்ருங்க குஹரேஷு கதோபலப்ஸ்யே |
காத்ரம் யதா மம லதா: பரிவேஷ்டயந்தி
கர்ணே யதா விரசயந்தி ககாச்ச நீடாந் ||
(யோகதாராவலீ — 28)

2 50–வது ச்லோகம்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பக்தியும் ஹ்ருதயமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஸ்ரீ சங்கரரின் கால நிர்ணயம்   அவதார தின, ஸித்தி தின ஸ்லோகங்களில் கி.மு. 6-5 நூற்றாண்டுகள்
Next