அடுத்த பாயிண்டுக்கு வருவோம். திங்நாகருடைய வைபாஸிகம், அஸங்கரின் ஸெளத்ராந்திகம், நாகார்ஜுனரின் சூன்யவாதம் ஆகியவற்றை ஆசார்யாள் கண்டனம் பண்ணியிருப்பதால், கி.பி. இரண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் வந்த பௌத்த ஸித்தாந்திகளுக்குப் பிற்பட்ட காலத்தவர்தான் ஆசார்யாள் என்ற ஆர்க்யுமென்டைப் பார்ப்போம்:
மேற்படி ஸித்தாந்தங்களை ஆசார்யாள் கண்டித்திருப்பது வாஸ்தவந்தான். ஆனால் அவற்றைச் சொன்ன திங்நாகர், அஸங்கர், நாகார்ஜுனர் முதலிய ஸித்தாந்திகளில் எவர் பெயரையுமே ஆசார்யாள் குறிப்பிடவில்லை. இந்த ஸித்தாந்தங்களும் ஸரி, இன்னும் நம் தேசத்திலுள்ள அநேக ஸித்தாந்தங்களும் ஸரி, இப்போது அவை யாரார் பெயரில் ப்ரஸித்தமடைந்திருக்கின்றனவோ அவர்களாலேயேதான் தோற்றுவிக்கப்படவில்லை. அவர்களுக்கும் முந்தி எத்தனையோ காலமாக அந்த ஸித்தாந்தங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் நன்றாக ரூபம் பண்ணி, codify பண்ணி இல்லாமல் ஒரு மாதிரி vague-ஆக இருந்திருக்கும் அப்புறம் அவற்றை இப்போது நாம் தெரிந்துகொண்டுள்ள அந்த ப்ரஸித்தமான ஸித்தாந்திகளே நன்றாக ரூபம் பண்ணி, ஒரு கோட்பாடாக, சாஸ்த்ரமாக ஆக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அத்வைதமும் ஆசார்யாளுமே இப்படித்தானே? அநாதி காலமாக இருந்ததுவந்த அத்வைதத்தைத்தானே ஆசார்யாள் ஒரு கட்டுக்கோப்பான சாஸ்த்ரமாக்கிக் கொடுத்தார்? அவரே அதைத் தோற்றுவிக்கவில்லையே!